ஞாயிறு, 25 மார்ச், 2012

இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்கள்; பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம்!

எல்லாம் விளம்பர இன்பம்!
கலைஞர் அறிக்கை;
விளம்பர இன்பத்துக்காக இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்களை முதல்வர் வெளியிடுகிறார் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேள்வி :  தமிழக அரசின் 2012 2013ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 26ந்தேதி வரவிருப்பதாக ஏடுகளில் எல்லாம் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பிறகு, இன்றைய தினம் முதலமைச்சர் சில அறிவிப்புகளைச் செய்திருப்பது முறைதானா?
பதில்:  ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சியில் சட்டமன்ற மரபுகள், நீதிமன்ற மரபுகள் போன்ற உயர்ந்த மரபுகளுக்கு எந்த அளவிற்கு மரியாதை தரப்படுகிறது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய வரிகளை தமிழக அரசின் சார்பில் விதித்து அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதைப்போலவேதான் 26ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்; இன்றையதினம் முதலமைச்சர் காவல் துறையை அதிநவீனமயமாக்க 34 கோடி ரூபாய்க்கு முன்னோடி திட்டங்களையும், ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்கள் 4,050 பேர் பயன்பெறத் தக்க வகையில் 5.34 கோடி ரூபாய்க்கு 53 விடுதிகளைத் தொடங்கவும், 187 புதிய பணி இடங்களைத் தோற்றுவிக்கவும், போடியில் 94 கோடி ரூபாயில் புதியதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்கவும் முதலமைச்சர் உத்தர விட்டதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. நிதி நிலை அறிக்கை என்றாலே அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கும் அறிக்கைதான். ஆனால் நிதிநிலை அறிக்கை 26ஆம் தேதி  படிக்கப்படும் என்ற செய்தியை அறிவித்து விட்டு, இவ்வாறு அரசின் அறிவிப்புகளை யெல்லாம் முதலமைச்சர் செய்வது முறை தானா? ஒருவேளை நிதி நிலை அறிக்கை யிலே இந்த அறிவிப்புகளையெல்லாம் சேர்த்தால் அதனை நிதியமைச்சர்தான் படித்தறிவிக்க வேண்டும்;

முதலமைச்சர் அம்மா உத்தரவு என்று ஏடுகளிலே வராது என்பதால் இவ்வாறு அறிவிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

சட்டமன்ற மரபுகளை இவ்வாறு மதிக்காததைப் போலத்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தர வேண்டுமென்று தீர்ப்பளித்து பல நாட்கள் ஆகியும் அதைப்பற்றி தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
கேள்வி : நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் தவிப்பதாகவும்,   நல வாரியம் செயல்படுவதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறதே?
பதில் :  இது பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியிலேயே, “கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய முதல்வர் கருணாநிதியை தலைவராகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் புதுப்பிக்கப்பட்டது. சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கடந்த ஆகஸ்டில், தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில், சமூக நலத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தபோது, அந்தத் துறையின் அமைச்சர், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மாற்றி அமைக்கப்பட்டு, விரைவில் செயல்படத் தொடங்கும், நடப்பு நிதியாண்டிற்காக வாரியத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். ஆனால் இது நாள் வரை வாரியம் மாற்றி அமைக்கப்படாததால், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி செலவாகாமல் உள்ளது. மாற்றுத் திறனாளி கள் நல வாரியக் கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் பிப். 2011இல் நடந்த முதல் கூட்டத் திற்குப் பிறகு, இதுவரை கூட்டம் நடக்கவில்லை” என்றெல்லாம் செய்தி வந்துள்ளது. என்னைச் சந்தித்த மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இதுபற்றி என்னிடம் கூறி வருத்தப்பட்டார்கள்.
கேள்வி : சத்துணவு மையங்களில் புதியதாக அலுவலர்கள் காலி இடங்களிலே நியமிக்கப்படுவார்கள் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தவாறு நியமிக்கப் பட்டுவிட்டார்களா?

கலைஞர் :  தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் சரா சரியாக 75க்கும் மேற்பட்ட மாணவர்கள், சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். ஒரு சத்துணவு மையத்தில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய பணி இடங்கள் உண்டு. அவர்கள் மூலமே, உணவு தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதியதாக பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை கூட்டத் தொடரில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையத்தில் 28 ஆயிரம் புதிய பணி இடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். பல மாதங்களாகியும், புதிய பணியிடம் நிரப்புவது தொடர்பாக அரசு சார்பில் இதுவரை, எந்தவித தகவலும் இல்லை.
கேள்வி :  தமிழக அரசின் 2012 2013ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை 26ஆம் தேதி வெளிவரவிருக்கின்ற நேரத்தில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதா?

கலைஞர் :  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை விவாதத்தின்போது, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு அமைப்பு, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாக தரம் உயர்த்துதல், கல்வி தகவல் மேலாண்மை முறை, பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தும், நமது குழந்தைகள் திட்டம் போன்றவைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த நான்குமே இன்னும் நிலுவையில் இருப்பதாக இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

2,682 முதுகலை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு இப்போதுதான் விண்ணப்பங்களே வழங்கப்பட்டு வருகின்றன. 5,790 பட்டதாரி ஆசிரியர்களை, 4,342 இடை நிலை ஆசிரியர்களை தேர்வு செய்யப் போகிறோம் என்றார்கள். அதற்கு முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். ஆனால் இதற்கும் இப்போதுதான் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த நிலையில் இந்த

ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளி வரவுள்ளது. தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப் பள்ளிகளில்,

ஆசிரியர் பணிகளுக்கு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்கள், பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலே தனியார் மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 754, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 17 என்று மொத்தம் 771 பள்ளிகள்

செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் படித்து, வெளியேறி வருகின்றனர். ஆனால் 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நடந்தது. அதில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இதுவரை முடிவுகளை வெளியிடாமல், அரசு நிறுத்தி வைத்துள்ளதாக நாளேடுகள் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு மே திங்களில் புதிய மாணவர்களுக் கான தேர்வுகள் நெருங்கி வருகின்றன. என்ன செய்யப் போகிறார்களோ? எங்கேயாவது இடைத் தேர்தல் நடைபெற்றால், அங்கே சென்று பணியாற்றவே அமைச்சர்களுக்கு நேரம் போதவில்லை என்கிறபோது தேர்வாவது? முடிவாவது? கடந்த ஆண்டு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்காக வாங்கப்பட்ட 560 மடிக் கணினிகள், பரணில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

2011 2012ஆம் ஆண்டு பட்ஜெட் மானியக் கோரிக்கையின் போது “இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள கோவில்களின் உபரி நிதியில்

இருந்து, கூடுதல், இணை, துணை மற்றும் உதவி ஆணையர்ள், அனைத்து நிலை செயல் அலுவலர்கள், களப் பணியாற்றும் சரக ஆய்வர்கள்

உள்ளிட்ட 873 அலுவலர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப் படும்” என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான செலவு 3.50 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் சண்முகநாதன். அவர் மாற்றப்பட்டு அடுத்து இந்தத் துறை அமைச்சராக வந்தவர் பரஞ்சோதி. அவரும் போய் இப்போது அந்தத் துறை அமைச்சர் ஆனந்தன். ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு செய்யப் பட்டாலும், டிசம்பர் 15ஆம் தேதிதான் 560 மடிக்கணினிகளை வாங்க முடிவு செய்யப்பட்டு,

வாங்கப்பட்டு, அவற்றை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக, தனியே அறிவுரைகள் வழங்கப்படும் என்றும், அதுவரை அனைத்தையும் அந்தந்த இணை ஆணையர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்றும் அறநிலையத் துறை கமிஷனர் சந்திரகுமார் கூறி, அந்த மடிக் கணினிகள் எல்லாம் அப்படியே தூசு படிந்து கிடக்கின்றன. அடுத்த பட்ஜெட்டும் வந்து விட்டது!
கேள்வி :  ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் எப்படி?

கலைஞர் :  பத்தாண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட்   25 லட்சம் வீடுகள்   2 கோடி பேருக்கு மனித வளப் பயிற்சி   15 லட்சம் கோடி ரூபாய் முதலீடுதானே அம்மையாரின் கனவு திட்டம்? கனவுதான்!

ஒரு நாள் பத்திரிகைச் செய்தி அவ்வளவுதான்!

இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்கள்; பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம்! எல்லாம் விளம்பர இன்பம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக