புதன், 21 மார்ச், 2012

சங்கரன்கோவில் சந்தேகமே இல்லை வாங்கப்பட்ட ஒட்டு

அரசின் இலவசப் பொருட்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. அத்தனை பணிகளையும் முடித்த பிறகுதான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவின் திராணியை நிரூபித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இந்த வெற்றியைப் பெற அவருக்கு 32 அமைச்சர்கள் தலைமையிலான மெகா தேர்தல் பணிக்குழு தேவைப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அரசாங்கமே சங்கரன்கோவிலில் குவிந்து கடுமையாகப் போராடி, கஷ்டப்பட்டு வேலை பார்த்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.வெற்றிதான் என்றாலும் கூட இந்த வெற்றியைப் பெற, திராணியை நிரூபிக்க அதிமுக மிகக் கடுமையான அளவில் செயல்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே தனது வேட்பாளராக முத்துச்செல்வியை ஜெயலலிதா அறிவித்து விட்டார். அதேபோல எல்லோருக்கும் முன்பாக தேர்தல் பணிக்குழுவையும் அவர் அறிவித்தார்.

மொத்தம் 34 பேர் கொண்ட மெகா பணிக்குழுவை முதலில் அவர் அறிவித்தார். அதில் 32 பேர் தமிழக அமைச்சர்கள். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரே ஒரு தொகுதிக்கான தேர்தல் பணிக்கு இத்தனை அமைச்சர்களா என்று அனைவரும் வாய் பிளந்தனர். தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்களையும் சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.

சங்கரன்கோவிலிலேயே முகாமிட்டிருந்த அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகள் படை சூழ, தடபுடலாக பணிகளில் குதித்தனர். அரசின் நல உதவிகள் அனைத்தும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து திருப்பி விடப்பட்டு சங்கரன்கோவிலுக்கு பாய்ந்து வந்தன. புயல் வேகத்தில் இவற்றை மக்களுக்கு அதிகாரிகள் விநி்யோகித்தனர்.

அரசின் இலவசப் பொருட்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. அத்தனை பணிகளையும் முடித்த பிறகுதான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

32 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அனைத்து மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் என திரும்பிய பக்கமெல்லாம் அதிமுகவினர் தலைகள்தான். இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவினர் பெருமளவில் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் சரமாரியாக கிளம்பின.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக தேர்தல் ஆணையத்தை விமர்சித்தார். தேர்தல் ஆணையம் செத்துப் போய் விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதே போலத்தான் திமுக உள்ளிட்ட கட்சிகளும் புகார்கள் கூறின.

இருந்தாலும் அதிமுக தரப்பு எதையும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் பாட்டுக்கு தங்களது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தனர்.

இப்படி கடுமையாக வேலை பார்த்து, கஷ்டப்பட்டு முதலிடத்தைப் பிடித்து அம்மா காலடியில் வெற்றிக் கனியை கொ்ண்டு வந்து சேர்த்துள்ளது அதிமுக.

திராணியை நிரூபித்து விட்டனர்... ஆனால் அதற்காகப் போடப்பட்ட தீணி மிகப் பெரிது என்பதை அதிமுகவினரே ஒத்துக் கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக