திங்கள், 5 மார்ச், 2012

எந்தஒரு செயலிலும் அறிவார்ந்த தெளிவே வெற்றி அளிக்கும் அண்ணாச்சிகளுடன் கலந்துரை


தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தான் அண்ணாச்சி என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு சமூக அடையாளம் இருக்கிறது. விருதுநகர் வட்டாரத்தில் அது ஒரு மரியாதைச் சொல். விருதுநகரைப் பொருத்தவரையில், அங்குள்ளவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராயினும், வயது வித்தியாசமில்லாமல் எல்லோருமே அண்ணாச்சிகள்தாம். ஒரு தாயின் இடுப்பிலிருந்து கொண்டு கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கைக்குழந்தையைப் பார்த்து, கல்லாவில் உட்கார்ந்திருந்த மூத்த அண்ணாச்சி, ‘அண்ணாச்சி என்ன பாக்குறீங்க? அண்ணாச்சிக்கு என்ன வேணும்?’ என்று கேட்டபோது, வாங்க, போங்க என்பது மாதிரி, அண்ணாச்சி என்பதும் அங்கே ஒரு மரியாதைச் சொல் என்று புரிந்தது.
விருதுநகரின் தொழில் வர்த்தகச் சூழலைப் பற்றி அண்ணாச்சிகளுடன் கலந்துரையாட எம்.எல்.ஏ. திரு பாண்டியராஜன் விரும்பியதையொட்டி, எம்.எல்.ஏ. வீட்டிலே ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
விரும்பினால் நீங்களும் கலந்துகொள்ளலாமே என்று எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டதால் அண்ணாச்சிகளுடன் உட்கார்ந்துகொண்டேன். புளி, புண்ணாக்கு, மிளகாய், உளுந்து, கடலை, கட்டடச் சாமான்கள், தீப்பெட்டி, ஃபயர் வொர்க்ஸ், டிராவல்ஸ், துணிக்கடை என்று பழகிப் போன, இக்கால இளைஞர்களை அவ்வளவாகக் கவராத தொழில் பின்னணி அவர்களுடையது.  கணுக்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிய நாலுமுழ வேட்டிகளுடன் அமர்ந்திருந்தார்கள். இவர்களில் பலரின் வணிகப் பரிவர்த்தனை கோடிகளைத் தாண்டும். வழங்கப்பட்ட தேநீரை மறுத்துவிட்டு, ஒரு டம்ளர் பச்சைத்தண்ணி போதும் என்று அவர்கள் வாங்கி அருந்தியபோது, ஆச்சரியப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அது சாம்பிரதாயமான கூட்டமல்ல. ஒரு informal get together. அண்ணாச்சிகள் பிரச்னைகளைப் பேச, அம்மாதிரியான பிரச்னைகளை வேறு இடத்தில் சந்தித்தவர்கள், அவற்றை எப்படி கையாண்டார்கள் என்ற உதாரணங்களை எம்.எல்.ஏ. எடுத்துச் சொன்னார். உங்களால் முடியும், நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்று அவர்களை உசுப்பேற்றாமலும், உருமா கட்டிவிடாமலும், வாங்க சென்னைக்குப் போவோம், மந்திரியைப் பார்ப்போம் என்றோ, அந்த செக்ரட்ரி என் கூடத்தான் வாக்கிங் வருவாறு, இந்த செக்ரட்ரி எங்கூடப் படிச்சவரு என்று பில்டப் கொடுக்காமல், Backward/ Forward Linkages, Industry/ Service Clustering, Value Chain போன்ற நிர்வாகக் கருத்தாக்கங்களின் அடிப்படையில், அண்ணாச்சிகளுக்கு புரிகின்ற பாஷையில் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். எம்.எல்.ஏ வீட்டு வரவேற்பறை, சிறிது நேரம் வகுப்பறையாக மாறிவிட்டது.
தொழில்நுட்பத்தில், மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் எப்படி நம்முடைய பல பிரச்சனைகளைத் தீர்த்துவைத்தனவோ, அது மாதிரி, சமூகவியலிலும் உளவியலிலும் நிர்வாகவியலிலும் அறிமுகமான சில கருத்தாக்கங்கள் நமக்குத் தெளிவை உண்டாக்கி, பிரச்னைகளைக் எளிதாகக் கையாளும் மனோதிடத்தை அளித்திருக்கின்றன. எம்.எல்.ஏ பேசிய தொடர்புகள் (Backward/ Forward Linkages), குழுமங்கள் (Industry/ Service Clustering), பொருள் மற்றும் சேவையின் சங்கிலித் தொடர் (Value Chain) இவையெல்லாம் எம்.பி.ஏ வகுப்பறைப் பாடமல்ல. அவை கார்ப்பரேட் கருத்தாக்கங்களும் அல்ல.  மக்களின் அன்றாட ஜீவனோபாயத்துடன் நேரடியாவை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவை. நாம் உண்ணும் சீவல், சீடை, சீனி மிட்டாய்க்குக்கூட Backward/ Forward Linkages உள்ளன.Value Chain உண்டு. இதைப் புரிந்து கொள்ளும் அனுபவம் இருந்ததாலும், நானேகூட பங்கேற்பு Value Chain-ஐ சில இடங்களில் பரீட்சித்துப் பார்த்து அதன் பலன்களை உணர்ந்துகொண்டிருந்ததாலும், எம்.எல்.ஏ கலந்துரையாடலிலிருந்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது.
எம்.எல்.ஏ தொடர்ந்தார். ஒரு பொருளின் Value Chain-ல், மூலப்பொருள் (Raw Material Supply) சப்ளை செய்தவர்கள் சில காலம் நல்ல லாபம் பார்த்தார்கள். அதை பிராசஸ் செய்து பொருளாக்கியவர்களுக்கு சிலகாலம் லாபம் கிடைத்தது. சில காலம் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்தது. இந்த லாப விகிதம் எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பொருளின் Value Chainல் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் சமநிலையையும் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் எந்த நிலையைப் பிடிப்பது, எதை விடுவது என்று திட்டமிட வேண்டும்
இளம் தொழில் முனைவோருக்கான ஒரு அமைப்பு இருந்தால் வணிகத்தைப் பற்றியும், வணிகச் சூழலில் ஏற்படும் சவால்களைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பேற்படும் என்று கூறிய எம்.எல்.ஏ, அப்படிப்பட்ட ஓர் அமைப்பை விருதுநகரில் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று சொன்னபோது, அந்த கருத்தை எல்லா அண்ணாச்சிகளும் வர்வேற்றார்கள். அந்த அமைப்புக்குப் பொருத்தமான பெயரிடவேண்டுமென்றும் (Branding), அப்பெயரே அந்த அமைப்பின் நோக்கத்தை எடுத்துக் கூறுவதாக இருக்கவேண்டும் என்றும் சொன்னபோது, அதைப் புரிந்துகொண்ட அண்ணாச்சிகளில் ஒருவர், பெயரில்தானே இருக்கின்றது பெருமாளுக்கான மகிமை என்பதுமாதிரி, கேரளாவை மையப்படுத்தி தான் செய்துவந்த வணிகத்தால், ‘கேரளா டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்று தன் கடைக்குப் பெயரிட்டதையும், அதனால் உண்டான சாதகங்களையும் சுவைபட கூறினார்.
அரசியல், அரசியல் ரீதியான தொடர்புகள், முறைகேடாக சம்பாதித்த முதலீடு, அரசின் தவறான கொள்கை முடிவுகள் போன்றவை ஒரு பொருளின்/ சேவையின் சங்கிலித் தொடரில் (Value Chain) குழப்பத்தை உண்டாக்கி, ஆண்டாண்டுகாலமாக அதையே ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கும் பலரை ஓரங்கட்டி ஓட்டாண்டிகளாக்கிவிடுவதை நாம் பார்த்திருக்கின்றோம். Traffic Route தெரிந்தால் எப்படி நம் பயணத்தை சுலபமாக்கிக் கொள்ளமுடிகின்றதோ, Disease Chain தெரிந்தால் எப்படி ஒரு நோய்த் தாக்கதிலிருந்து நம்மால் தப்பிக்க முடிகின்றதோ, அது மாதிரி Value Chain பற்றிய தெளிவு இருந்தால் தொழில் மற்றும் வணிகச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியும் அல்லவா?
சாதி/மத உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கும், அரசியல் தொடர்புகளால் எளிதாக சலுகைகளைப் பெற்றுக்கொள்ளமுடிந்தவர்களுக்கும் அறிவார்ந்த தெளிவு தேவைப்படாதுதான். தொழிலில் வெற்றிபெறுவதென்பது அவர்களுக்கு எளிதாக இருந்தாலும், அத்தகைய வெற்றி தாற்காலிகமானதே. எந்தஒரு செயலிலும் அறிவார்ந்த தெளிவே ஸ்திரத்தன்மையை அளிக்கும். அப்படிப்பட்ட அறிவார்ந்த தெளிவை உருவாக்க விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாண்டியராஜன் முயல்கிறார்.
0
பேரா. எஸ்.ரெங்கசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக