ஞாயிறு, 25 மார்ச், 2012

மம்தா பானர்ஜியின் ஜனநாயக விரோத போக்கையும், இறுமாப்பையும், இளக்காரத்தையும்

பார்லிமென்ட் இதுவரை, இப்படிப்பட்ட கேவலத்தைச் சந்தித்ததில்லை. இந்திய ஜனநாயக வரலாற்றில், இதுவரை எந்த அமைச்சரும், தன் சொந்தக் கட்சித் தலைமையால், பார்மென்டில் இப்படிக் கேவலப்படுத்தப் பட்டதில்லை. அதுவும், பட்ஜெட் தாக்கல் செய்த உடனேயே.
இது, பார்லிமென்டிற்கே நேர்ந்த அவமானம். அரசுக்கு மட்டுமல்ல; எந்தப் பிரதமரும் இதுவரை சந்தித்திராத அவமானம் இது. கூட்டணி பேரங்களையும், நிர்பந்தங்களையும் கூட்டணி தர்மம் என்று வர்ணித்து, தன் இயலாமையை அவமானங்களின் மீது, கவுரவப் போர்வையாகப் போர்த்தி வந்துள்ள மன்மோகன் சிங்குக்கு, இதுவும் வேண்டும்,
இன்னமும் வேண்டும்.சொந்தக் கட்சி அமைச்சரின் கவுரவத்தின் மீது, நாட்டு மக்கள் முன்னிலையில் சாணம் வீசிய திரிணமுல் கட்சித் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மமதை பானர்ஜி, மன்னிக்கவும்... மம்தா பானர்ஜியின் ஜனநாயக விரோத போக்கையும், நாகரிகத்தையும், இறுமாப்பையும், இளக்காரத்தையும், பொறுப்பின்மையையும், எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் சாட வேண்டுமோ, அப்படிச் சாடாத அரசியல்வாதிகளும், ஊடக விமர்சகர்களும், மன்மோகன் சிங் அரசு இனி எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்.
அரசு விழப் போகிறதென்றால், அதைத் தாங்கிப் பிடிக்கப் போகும் பிற கட்சிகள் எவை என்பது பற்றித் தான் விவாதிக்கின்றனரே ஒழிய, மம்தா பானர்ஜி ஒரு ஜனநாயக நாட்டின் அரசியல்வாதி என்ற தகுதியை இழக்கிறார் என்பதை, யாரும் கடுமையாகவோ, வருத்தத்துடனோ குறிப்பிடவில்லை என்பது, நம் ஜனநாயகத்திற்கு இழுக்கு.அதுபற்றி அரசியல் உலகம், சற்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், மனச்சாட்சியுள்ள வாக்காளர்கள் அவமானப்பட்டுத் தலைகுனிய வேண்டியிருக்கிறதே.

தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மீது, மம்தாவுக்கு எவ்வளவு கோபம், வருத்தம் இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் வழி இது அல்ல; நேரம் இதுவல்ல; களமும் இதுவல்ல. நாகரிகம், அநாகரிகம் எதுவும் அறியாதவர் மம்தா பானர்ஜி என்று சொல்வதற்கில்லை; அறிந்தவர் தான். ஆனால், இறுமாப்பு, தன்முனைப்பு, பிறர் மீதான விருப்பு வெறுப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையின்மை, தானே எல்லாம் என்ற மமதை, நினைத்ததைச் செய்வேன் என்று அடம்... எல்லாமே அவரிடம் அதிகமாக, தவறு, அதீதமாக இருக்கிறது. இது ஒரு கோணம். ஆனால், இது நடுநிலையான பார்வை அல்ல. ஒளிந்து கொண்டு ஆட்சி நடத்தும் சோனியாவை தவிர்த்து விட்ட பார்வை இது.

ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த தினேஷ் திரிவேதி, திரிணமுல் கட்சியைச் சேர்ந்தவர். தான் முன்பு ரயில்வே அமைச்சராக இருந்ததை, இன்னமும் மறந்துவிடாத மம்தா, தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சருக்கு எந்த சுதந்திரமும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.உண்பதற்கும், உடுப்பதற்கும் ஏதாவது சுதந்திரம் இருக்கலாமோ என்னவோ? ரயில்வே பட்ஜெட் இப்படித் தான் இருக்க வேண்டுமென்று மம்தா விரும்பி இருந்தால், முன்னதாகவே அவரை அழைத்துத் தன் கட்சிக்காரர் என்ற முறையில், தன் வீட்டில், தன் கட்சி அலுவலகத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லியிருந்தால், அது நாகரிகம்; சாதுர்யம்; குறைந்தபட்சம் மனிதத்தன்மை.
அப்படிச் செய்யாமல், பட்ஜெட்டை தாக்கல் செய்தவுடன் மம்தா, இப்படி ஒரு இழிவு நிலையை எடுத்திருப்பது, அவர் இன்னமும், "பினாமி' ரயில்வே அமைச்சராக இருக்கவே விரும்புகிறார் என்பதை, பகிரங்கப்படுத்தி இருக்கிறது .

பெண் முதல்வர்கள், அதிரடி நடவடிக்கைகளை எடுப்பர்; யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்; அவர்களுக்கு இரண்டாம் இடத் தலைவர்கள் என்று எவரும் இல்லை; ஆலோசகர்கள் என்று எவரும் இருக்க முடியாது என்று, பொதுவான அபிப்பிராயத்தை மெய்ப்பித்திருக்கிறார் மம்தா பானர்ஜி என்ற பார்வையும் பழுதுடையதே. இன்னொரு உயர் அதிகாரப் பெண்மணியை, கணக்கில் எடுத்துக் கொள்ளாததால்.தன் எண்ணங்களின் படி பட்ஜெட் இல்லை என்றால், பட்ஜெட் விவாதத்திற்கு வரும் போது திருத்தங்கள், மாற்றங்கள், நிராகரிப்புகளை நுழைக்க, எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.தன் கட்சிக்காரர்களிடம் பேசலாம், தோழமைக் கட்சிக்காரர்களிடம் பேசலாம், எதிர்க்கட்சிகளைத் தூண்டி விடலாம். திரிவேதியை அழைத்து விவாதத்தின் போது, சில மாற்றங்களுக்கு இசைவு கொடுக்கச் செய்யலாம். பிரதமரிடம் தனியாகப் பேசி, காங்கிரஸ் பார்லிமென்ட் உறுப்பினர்கள் மூலமே திருத்தங்களைக் கொண்டு வரச் செய்யலாம். இவை எல்லாம் ஜனநாயக வழிமுறைகள்.

ரயில்வே அமைச்சரை, பார்லிமென்ட் நடைபெறும் போதே மாற்றுவது எப்படி சாத்தியம்? பார்லிமென்டை ஒத்தி வைத்துவிட்டு, புதிய அமைச்சரை நியமித்து விட்டு, பார்லிமென்டை தொடர்வது என்பது மரபுக்கு உகந்ததில்லையே.மம்தாவுக்கு உதகந்தது என்பதனால், மரபுகளை மீறலாமா? அவர் ஏற்கனவே மரபுகளை மீறியவர். அப்போதே அவரைக் கண்டித்து வழிக்குக் கொண்டு வராத மன்மோகன் சிங், இப்போது பெரிதாக என்ன செய்து விடப் போகிறார்?பிற கட்சிக்காரர்கள் தொழிலதிபர்களைப் பொறுத்தவரை, மம்தா பானர்ஜி அநாகரிகமாகவும், அவசரக் கோலத்திலும் நடந்து கொண்டார் என்றாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே, இப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும், பட்ஜெட் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கும் முன்னதாக, ரயில்வே அமைச்சர் திரிவேதி, கட்சித் தலைவியைச் சந்தித்து அவரது ஆலோசனைகளை கேட்டிருக்க மாட்டாரா என்ற கேள்விகள், இந்தக் கட்டத்தில் முக்கியமானவை.

முதல்வர்களை, அதுவும் பெண் முதல்வர்களை மீறிச் செயல்படும் அதிகாரிகளும், அமைச்சர்களும் நாட்டில் எங்கும் இல்லை. இந்தப் பிரச்னை பெயரில் மமதையையும், மனதில் மமதையையும் கொண்டுள்ள இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்டது. அவர்களுக்கு அது புரிகிறது. மணிக்கணக்காக விவாதம் நடத்துபவர்களுக்கு ஏன் புரியவில்லை? பெரிய பெண்மணியிடம் மூளை உட்பட எல்லாவற்றையும் அடகு வைத்தவர்களுக்கு, எதுவும் புரியாமல் போவது இயல்பு தான்.காங்கிரஸ் லேசுப்பட்ட கட்சி அல்ல. அங்கும் சோனியாவை மிஞ்சிய சூனியக்காரி யாருமில்லை. மம்தாவின் முரட்டுத்தனத்திற்கு பின்னே, ஒரு வெகுளித்தனமும் உண்டு. உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் வெற்றி பெற்றதும், அவரது ஆதரவும், பிறரது ஆதரவும் இருந்தால் அடிக்கடி தொல்லை கொடுக்கும் மம்தாவைக் கூட்டணியிலிருந்து விலக்கி விடலாம் என்ற நினைப்பில், காங்கிரஸ் செயல்பட்டிருக்கிறது.

அதற்காகவே, கட்சித் தலைவியின் அறிவுரைக்கு மாறான பட்ஜெட்டை திரிவேதி தயாரிக்க, காங்கிரஸ் தூண்டியிருக்கிறது. இதனால், எது நடந்தாலும் அவர் உரிய முறையில் கவனிக்கப்படுவார் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. விஷயம் தெரிய வந்ததும், மம்தா கொதித்துப் போய் விட்டார்.எதிராளி மீது சாணத்தை அள்ளி வீசும் போது, தன் மீதும் கொஞ்சம் பட்டாலும் பரவாயில்லை என, நடந்து கொண்டிருக்கிறார். திரிணமுல் கட்சியிலிருந்து விலக்கப்படும் திரிவேதி, காங்கிரசில் அடைக்கலம் புகும்போதும், முலாயம் சிங் யாதவ் மத்திய அமைச்சரவையில் சேரும் போதும், மம்தா விலகும் போதும், இவை எல்லாமே ஏதாவது ஒரு வரிசையில் அடுத்தடுத்து நடக்கும் போது, காங்கிரசின் சதி அம்பலமாகிவிடும்.

மன்மோகன் சிங், கூட்டணி தர்மம் நிர்பந்தங்களுக்குப் பணிந்து போவது. சோனியாவின் கூட்டணி தர்மம் பணிய வைப்பது, ஏதாவது ஒரு முறையில். அரசை நடத்துவதில் மன்மோகன் சிங், தர்ம சங்கடத்தைத் தவிர்த்தாலும், காங்கிரஸ் கட்சித் தலைவியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவியுமான சோனியா திட்டம் வகுத்திருந்ததை, எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட மம்தா பானர்ஜி, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை காத்திருந்து, சரியான கட்டத்தில் சோனியாவையும், மன்மோகன் சிங்கையும், "செக்மேட்' செய்திருக்கிறார்.இந்த அரசியல் சதிகார சதுரங்க ஆட்டத்தில் விழுவது, ராணி என்றால், எந்த ராணி என்பதைத் தெரிந்து கொள்ள, மக்கள் அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், மன்மோகன் சிங் மட்டும், அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம்.

அவரது நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அவர் மம்தாவால் வெளியேறினால் என்ன? வேறு யாருக்காகவாவது வெளியேறினால் என்ன? காத்திருக்கிறார் இளவரசர். வழிவிடத் தயாராக இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சிக்காரர்களும், அவர்களது ஒட்டுப்புல்களும்.இ-மெயில்: hindunatarajan@ hotmail.com

ஆர்.நடராஜன் :கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக