வியாழன், 22 மார்ச், 2012

சூறைக் காற்றாக மோதிய பண பலத்தை வெல்ல முடியவில்லை-வைகோ

சென்னை: ம.தி.மு.க. கூட்டணி ஆதரவு ஏதும் இன்றி, களத்தில் போட்டியிட்டது. தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வாக்காளர்களைச் சந்தித்தபோது, அவர்களின் அன்பையும், கனிவான வரவேற்பையும் பெற முடிந்தது. ஆனால், சூறைக்காற்றாக மோதிய பண பலத்தை மீறி வெற்றியைப் பெற முடியவில்லை. எனினும், எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் விலை மதிக்க முடியாதது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

"வென்றவர் தோற்பர், தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய் நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர்'' என்ற கவிஞனின் குரலை இதயத்தில் ஏந்தி, நேர்மையான அரசியலை வென்றெடுக்க, ம.தி.மு.க. அயராது தொடர்ந்து பாடுபடும்.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. தேர்தல் அறிவிக்கப்படுவதற்குள் தொகுதி முழுவதும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, அனைவருக்கும் வழங்கியது. அ.தி.மு.க.வின் 32 அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு முன்பிருந்தே தொகுதியை முழுமையாக முற்றுகையிட்டனர்.

முதல்வர் பிரசாரத்திற்குப் பின், ஓட்டுக்கு ரூ.1,000 வீதம் தொகுதி முழுக்க வீடு, வீடாக அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தனர். தேர்தல் ஆணையம் இத்தொகுதியில் உயிரற்று, செயல் இழந்து கிடந்தது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் நாட்டின் முன்னாள் ஆளும் கட்சியான தி.மு.க.வும் நாங்களும் பணம் கொடுப்பதில் சளைத்தவர்கள் அல்ல என்று, இந்நாள் முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொகுதியில் பணத்தை வாரி இறைத்தனர். பல இடங்களில் ஓட்டுக்கு ரூ.500 வீதம் கொடுத்தனர். சில அரசியல் கட்சிகளும் தீவிரமாக தி.மு.க.வை ஆதரித்து வேலை செய்தன.

ம.தி.மு.க. இத்தகைய கூட்டணி ஆதரவு ஏதும் இன்றி, களத்தில் போட்டியிட்டது. தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வாக்காளர்களைச் சந்தித்தபோது, அவர்களின் அன்பையும், கனிவான வரவேற்பையும் பெற முடிந்தது. ஆனால், சூறைக்காற்றாக மோதிய பண பலத்தை மீறி வெற்றியைப் பெற முடியவில்லை. எனினும், எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் விலை மதிக்க முடியாதது.

வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியை கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக