செவ்வாய், 20 மார்ச், 2012

உதயகுமார் மீது தேசிய பாதுகாப்பு.சட்டம் பாயும்?

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, மக்களை பீதியூட்டி பொருளாதார சீர்குலைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, உதயகுமார் குழுவினர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், ஆறு மாதங்களுக்குப் பின், நேற்று முடிவுக்கு வந்தது. ஆறு மாதங்களாக சட்டத்திற்கு எதிராக, நாட்டு நலனுக்கு எதிரான போராட்டத்தில் உதயகுமார் தலைமையிலான குழுவினர், போராட்டம் நடத்தி வந்தனர்.இடிந்தகரை லூர்து ஆலய வளாகத்தில் முகாமிட்டு, அணுஎதிர்ப்பு போராட்டம் நடத்தும் உதயகுமார், தனது சொந்த ஊரான நாகர்கோவிலை விட்டுவிட்டு, இடிந்தகரை மக்களின் பாதுகாப்பில், தற்போது தஞ்சமடைந்துள்ளார்.அணுஉலை விஞ்ஞானிகளை வழி மறித்தது, அணுஉலை முன், போலீஸ் உயரதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, அனுமதி வாங்காமல் ஆறு மாத கால போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில், உதயகுமார் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
உதயகுமார் குழுவினர் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோர் மீது, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 240 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், இந்திய இறையாண்மை, தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், உதயகுமார், புஷ்பராயன், பாதிரியார் ஜேசுராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகளின் மீது, இன்று முதல் தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொள்வர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பாஸ்போர்ட்டுகளை, இந்தியக்குடியுரிமை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். கடல்வழியே உதயகுமார் தப்பித்து விடாமல் தடுக்க, கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவ கிராமங்களில் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.

உதயகுமாரின் போராட்டத்தால், ஆறு மாதங்களில், தினமும், ஐந்து கோடி ரூபாய் வீதம், 900 கோடி ரூபாய் அணுமின் கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க செய்த போராட்டமாகவே கருதப்படுகிறது. உதயகுமாரை கைது செய்து, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நிரந்தரமாக சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.உதயகுமார் கும்பலை கைது செய்ய, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களைச் சுற்றி, செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு, சோதனை நடந்து வருகிறது.

யார் மீது எத்தனை வழக்குகள்:மொத்தமுள்ள, 240 வழக்குகளில், யார் பெயர், எத்தனை வழக்குகளில் உள்ளது என, போலீஸ் அளித்த விவரம்:
பெயர் பொறுப்பு எண்ணிக்கை
உதயகுமார் போராட்ட ஒருங்கிணைப்பாளர் 55
சிவசுப்பிரமணியன் போராட்டக்குழு உறுப்பினர் 44
ஜெயக்குமார் இடிந்தகரை சர்ச் பாதிரியார் 41
ஏ.எஸ்.ரவிபோராட்டக்குழு உறுப்பினர் 33
முத்துராஜ் கூடங்குளம் பஞ்.,தலைவர் 33
ராஜலிங்கம் பா.ஜ., நிர்வாகி 34
மைபா ஜேசுராஜன் சேரன்மகாதேவி பாதிரியார் 22
சுசிலன் கூட்டப்புளி பாதிரியார் 4
பதேயூஸ்ராஜன் கூடங்குளம் பாதிரியார் 4
ரட்சகநாதன் கூத்தன்குழி பாதிரியார் 2
இவான் அம்ப்ரோஸ் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் 2
சகாயராஜ் இடிந்தகரை போராட்டக்குழு 35
பெருமாள்சாமி கூடங்குளம் போராட்டக்குழு 19
புஷ்பராயன் கிறிஸ்தவ மக்கள் இயக்கத் தலைவர் 7
சகாய இனிதா மீனவர் அணி, இடிந்தகரை 36

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக