ஞாயிறு, 11 மார்ச், 2012

பொதுமக்களால் விரட்டப்படும் உதயகுமார்

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமாரின் போராட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் அனுமதி தராமல் விரட்டி விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போகுமிடமெல்லாம், உதயகுமார் கும்பலை பொதுமக்கள் துரத்துவதால், அணு உலை எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உதயகுமாருக்கு மக்கள் எதிர்ப்பு: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, உதயகுமாரின் தலைமையில், ஒரு குழு போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு, வெளிநாட்டு நிதி வருவதாக, மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களுடன் தொடர்புடைய, வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவன உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உதயகுமாரின் போராட்டத்திற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்பெல்லாம் அமைதியாக இருந்த மக்கள், மின்வெட்டால் கடும் அதிருப்திக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாகியுள்ளனர். கூடங்குளம் நிலையத்தை திறந்தாவது, மின்சாரம் கொடுங்கள் என, வெளிப்படையாகவே போராட்டம் நடத்துகின்றனர்.


காயல்பட்டினத்தில் ஓட ஓட விரட்டினர்: இதற்கிடையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, உதயகுமாரின் ஆதரவாளர்கள், கடந்த மாதம், நெல்லை மாவட்டம் காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகில் கூடி, பிரசாரம் செய்தனர். மின்வெட்டு நேரத்தில் நடந்த இந்த பிரசாரத்தால், அங்குள்ள பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். அவர்கள், உதயகுமாரின் ஆதரவாளர்களை, ஓட ஓட விரட்டி, ஊருக்கு வெளியில் துரத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையத்தில் மறியல்: இதே போல், கடந்த 4ம் தேதி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், உதயகுமார் தலைமையில், அணு உலை எதிர்ப்பு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆங்காங்கே மறியல் செய்தனர். அப்போது, காரில் மறைந்து வந்த உதயகுமாரை, ஒரு தரப்பினர் முற்றுகையிட்டு, ஊரை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, விருதுநகர் மாவட்ட போலீசார், உதயகுமார் வந்த காரை, பொதுக் கூட்ட பகுதிக்கு செல்லாமல் ஊரை விட்டு வெளியேற்றினர். மக்களின் எதிர்ப்பால், பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களும், மேடையிலிருந்து விரட்டிவிடப்பட்டனர்.

ராமநாதபுரத்திலும் வெளியேற்றம்: கடந்த இரு தினங்களுக்கு முன், உதயகுமாரும் அவரது ஆதரவாளர்களும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, அணு உலை எதிர்ப்பு கூட்டத்திற்கு ஆள் சேர்க்கச் சென்றனர். அங்கும் பொதுமக்கள் எதிர்த்ததால், போலீசார் தலையிட்டு, உதயகுமாரை ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றினர். இந்த நிலையில், ஜப்பானில் புகுசிமா அணு உலை விபத்து ஏற்பட்ட தினத்தில், கூடங்குளம் அருகிலுள்ள ராதாபுரத்தில் பெரிய அளவிலான மாநாடாக நடத்த, உதயகுமார் கும்பல் திட்டமிட்டது. இதில், ஜப்பானை சேர்ந்தவர்கள் பங்கேற்று, அணு உலை எதிர்ப்பு குறித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஜப்பானியருக்கான விசாவையே, மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துவிட்டது. ஆனாலும், கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, ராதாபுரம் போலீசில் உதயகுமார் கும்பல் விண்ணப்பித்தது. தமிழக போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவுப்படி, உதயகுமார் போராட்டத்திற்கு அனுமதி இல்லையென, போலீசார் நேற்று மறுத்து விட்டனர்.

மீண்டும் இடிந்தகரை...: ராதாபுரத்திலோ அல்லது வேறு எந்தப் பகுதியிலோ, பொதுக் கூட்டம், மாநாடு நடத்தக் கூடாது என, போலீசார் அதிரடியாக உத்தரவிட்டு, உதயகுமாரை, ராதாபுரத்திலிருந்து வெளியேற்றி விட்டனர். இதனால், பெரும் ஏமாற்றத்தையும், மக்கள் எதிர்ப்பையும் சந்தித்துள்ள உதயகுமார், தனது வழக்கமான முகாமிடமான இடிந்தகரை சர்ச் வளாகத்தில், இன்று கூட்டம் நடத்துகிறார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக