வியாழன், 1 மார்ச், 2012

ஜெயலலிதாவுக்கு "எதுவுமே" தெரியாமல் அவர் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்த ?????


Sasikala
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ தெரியாது, ஆனால், இந்த விஷயத்தில் போயஸ் கார்டன் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பெரும் யூகங்களைக் கிளப்பி வருகின்றன.

ஜெயலலிதாவுக்கு "எதுவுமே" தெரியாமல் அவர் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததில் சசிகலா அண்ட் கோவுக்குத்தான் முழுப் பங்கு இருக்கிறது என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்பது தான் போயஸ் கார்டனின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.

பெங்களூர் நீதிமன்றத்தில் ஆற அமர இழுத்தடித்து, சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் பி.பியை எகிற வைத்து சசிகலா அளித்து வரும் "பதில்கள்" போய்க்கொண்டிருக்கும் பாதை மேற்சொன்ன திசையை நோக்கித்தான்...

ராவணன் தொடங்கி எம்.நடராஜன் வரை சசி அண்ட் கோ பிரதிநிதிகள் சிறையில்! சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில்!


பெங்களூர் நீதிமன்றத்துக்கு வந்து போகும் சசி, இளவரசி, சுதகாரன் தவிர வேறு சில கதாபாத்திரங்களும் உண்டு. போயஸ் கார்டனின் திட்டத்தை அரங்கேற்றி வருபவர்கள் இவர்கள்தான்!

அதாவது சசிகலாவின் குடும்பத்துக்கு போலீஸ் கஸ்டடி, ஜூடிசியல் கஸ்டடி என்றால் சசிகலாவுக்கு போயஸ் கார்டன் கஸ்டடி!.

சசிகலாவின் பாதுகாவலர்கள் என்பவர்கள் அனைவருமே கார்டன் கட்டளைப்படி நியமிக்கப்பட்டவர்கள்.

அவர் அளிக்கின்ற பதில்களை பக்கத்தில் அமர்ந்து கொண்டே சொல்லித் தருவதும் திருத்துவதும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார்தான்!. இன்னொரு கார்டன் பிரதிநிதி ரங்கராஜ்.

யார் இந்த ரங்கராஜ்?:

ஜெயலலிதாவின் 1991ம் ஆண்டு ஆட்சிக்காலத்து தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் (நிலக்கரி ஊழல் புகார் எழுந்தபோது இவரை 'கரி'பாஸ்கள் என்று பத்திரிக்கைகள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது). இவரது உதவியாளராக இருந்தவர்தான் இந்த ரங்கராஜ். போயஸ் கார்டனின் நம்பிக்கைப் பிரதிநிதி. இவர்தான் பெங்களூரில் சசிகலா நீதிமன்றம் வரும்போது அவரது உதவியாளர் என்ற பொறுப்பு வகிப்பவர்.

விசாரணையின் போது இந்த ரங்கராஜனும் சில போயஸ் தோட்டத்து வழக்கறிஞர்களும் சசிகலாவின் அருகிலேயே போய் சில விஷயங்களை சொல்லப்போய் நீதிபதி மல்லிகார்ஜுனையா இது என்ன கான்பரென்ஸா? என 'சூடானதும்' நடந்தது.

இவர்கள் கஸ்டடியை மீறி சசிகலா தன் போக்கில் ஏதாவது சொல்லிவிட்டால் மன்னார்குடி கேங்கில் இன்னொரு நபருக்கு போலீஸ் கஸ்டடி ரெடியாகிவிடும்!

நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள்:

இவர்கள் போக பத்திரிக்கையாளர்களுக்கான பகுதியில் வந்து உட்கார்ந்து சசிகலா வாக்குமூலம் கொடுக்கத் தொடங்கியவுடன் செல்போனை ஆன் செய்துவிடுகிறவர் ஐ.ஜி. குணசீலன்!

இதேபோல் ஏற்கெனவே ஜெயலலிதா அளித்த 313 வாக்குமூலத்தை கையில் வைத்துக் கொண்டு சசிகலாவின் பதில்களோடு ஒப்பிட்டுப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு உளவுப் பிரிவு அதிகாரி!

சர்ச்சைக்குரிய சென்னை லஸ் சர்ச் சாலை நிலம், ஊத்துக்காடு அருகே வெலக்காயம் கிராமத்து நிலம், பையனூர் பங்களா விவகாரம் போன்றவற்றிலும் ஜெயலலிதாவுக்கு எந்த ஒரு சம்பந்தமே இல்லை போயஸ் கார்டன் எதிர்பார்த்தபடியான பதிலை சொல்லிவிட்டார் சசி.

இதேபோல் பல கேள்விகளுக்கும் "ஜெயலலிதாவுக்கோ- போயஸ்தோட்டத்துக்கோ" எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற பதிலே சசியின் வாயிலிருந்து வருகிறது.

இதைத்தானே போயஸ் கார்டன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

பெங்களூர் வழக்கில் சசிகலா அளிக்கப் போகும் வாக்குமூலம் இன்னும் சில காலம் நீடிக்கக் கூடும்.

அதுவரை போலீஸ் கஸ்டடி, ஜூடிசியல் கஸ்டடியில் என ராவணன், திவாகரன், நடராஜன் ஆகியோர் அடைபட்டிருக்கத்தான் வேண்டும்! பெங்களூரில் சசிகலாவும் "போயஸ் கார்டன் கஸ்டடியில்" தான் இருந்தாக வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக