புதன், 28 மார்ச், 2012

மறு ஆய்வு "நேர்மையை" நிரூபிக்க போராடும் ஆ.ராசா?


Raja
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் ஆ. ராசா தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகள் சிறிது காலத்துக்கு ஆ. ராசாவுக்கு ஆறுதலைத் தரக்கூடியதாக இருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்தது தொடர்பாகவும் தமது நடவடிக்கைகளை விமர்சித்தும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீண்டும் ஆராய வலியுறுத்தி முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மறு ஆய்வு மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமது தரப்பு வாதங்கள் முன் வைக்க வழங்கப்படாதது என்பது நீதித்துறை நடைமுறைகளை மீறியதுடன் தமக்கு நீதி கிடைப்பதற்கான சூழலை மறுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.அதே நேரத்தில் தற்போது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழக்கில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 1996ம் ஆண்டு தீர்ப்பின்படி, எந்த அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே அமர்வில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம். நீதிபதி கங்குலி ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதி சிங்வியும் புதியதாக மற்றொரு நீதிபதியும் இந்த மறுஆய்வு மனுவை விசாரிக்கலாம்.

உச்ச நீதிமன்றமானது தொலைத்தொடர்புத் துறையால் வழங்கப்பட்ட அலைவரிசை உரிமங்களை முறையற்றது என்று கூறி ரத்து செய்துள்ளது என்பது ஒரு வழக்கில் முடிவாக ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டது உச்ச நீதிமன்றம் .

ஆனால் இந்த வழக்கு இன்னமும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியன் சாமியின் மனுமீது உச்சநீதிமன்றம் எந்த ஒரு கருத்தையும் சொல்லாமல் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்புக்கே விட்டு ஒதுங்கிக் கொண்டது. ஒருவேளை இதில் உச்சநீதிமன்றம் கருத்து எதனையும் தெரிவித்திருக்குமேயானால் அதுவும் கூட சி.பி.ஐ. நீதிமன்றத்தின் முடிவில் தலையிடக் கூடிய ஒன்றாகிவிடும் போது ஆ.ராசா வழக்கிற்கும் இது பொருந்தும்தானே என்கிறது அவரது தரப்பு.

ஒருவேளை ஆ. ராசா மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவிக்குமேயானால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாகி குழப்பத்தை உருவாக்கும். இதைத்தான் ஆ. ராசா தரப்பு உச்ச நீதிமன்றத்தின் மறு ஆய்வு மனுவில் பல்வேறு சட்ட உட்பிரிவுகளை மேற்கோள்காட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

ராசா அனுமதித்த உரிமங்களை ரத்து செய்திருந்தாலும்கூட முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை ஏன் கொடுக்கப்பட்டது? சரியான முறையில்தான் கொடுக்கப்பட்டதா? தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர் ஆ. ராசா. ஆனால் தமக்கு அத்தகைய ஒரு வாய்ப்பையே கொடுக்காமல் தீர்ப்பளித்திருப்பது என்பது சரியானதுதானா? என்ற ஆ. ராசாவின் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதும் ஒரு எதிர்பார்ப்புதான்.

வழக்கறிஞரான ஆ. ராசாவும்கூட இந்த சந்தர்ப்பத்துக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தார்போல.. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன மாதிரி வரக்கூடும் என்று கருதி தமக்கான சட்ட ஆதரவுப் பலத்தை அவர் அதிகரித்துக் கொண்டார் என்றே கூறுகின்றனர்.

இப்போது அரசின் கொள்கை முடிவுகளை நீதித்துறை மூலமாக அலசி ஆராய்ந்து தமக்கு சாதகமான அம்சங்களை உருவாக்கவே மறு ஆய்வு மனு என்ற ஆயுதத்தை பயன்படுத்தியிருக்கிறார். இது ராசாவுக்கு சற்றே சாதகமாகத்தான் இருக்கக் கூடும்... அதாவது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரைக்கும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக