ஞாயிறு, 4 மார்ச், 2012

மின்வெட்டு: அன்னியச் செலாவணி தரும் ஐ.டி., நிறுவனங்கள் பாதிப்பு

மதுரை:தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் தரும் ஐ.டி., நிறுவனங்கள் மின்வெட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் அடுத்த கட்ட ஐ.டி.,துறை மேம்பாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற ஐ.டி., நிறுவன அதிகாரிகள், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு தங்களை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 2008 ல் மின்வெட்டு நிலவியபோது ஐ.டி., நிறுவனங்கள் தனியாரிடம் மின்சாரம் வாங்க அரசு அனுமதி அளித்தது. யூனிட் ரூ.14 முதல் ரூ.17 வரை வாங்கப்பட்டது. மின்வெட்டின் போது பிற தொழில்களைப் போல ஐ.டி.,நிறுவன ஊழியர்களுக்கு "லே-ஆப்' விட முடியாது. வெளிநாடுகள் தரும் பணிகளை இங்குள்ள பி.பி.ஓ.,க்கள் செய்கின்றன. வெளிநாட்டு நிறுவனம் தரும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து தர வேண்டும். இங்குள்ள மின்வெட்டுக்கு ஏற்ப பணிகளை மாற்றியமைக்க முடியாது. தமிழகத்தில் 650க்கும் மேற்பட்ட ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. இதில் 50 நிறுவனங்களே ஐகோர்ட் உத்தரவின் மூலம் தனியாரிடம் மின்சாரம் பெறும் நிலை உள்ளது. ஜெனரேட்டர் மூலம் செயல்படலாம் எனில், தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.

டீசல் கிடைத்தாலும் அதனை சேமிக்க வசதி இல்லை. சேமிப்பு கலன்கள் அமைக்க பலதுறைகளில் இருந்து சான்று பெற வேண்டும். இதனால் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி தரும் ஐ.டி., துறை, மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டியதுதான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சாப்ட்வேர் மற்றும் பி.பி.ஓ.,நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) இயக்குனர் கே.புருஷோத்தமன் கூறுகையில், ""ஐ.டி., நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்விடுமுறை என மின்வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமைக்கு மாற்றினால் பாதிப்பை குறைக்கலாம்.தனியாரிடம் மின்சாரத்தை வாங்க வசதி செய்ய வேண்டும். தற்போதைய நெருக்கடியை போக்க ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக