செவ்வாய், 13 மார்ச், 2012

இந்தி நடிகை:கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை


Nupur Mehta
மும்பை: இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. மேலும் எனது புகைப்படத்தை அனுமதியில்லாமல் பிரசுரித்துள்ள லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடரவுள்ளேன் என்று இந்தி நடிகை நூபுர் மேத்தா கூறியுள்ளார்.
சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த புக்கிகள், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் பெருமளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போட்டிகளின் முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை வைத்துள்ளனர்.மேலும் தங்களின் செயல்களுக்கு இந்தி திரைப்பட நடிகைகள் சிலரையும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் மூலம் வீரர்களை வளைத்து தங்களது வலையில் விழ வைக்கின்றனர்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைக் கூட பிக்ஸ் செய்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இதுகுறித்து ஐசிசியும் விசாரிக்கப் போவதாகவும் அது கூறியிருந்தது.

இந்த செய்திக்கட்டுரையில் நடிகை நூபுர் மேத்தாவின் கவர்ச்சிகரமான புகைப்படத்தையும் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த சூதாட்டத்தில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நூபுர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த செய்திக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள நடிகையின் படம் நான்தான். ஆனால் புகார்களுக்கும் எனக்கும் சற்றும் சம்பந்தமில்லை. அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் இவை.

சண்டே டைம்ஸ் இதழ் எனது அனுமதி பெறாமலேயே எனது படத்தைப் பயன்படுத்தியுள்ளது. இதற்காக அந்த இதழ் மீது நான் வழக்குத் தொடரவுள்ளேன். இந்தப் புகைப்படத்தால் எனது மனது நிம்மதி கெட்டு விட்டது. பெரும் மன உளைச்சலும், அவப் பெயரும் ஏற்பட்டுள்ளது.

எனக்கு எந்த கிரிக்கெட் வீரரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. யாருடனும் நான் தொடர்பு வைத்துக் கொண்டதில்லை. அதேபோல எந்த புக்கியையும் எனக்குத் தெரியாது. எந்த கிரிக்கெட் போட்டியையும் நான் நேரில் பார்த்ததில்லை. எனது பெயரை எப்படி இதில் இழுத்து விட்டனர் என்பதே எனக்குப் புரியவில்லை என்றார் நூபுர்.

நூபுர் சன்னி தியோல் நடித்த ஜோ போலே சோ நிஹால் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ஸ்டில்லைத்தான் சண்டே டைம்ஸ் முகம் மறைத்துப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சண்டே டைம்ஸ் செய்திக்கு ஐசிசி மறுப்பு

இதற்கிடையே சண்டே டைம்ஸ் பத்திரிக்கைச் செய்திக்கு ஐசிசி மறுப்பு தெரிவித்துள்ளது. இது திசை திருப்பும் செய்தி என்று அது வர்ணித்துள்ளது. மேலும் இந்தியா-பாகிஸ்தான் அரை இறுதிப் போட்டி குறித்து ஐசிசி விசாரிக்கப் போவதாக வெளியான செய்தியையும் அது மறுத்துள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி கூறுகையில், இது மிகவும் தவறான செய்தி, திசை திருப்பும் செய்தி. அரை இறுதிப் போட்டி குறித்து விசாரிக்கு ஐசிசியிடம் எந்தவிதமான காரணமும், முகாந்திரமும் இல்லை. இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே மிகச் சிறப்பான போட்டி அது. எனவே அதுகுறித்து சந்தேகம் எழத் தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஐசிசியின் முன்னாள் ஊழல் தடுப்பு்ப பிரிவு தலைவர் ரவி சவானியும் இந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரை இறுதிப் போட்டி மிகவும் சுத்தமானது. அதுகுறித்து சந்தேகமே எழத் தேவையில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக