வியாழன், 15 மார்ச், 2012

சொந்த‌ விருப்பு, வெருப்புக்காக‌ தான் போலீசை ப‌ய‌ன்ப‌டுத்தி, வேண்டாத‌வ‌ர்க‌ள், அர‌சிய‌ல் எதிரிக‌ள், திமுக‌வின‌ர் மீது கைது

நீதிபதி உத்தரவை ஏற்று, ஆஜராக வந்த கனிமொழி, கோர்ட் வளாகத்திலேயே கைது செய்யப்படுகிறார். எப்போது பதிவு செய்யப்பட்டது என்றே தெரியாத முதல் தகவல் அறிக்கையின் (எப்.ஐ.ஆர்.,) அடிப்படையில், (சசிகலா) நடராஜன் கைது செய்யப்படுகிறார். நூற்றுக்கணக்கான எப்.ஐ.ஆர்., இருந்தும், இன்று வரை கைது செய்யப்படாமல், கூடங்குளம் உதயகுமார் சுதந்திரமாக உலவுகிறார்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே மூன்று வெவ்வேறு விதமான உதாரணங்கள் இருக்கின்றன. அப்படியானால், எந்த அடிப்படையில் கைது சம்பவங்கள் நடக்கின்றன? கைதுக்கான அவசியம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தற்போதைய தலைவரும், காவல் துறை முன்னாள் இயக்குனருமான ஆர்.நடராஜ் கூறியதாவது: வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஒருவரை கைது செய்யலாமா, வேண்டாமா என்பது, விசாரணை அதிகாரியின் (ஐ.ஓ.,) உரிமை. வழக்கின் தன்மை, விசாரணைக்கு குந்தகம் விளையலாம் என்ற சந்தேகம், சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுவதற்கான வாய்ப்பு, வேறு வழக்கில் தேவைப்படுபவரா என்பதை ஆராய்ந்து, விசாரணை அதிகாரியே முடிவெடுக்கலாம். பிணையில் விடுவிக்க முடியாத (என்.பி.டபிள்யூ.,) வழக்குகளில் கூட, விசாரணை அதிகாரிக்கு திருப்தி இருந்தால், எதிரியை சொந்த ஜாமீனில் விடுவிக்கலாம். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் சொன்னது போல, "பெயில் தான் விதி. ஜெயில் என்பது விதிவிலக்கு.' ஆனால், நமக்கு எதற்கு பிரச்னை எனக் கருதி, தற்காப்புக்காக கைது நடவடிக்கைகளில் போலீசார் இறங்கிவிடுகின்றனர். அவ்வாறு செய்வதால், இந்தியாவிலேயே அதிகம் கைது நடக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. ஆண்டுதோறும் ஏழு லட்சம் பேர் வரை தமிழகத்தில் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு நடராஜ் கூறினார்.

இப் பிரச்னை குறித்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சிராஜுதீன் கூறியதாவது: அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு, குடிமகனின் அடிப்படை உரிமையாக தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. கைது, அந்த உரிமையில் தலையீடாகக் கருதப்படுகிறது. அப்படி, ஒரு மனிதனின் சுதந்திரத்தில் தலையிட வேண்டிய கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே, கைதுகள் செய்யப்பட வேண்டும். நினைத்த நேரத்தில் யாரையும் கைது செய்துவிட முடியாது; கூடாது. அவ்வளவு ஏன்? ஒருவரை கைது செய்ய வேண்டும் என உத்தரவிடும் அதிகாரம், நீதிமன்றங்களுக்கே கிடையாது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக , "வாரன்ட்' பிறப்பிக்க முடியுமே தவிர, வழக்கில் கைது செய்யச் சொல்ல முடியாது. கைது செய்வதற்கான அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், ஒருவரை கைது செய்து தான் ஆக வேண்டும் என, சட்டத்தின் எந்தப் பிரிவும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், சமூகத்தின் சுமூகநிலையைப் பாதிக்கும் சம்பவங்களில் கைது நடவடிக்கை, கட்டாயமாகிறது. பட்டப்பகலில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்து, பத்து பேர் இறக்கும் சம்பவங்களில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்க முடியாது.

இளம்பெண்ணை நான்கைந்து பேர் சேர்ந்து கும்பலாக கற்பழிக்கின்றனர் என்றால், அவர்கள் எங்கும் தப்பிச் சென்றுவிட மாட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தாலும், அவர்களைக் கைது செய்து, சிறையிலடைக்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்த வழக்கில் கைது அவசியமா என, விசாரணை அதிகாரி சுயமாகச் சிந்தித்து, சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். அப்படி அவர் ஒருவரைக் கைது செய்துவிட்டால், இந்தக் கைது சரிதானா, சம்பந்தப்பட்ட நபர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய நபர் தானா என்பதை, சுதந்திரமாக, சுயசிந்தனையோடு மறுபரிசீலனை செய்வதற்குத் தான், "மாஜிஸ்திரேட்' இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, போலீசார் மற்றும் மாஜிஸ்திரேட்களின் இந்தச் சுதந்திரம், எழுத்தில் தான் இருக்கிறது; நடைமுறையில் இல்லை. நீதிமன்றமே உத்தரவிட்டும், கொலை வழக்குகளில் கைது செய்யப்படாத அரசியல்வாதிகள் உண்டு. அதேசமயம், சாதாரண அடிதடி வழக்குகளில் கைது செய்யப்படு பவர்களும் உண்டு. அவர்களுக்கு, கோர்ட்டிலேயே தண்டனை வழங்கப்படாமல், வெறுமனே எச்சரிக்கை மட்டுமே விடப்படும். அந்த வழக்கில் அவர்களை சிறையில டைப்பதால், யாருக்கு பலன்? மொத்தத்தில், சட்டம், ஒழுங்கு பராமரிப்பு என்பது, கம்பி மேல் நடப்பது மாதிரி. கரணம் தப்பினால், தனி மனித சுதந்திரம் பலியாகிவிடும். இவ்வாறு சிராஜுதீன் கூறினார். கும்மிருட்டில் வெளிச்சத்தைத் தேடும் ஏழு கோடி தமிழர்களின் மின்சார உரிமையைவிட, கூடங்குளம் உதயகுமாரின் தனி மனித சுதந்திரம் தான் முக்கியமென்று, விசாரணை அதிகாரி முடிவெடுத்துவிட்டாரோ, என்னவோ!

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக