செவ்வாய், 6 மார்ச், 2012

இந்தப் பெருமையும் கட்காரிக்குத் தானா நிர்மலா சீதாராமன்''?!


Nirmala Seetharaman
டெல்லி: உ.பி. தேர்தல் முன்ணனி நிலவரம் முழுமையாக வெளியாகும் முன்பே, தங்களது கட்சிக்கு கிடைத்துள்ள இந்த பெரும் வெற்றிக்கு கட்சித் தலைவர் நிதின் கத்காரியே காரணம், அவருக்கே இந்த புகழ் போய்ச் சேரும் என்றெல்லாம் அவசரக் குடுக்கையாக கருத்து தெரிவித்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.
உ.பி. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்றுகாலை தொடங்கின. அப்போது வெளியான ஆரம்ப முன்னிலை நிலவரப்படி பாஜக 2வது இடத்தைப் பிடிப்பது போல தெரிந்தது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், இது மிகப் பெரிய விஷயம், மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. உ.பி. வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸை நிராகரித்து விட்டனர்.நாங்கள் எக்சிட் போல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இப்போது நாங்கள் பெறப் போகும் எண்ணிக்கைதான் அதற்குப் பதில். எங்களது தேர்தல் பிரசாரம் அடக்கம் ஒடுக்கமாக அமைந்ததே தவிர பொலிவிழந்து காணப்படவில்லை. மக்களுக்குத் தொடர்புடைய பிரச்சனைகளை மட்டுமே நாங்கள் பெரிதுபடுத்திப் பிரசாரம் செய்தோம்.

இந்த வெற்றியின் பெருமை கட்சித் தலைவர் கத்காரிக்கே போய்ச் சேர வேண்டும். முழுக்க முழுக்க இதற்கு அவரே காரணம் என்றெல்லாம் பேசினார். ஆனால் நேரம் செல்லச் செல்ல, முதலில் 3வது இடத்திற்கு வந்தது பாஜக, பின்னர் நான்காவது இடத்திற்குப் போய் தற்போது மீண்டும் 3வது இடத்துக்கு வந்துள்ளது.

இதை பாஜகவினர் எதிர்பார்க்கவில்லை. 2வது இடத்தைப் பிடித்தாலே பெரும் வெற்றி என்று அக்கட்சியினர் நினைத்திருந்த நிலையில், தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையுடன் 3வது இடத்திற்கு பாஜக தள்ளப்பட்டு விட்டது. இந்தப் பெருமையும் கத்காரிக்குத்தானா என்பதை நிர்மலா சீதாராமன் சொல்லவில்லை.

சில நேரங்களில் சந்தோஷம், சில நேரங்களில் சோகம்-சுஷ்மா:

இதற்கிடையே, உ.பி தேர்தலில் பாஜக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறித்து கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, சில நேரங்களில் சந்தோஷம், சில நேரங்களில் சோகம் ("Kabhi khushi, kabhi gham") என்று இந்திப் படத்தின் தலைப்பைச் சொல்லி விட்டுப் பேசிய சுஷ்மா, உ.பி. மக்கள் பகுஜன் சமாஜ் கட்சியை தோற்கடிக்க விரும்பினர், சமாஜ்வாடிக் கட்சியை தேர்ந்தெடுக்க விரும்பினர். இதுதான் நடந்துள்ளது. இதுதான் உ.பி. தேர்தல் முடிவின் தெளிவான விளக்கம்.

பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காதது தவறு என்று நான் கருதவில்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் கூட தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

காங்கிரஸ் கட்சிக்கும் நிலைமை சரியில்லை. பஞ்சாபைப் பெறுவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் முடியவில்லை. கோவாவிலும் அவர்கள் வெல்ல முடியவில்லை. உத்தர்கண்ட்டிலும் தெளிவில்லை என்றார் சுஷ்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக