வெள்ளி, 16 மார்ச், 2012

கலைஞருக்கு அழகல்ல தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் போன்ற

இன்னமும் தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் முதிர்ச்சி அடைந்த கலைஞருக்கு அழகல்ல!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா தெலுங்கு மொழியில் பேசி, வாக்குகளை வசீகரிக்கும் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். அவர் விட்ட பணியை அவருடைய அமைச்சர்கள் செய்துவருகின்றனர்.
அவரைத் தொடர்ந்து திமுக தலைவர்  சங்கரன்கோவில் சென்றார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடை தொடர்பாக பிரச்னை எழுந்தது. பிறகு அமைச்சர் அழகிரி, தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரைச் சந்தித்துப் பேசியபிறகு பிரச்னை தீர்ந்தது.
சொன்னபடியே சங்கரன்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்டார் கலைஞர் . வழக்கம்போல பிரும்மாண்டமான கூட்டம். கூட்டணிக்கட்சித்தலைவர்கள் எல்லாம் வந்திருந்தனர். எல்லோரும் பேசியபிறகு கலைஞர் பேசினார். அப்போது இடைத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். ஏன் திமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று பேசினார். இது இடைத்தேர்தல் மட்டுமல்ல; எடைத்தேர்தல் என்று தமக்கேயுரிய பன்ச் ஒன்றையும் வைத்தார். சங்கரன்கோவில் குறித்த தனது நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார். இப்போதைய டாபிகல் விவகாரமான திராவிட இயக்கம் நூற்றாண்டு, திராவிட – ஆரிய விவகாரம் பற்றியும் பேசினார்.  மின்வெட்டு பற்றி ஆவேசமாகப் பேசினார்.
எல்லாம் சரிதான். பேசவேண்டிய விஷயம்தான். ஆனால் அதன்பிறகு அவர் பேசியதுதான் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கருணாநிதி.
‘நான் முதல்வராக இருந்தபோது அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு நூலகத்தில் நான்கு  லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள்.
அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான்.
ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி  தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.’
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. சிலர் மாற்றவே கூடாது என்று கடுமையாக எதிர்க்கிறார்கள். அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் தங்களுடைய வாதங்களையும் எடுத்துவைக்கிறார்கள். அதைப்போலவே, நூலகத்தைக் காட்டிலும் மருத்துவமனை அமைவது எந்த அளவுக்கு அத்தியாவசியமான ஒன்று என்பதைப் பற்றியும் சில கருத்துகள் எழுந்துவருகின்றன. நூலக மாற்றம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் தொடர்ச்சியான விவாதங்கள்  நடந்துவருகின்றன. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.
இந்நிலையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த திமுக தலைவர் கலைஞருக்கு எத்தனயோ வழிகள் இருக்கின்றன. நூலகத்தை மாற்றக்கூடாது என்று கோரிக்கை விடுக்கலாம். கோஷம் எழுப்பலாம்.  தனது கட்சியின்  பத்திரிகையில் எழுதலாம். கட்சித் தொண்டர்களையும் மக்களையும் ஓரணியில் திரட்டிப் போராட்டம் நடத்தலாம். ஊர்வலம் போகலாம். இப்படி, தனது எதிர்ப்பை ஜனநாயக ரீதியாகப் பதிவுசெய்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.
அவற்றில் பல வாய்ப்புகளை திமுக பயன்படுத்தியும் வந்துள்ளது. இருந்தும், ‘நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்’ என்று பேசுவது எந்தவகையில் சரியான பேச்சு என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
தீக்குளிப்பு என்பது தமிழகத்துக்குப் புதிய விஷயமல்ல. மொழிப்போர் நடந்த காலகட்டங்களில் தமிழுக்கு ஆதரவாகவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் மாணவர்கள், இளைஞர்கள் உணர்ச்சிவேகத்தில் தீக்குளித்துள்ளனர். அப்படித் தீக்குளித்தவர்களை, மொழிப்போர் தியாகிகள் என்று திராவிட இயக்கங்கள் என்று கொண்டாடுகின்றன. மொழிப்போருக்குப் பிறகும் வெவ்வேறு காலகட்டங்களில் பலரும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தீக்குளித்துள்ளனர். குறிப்பாக, ஈழப்பிரச்னையை முன்வைத்து.
இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆர் காலத்தில் திமுக தலைவருடைய கைதைக் கண்டித்து சிலர் தீக்குளித்துள்ளனர். வைகோவைத் திமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் தீக்குளிப்புகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், தீக்குளிப்பு வேண்டாம்; தங்கள் இன்னுயிரை அவசரப்பட்டு இழக்கவேண்டாம் என்று உணர்ச்சிப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தவர் கருணாநிதி.
தீக்குளிப்பு என்பது காட்டுமிராண்டித்தனமான செயல்; நாகரிக முதிர்ச்சி நிலையில் இருக்கும் நாம் தீக்குளிப்பு போன்ற விஷயங்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்; எக்காரணம் கொண்டும் தீக்குளிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பேசக்கூடாது என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் தீக்குளிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியான செயலாக இருக்கமுடியாது.
வேண்டுமானால், ‘நான் தானே தீக்குளிப்பேன் என்று சொன்னேன். அடுத்தவரையா தீக்குளிக்கச் சொன்னேன்’ என்று  கேட்கலாம். தலைவர் அப்படிச்சொன்னால் அதைத் தொண்டர்கள் தங்களுக்கு விடுத்த அழைப்பாகவே எடுத்துக் கொள்வார்கள் என்பது  அத்தனைபேருக்குமே தெரிந்த சங்கதிதான்.
தொண்டர்களை உசுப்பேற்றுவதற்கு, உற்சாகப்படுத்துவதற்கு எத்தனையோ வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன. கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க  இருக்கும் வாய்ப்புகள் அநேகம். ஆனால் இன்னமும் தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் முதிர்ச்சி அடைந்த கருணாநிதிக்கு அழகல்ல!
அருட்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக