வெள்ளி, 9 மார்ச், 2012

கூடங்குளம் போராட்டத்தில் வெளிநாட்டினர் பங்கேற்க தடை

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில், வெளிநாட்டினர் பங்கேற்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், வரும் 11ம் தேதி, உதயகுமார் நடத்தும் போராட்டத்தில், ஜப்பானை சேர்ந்த பெண் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு உத்தரவு: கூடங்குளம் போராட்டத்தில் தொடர்புள்ளவர்களுடனோ அல்லது அவர்களது போராட்டம் மற்றும் நிகழ்ச்சிகளிலோ, இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை அலுவலகம் மூலம், மத்திய உள்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர், யாரெல்லாம் தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே அறிந்த பிறகே, "விசா' தர வேண்டும் என, வெளிநாட்டுப் பிரிவை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை மீறிய செயல்: மேலும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலா விசா குறித்த விவரங்களை பதிவு செய்து, அவர்களது பயணங்களை கண்காணிக்க, உள்துறையினர் ரகசிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக, எந்த ஒரு போராட்டம் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றால், அதற்கென தனியார் "கான்பரன்ஸ்' விசா தரப்படும். இவ்வகை விசாக்கள், அரசு சார்ந்த, பெரும் வணிகம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தரப்படுகின்றன. ஆனால், சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டினர், பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும், அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கெடுப்பதாக, மத்திய உள்துறைக்கு புகார்கள் வந்துள்ளதாக தெரிகிறது.

முறைகேடு உறுதி: இந்த அடிப்படையில் தான், ஜெர்மனை சேர்ந்த ஹெர்மானும் சிக்கி, வெளிநாட்டுக்கு மீண்டும் விரட்டப்பட்டார். இந்நிலையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக, வரும் 11ம் தேதி, கூடங்குளம் அருகிலுள்ள ராதாபுரத்தில் பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக, உதயக்குமார் அறிவித்திருந்தார். இதில், ஜப்பானை சேர்ந்த பெண் பங்கேற்று, புகுசிமா அணு உலை விபத்து குறித்த அவரது நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, மத்திய உள்துறையினர் விசாரணை நடத்தியதில், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஜப்பான் பெண்ணுக்கு விசா தர வில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே, வெளிநாட்டினர் பங்கேற்றால் அவர்களை பிடித்து, உடனடியாக சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடியோ மூலம் ஆய்வு: உதயக்குமாரின் பொதுக் கூட்டத்திற்கு, உள்ளூர் போலீசாரும் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், இடிந்தகரையில் நிகழ்ச்சி நடத்த, உதயக்குமார் திட்டமிட்டுள்ளார். இதிலும், வெளிநாட்டினர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால், உதயக்குமார் போராட்டத்திற்கான வெளிநாட்டு ஆதரவுக்கு, பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதேபோல், இடிந்தகரை போராட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற வெளிநாட்டினரின் புகைப்படங்களை, மீடியாக்களின் வீடியோக்கள் மூலம், உள்துறையினர் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக