வெள்ளி, 23 மார்ச், 2012

முழுவீச்சில் அணு மின் உற்பத்தி பணி: நிலைய இயக்குனர் தகவல்

: ""கூடங்குளம் அணு மின்சாரம் விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது,'' என நிலைய இயக்குனர் மற்றும் முதல் அணு உலையின் திட்ட இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தரன் தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் கூடங்குளம் அணு மின் நிலையப்பணிகள் உடனே துவக்கப்பட்டது. ஐந்து மாத இடைவெளிக்கு பின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஊழியர்கள் என அனைவரும் பணிக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டம் மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக துவக்கப்பட்டது. இதை மக்களுக்கு பாதுகாப்புடன் அர்ப்பணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
இத்திட்டம் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார மக்கள் ஆதரவுடன் துவக்கப்பட்டது. அன்று அளித்த ஆதரவு இன்றும் தொடர வேண்டும். எனவே, எதிர்ப்பாளர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். கூடங்குளம் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகள் வழங்கவுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. கடந்த மூன்று நாட்களாக பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளன. பம்புசெட், வென்டிலேட்டர் போன்ற சில இயந்திரங்களில் மட்டும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. நேற்று முதல் மூன்றாவது "ஷிப்ட்' துவங்கப்பட்டு சுமார் 1,200 பேர் வேலை செய்கின்றனர். நாளை (இன்று) விடுமுறை. எனினும், விடுமுறை எடுக்காமல் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.
அணு உலைக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி விரைவில் துவங்கவுள்ளது. அதை சர்வதேச அணு ஏனென்சி நிறுவனம் (ஐ.ஏ.ஏ.,) மற்றும் "அட்டாமிக் ரெகுலேட்டரி பாடி' (ஏ.ஆர்.பி.,) ஆய்வு செய்யும். இது வழக்கமான ஒன்று தான். ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் இந்தியாவில் உள்ள அணு உலைகளில் வேலை பார்த்த முதுநிலை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 150 பேருக்கு உடனே கூடங்குளம் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓரிரு நாளில் வரவுள்ளனர். இதன் மூலம் முதல் அணு உலையில் இருந்து மின் உற்பத்தியை விரைவில் துவக்கப்படும். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 76 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவை. இதை கடல் நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறோம். எனவே, பேச்சிப்பாறை தண்ணீர் எப்போதும் தேவைப்படாது. இங்கு உள்ளூரை சேர்ந்த 2,000 பேர் வேலை பார்த்தனர். 5 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களும் இந்த வாரத்திற்குள் முழுமையாக வந்து விடுவர். அணு உலை பகுதியில் 920 பேரில் நெல்லை மாவட்டம் உட்பட தமிழகத்தை சேர்ந்த 600 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார். திட்ட இயக்குனர் ஆர். பேனர்ஜி (3 மற்றும் 4வது அணு உலைகள்), பொது மேலாளர் வி. செல்லப்பா (மனிதவள மேம்பாடு), பி.ஆர்.ஓ., அன்புமணி உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக