செவ்வாய், 27 மார்ச், 2012

ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட தரக்கூடாது: கர்நாடக காங்கிரஸ்


Siddaramaiah
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் திறந்து விடக்கூடாது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் கர்நாடக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீது கர்நாடக சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது பேசிய சித்தராமையா,

நதி நீர் பங்கீடு பிரச்சினை மிகவும் சிக்கலானது. இதை நாம் அரசியல் ஆக்கக்கூடாது, கர்நாடகத்தில் 123க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவுகிறது. மைசூர், பெங்களூர் நகரங்களில் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை உள்ளது.
தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நீரைக் காட்டிலும் கூடுதலாகக் கொடுத்ததே தவறு. ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகிக்கும்போதெல்லாம் காவிரி பிரச்சனையைக் கையில் எடுக்கிறார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த பிரச்சனையில் கர்நாடக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தின் உரிமையை காப்பாற்ற வேண்டும்.
தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது. இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு கொடுப்போம். முதல்வர் சதானந்த கெளடா இந்த விஷயத்தை மிக உறுதியாக அணுக வேண்டும் என்றார்.
முதல்வர் சதானந்த கெளடா பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடகத்தைச் சீண்டுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 4 மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மேல்முறையீட்டு மனுவுடன் விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தேசிய தண்ணீர் கொள்கையை வகுக்க திட்டக்குழு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்க வேண்டும். தமிழக அரசின் அரசியல் நிர்பந்தங்களுக்கு இணங்கிவிடக் கூடாது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். இப்பிரசச்னையால் இரு மாநிலங்களுக்கு இடையே சச்சரவு ஏற்படக் கூடாது. தமிழக அரசின் மனு சட்டவிரோதமானது, விவசாயிகளுக்கு எதிரானது.

இதைச் சட்டரீதியாக, அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம். தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராததால் அதுபற்றி இப்போதைக்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லை. அவசியம் ஏற்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வோம். இந்த விவகாரத்தில் மக்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது, தூண்டுதல்களுக்கு இணங்கக் கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக