திங்கள், 19 மார்ச், 2012

காங்கிரசுடனான உறவு பற்றியும் முலாயம்சிங்கே முடிவு செய்வார்

லக்னோ: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இணைவது பற்றி சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தான் இறுதி முடிவெடுப்பார் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்டுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை சமாஜ்வாதி கட்சி ஏற்கெனவே ஆதரித்து வருகிறது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இணைவதா? இல்லையா? என்பது பற்றி கட்சித் தலைவரான நேதாஜிதான்(முலாயம்சிங்) முடிவு செய்வார்.
இது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் டில்லி செல்கிறார். காங்கிரசுடனான உறவு பற்றியும் முலாயம்சிங்கே முடிவு செய்வார் என்றார்.
காங்கிரசுக்கு எச்சரிக்கை
இவ்விவகாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ல ஆஸம் கான் கூறியுள்ளதாவது:
ஐ.மு. அரசில் சமாஜ்வாதி கட்சி இணைவது பற்றி ஊடகங்களின் மூலமாக காங்கிரஸ் விவாதித்து வருவது நல்ல நடைமுறை அல்ல. இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடுகளை அக்கட்சி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் அறிக்கைவிட முடியாது.
ஒருவேளை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியே அழைப்புவிடுத்தாலும் கூட ஊடகங்கள் மூலமாக முடிவெடுக்கமாட்டோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக