வெள்ளி, 30 மார்ச், 2012

தினமலர் அழுகிறது ஜெயாவின் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமாம்

(செல்விக்காக தன்னோட திருமதி பட்டத்தையே விட்டு கொடுக்க தயாராயிட்டாரே சசிகலா ?)அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்' என, சசிகலா வெளியிட்ட அறிக்கையை தயாரித்ததே, சசிகலாவின் உறவினர்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் நீக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின், சசிகலா, திடீரென நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையின் பின்னணி குறித்த தகவல்கள், இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின், சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். அந்த வீட்டில் தான், கடந்த சில நாட்களாக சசிகலாவின் உறவினர்கள் ரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
சசிகலாவின் உறவினர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட பின், கடைசியாக, மிடாஸ் மோகன் என்பவரும் கைதானார். இன்னமும் கைதாகாமல் ஒரு சிலர் தான் வெளியே உள்ளனர். அவர்களுக்கும், போலீசார் வலை வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தெரிந்து கொண்ட, சசிகலா உறவினர்கள், தி.நகர் வீட்டில் ரகசிய ஆலோசனையை மேற்கொண்டனர். "இதே நிலை இப்படியே நீடித்தால், சசிகலா உட்பட, ஒருவர் கூட வெளியே இருக்க முடியாது. எல்லாரும் பல மாதங்கள் சிறையில் காலம் தள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் அ.தி.மு.க.,வையோ, ஆட்சியையோ ஆட்டிப்படைக்க முடியாது. இதுவரை பல ஆண்டுகள், "கஷ்டப்பட்டு' சேர்த்த சொத்துக்களும் பறிபோய்விடும். எனவே, உடனடியாக இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின் படி, "அக்காவிற்கு வேண்டாதவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்' என, சசிகலாவால் கூறப்பட்ட, டி.டி.வி.தினகரன், டாக்டர்.வெங்கடேஷ், சுந்தரவதனம் ஆகிய மூன்று பேர் குழு, அறிக்கை ஒன்றை தயாரித்தது; இந்த மூவர் குழு, சசிகலாவிடம் கூடி பேசி அறிக்கைக்கு ஒப்புதல் வாங்கியது. பின், இந்த அறிக்கை போயஸ் தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வரின் செயலர் ராமலிங்கத்திடம் முதலில் அறிக்கை போய்ச் சேர்ந்தது. அவர், இந்த அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சென்றார். அறிக்கையைப் படித்துப் பார்த்த ஜெயலலிதா, நீண்ட ஆலோசனை நடத்தினார்.

"சசிகலாவையும், அவரது உறவினர்களையும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு கொடுமைப் படுத்துகிறது என்ற ஒரு கருத்து பரப்பப் படுகிறது. சரியான நடவடிக்கையைத்தான் அரசு எடுக்கிறது என்ற எண்ணம் வர வேண்டும் என்றால், சசிகலாவே ஒப்புதல் வாக்குமூலம் போல் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாக வேண்டும்' என, சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட பின் தான், இந்த அறிக்கை ஜெயா, "டிவி'க்கு வழங்கப்பட்டது. "சசிகலாவிற்கும், அவரது உறவினர்களுக்கும், அ.தி.மு.க.,வில் இனி எந்த காலத்திலும் இடம் இல்லை என்பதை நிரூபிக்கவே, இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயா "டிவி'யில் இந்த அறிக்கை வெளியானதால், மீண்டும் சசிகலாவிற்கு போயஸ் தோட்டத்தில் இடம் கிடைக்கும் என, யாரும் நம்ப வேண்டாம்' என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

ஆனால், சசிகலாவும் அவரது உறவினர்கள், நண்பர்களும் இன்னமும் ஒரே அணியாகத்தான் உள்ளனர். எப்படியாவது அனுதாபத்தைப் பெற்று, போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுமா அல்லது சசிகலா குழுவினர் நீக்கப்பட்ட பின், அ.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய, "இமேஜ்' மீண்டும் தொடருமா என்பது, அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக