வெள்ளி, 30 மார்ச், 2012

கொலையுண்ட ராமஜெயத்தின் எதிரிகள் பட்டியல் மகா நீளம்

ராமஜெயம் கொலை: போலீஸ் ட்ரேஸ் பண்ணிய கடைசி போன் கால்!Viruvirupu,

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில், திருச்சி போலீஸ் இன்னமும் விசாரணை நிலையிலேயே இருக்கிறது. அரசியல் காரணமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள் என்றாலும், தொழில் போட்டி அல்லது முன்விரோதம்தான் அநேகமாக காரணமாக இருக்கும் என்று திருச்சி போலீஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.இந்த கொலை விசாரணைக்காக, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறுகிறது காவல்துறை.
திருச்சி மாவட்ட தி.மு.க. அளவில், நேருவும், அவரது கொல்லப்படட தம்பி ராமஜெயமும் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தவர்கள். அசைக்க முடியாத சக்தி என்றால் எல்லா விதத்திலும்தான்… அரசியலில் இருந்து, அடிதடி வரை!


அரசியல் காரணங்களுக்காகவும், ரியல் எஸ்டேட் தகராறுகளிலும் திருச்சி ஏரியாவில் நடைபெற்ற சில நிழலான விவகாரங்களில் ராமஜெயத்தின் பங்கு பெரியது என்று திருச்சி தி.மு.க.-வினரே சொல்கிறார்கள். ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ், அவரது டிரைவர் சக்தி ஆகியோர் கடந்த 2007-ம் ஆண்டில் காரோடு வைத்து எரிக்கப்பட்டனர். இது நடைபெற்ற மறுநாளே, தங்கவேல் என்பவர் கொல்லப்பட்டார். தங்கவேல், துரைராஜின் சகோதரர்.
மேலே குறிப்பிட்ட விவகாரத்தில் ராமஜெயத்தின் இன்வால்வ்மென்ட், திருச்சியில் அனைவருக்கும் தெரியும். ராமஜெயம், துரைராஜ் ஆகிய இருவருமே ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் போட்டியாளர்கள். தவிர, வேறு சில விஷயங்களில் விரோதங்களும் இவர்களுக்கிடையே இருந்தன.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொலை அது. தி.மு.க. அரசில் சக்தி வாய்ந்த அமைச்சராக ராமஜெயத்தின் அண்ணன் நேரு இருந்தார். எனவே அந்தக் கொலை விசாரணை எப்படி நடைபெற்றிருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆட்சி மாற்றத்தின்பின் இப்போது அ.தி.மு.க. ஆட்சியிலும் இந்த வழக்கு வேகம் எடுக்காமல் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த கொலை வழக்கின் விசாரணை வளையத்தில் ராமஜெயம் உள்ளார்.
எந்த ஆட்சி வந்தாலும் இவர்களை அசைக்க முடியாது என்ற நினைப்பில், பழைய விவகாரங்கள் எவற்றுக்காவது யாராவது பழிவாங்கியிருக்கலாம் என்ற கோணத்தில்தான் விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் மற்றொரு விவகாரத்திலும் ராமஜெயத்தின் பெயர் அடிபட்டது.
ராமஜெயம் ஒரு பக்கமாக ரியல் எஸ்டேட் விவகாரங்களில் ‘ஆல்மோஸ்ட் கட்டப் பஞ்சாயத்து’ ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்க, அந்தப் பாதையில் குறுக்கிட்ட நபர் மற்றொரு கட்டப் பஞ்சாயத்துவாதியான மணல்மேடு சங்கர், திடீரென இவரை என்கவுன்டரில் போட்டுத் தள்ளியது காவல்துறை. மணல்மேடு சங்கர் தனது பாதையில் குறுக்கே வருவதால், ராமஜெயம்தான் தனது அரசியல் செல்வாக்கை வைத்து என்கவுன்டருக்கு ஏற்பாடு செய்தார் என்று ஒரு தியரியும் உண்டு.
மணல்மேடு சங்கரின் குரூப் ஆட்கள் யாராவது ராமஜெயம் மீது இப்போது பழி தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
ராமஜெயம் கொலையில் காரணம் தேடுவது காவல்துறைக்கு சுலபமான காரியமாக இருக்கப் போவதில்லை. காரணம், அண்ணன் நேருவின் செல்வாக்கை வைத்து இவர் கண்டமேனிக்கு புகுந்து விளையாடியவர். அந்த வகையில் இவருக்கு இருக்கக்கூடிய எதிரிகளை எண்ணுவதற்கு இரு கைகளிலும் உள்ள விரல்கள் போதாது. சிறியதாக ஒரு டெலிபோன் டைரக்ட்ரி அடிக்கும் அளவுக்கு பட்டியல் பெரியது.
தற்போது போலீஸிடம் உள்ள ஒரேயொரு துப்பு, ராமஜெயத்தின் மொபைலிலிருந்து கடைசியாக பேசப்பட்ட கால், தஞ்சை அருகேயுள்ள அம்மாப்பேட்டை பகுதியிலிருந்து வந்தது என்பது மட்டுமே.
அதை வைத்துக்கொண்டு கிளீன் ஸ்லேட்டில் இதுவரை, ‘ராமஜெயம்’ என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள் போலீஸார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக