சனி, 31 மார்ச், 2012

சசியை பற்றி போட்டுகொடுத்ததையே ஜெயா சசியிடம் சொல்லிவிடுவாரோ அமைச்சர்கள் நடுக்கம்


சசிகலா அறிக்கையின் பின் கிடுகிடு அமைச்சர்கள் மீது… ‘அதே கண்கள்’

Viruvirupu
அ.தி.மு.க. வி.ஐ.பி.-கள் இப்போது ‘சசிகலா’ என்று உச்சரிப்பதையே நிறுத்தி விட்டார்கள். அடாடா, அவரை அதற்குள் மறந்து விட்டார்களா என்று அவசரப் படாதீர்கள். பவ்வியமாக, ‘சின்னம்மா’ என்று உச்சரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். அமைச்சர்கள் நடுக்கம், சசியை பற்றி போட்டுகொடுத்ததையே ஜெயா சசியிடம் சொல்லிவிடுவாரோ ?
சீனியர் அமைச்சர்கள் உட்பட ஓவர்நைட்டில் சின்னம்மா பாராயணத்துக்கு தாவிய காரணம், சின்னம்மாவின் ‘சகோதரியே..’ அறிக்கைதான்.

சின்னம்மா விவகாரத்தில் இன்றைய தேதியில் என்ன நடக்கிறது என்பதில் சின்னம்மாவே தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார். தலையை பிய்த்துக் கொண்டு குழப்பத்தில் இருப்பவர்கள் கட்சிக்காரர்கள்தான். அதுவும் அமைச்சர்களின் கதி, அதோகதி!
இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பரிதாப நிலையைப் பாருங்கள். சசிகலா அறிக்கை விட்டிருக்கும் விஷயம் சதாரண அடிமட்ட தொண்டனுக்குகூட தெரிந்த பின்னர்தான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியவந்தது. காரணம், இந்த அறிக்கை ஜெயா டி.வி.யில் துவங்கி, கிட்டத்தட்ட அனைத்து டி.வி.க்களில் ஃப்ளாஷ் நியூஸாக ஓடிக்கொண்டு இருந்தபோது, இவர்கள் சட்டசபைக்குள் இருந்தார்கள். சபை நிகழ்வுகள் நடந்துகொண்டு இருந்தன.
இப்படியொரு அறிக்கை வரப்போவதை முதல்வர் யாருக்கும் தெரிவித்திருக்கவில்லை.
சட்டசபை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாக வேண்டும் என்பது ஜெயலலிதாவின் உத்தரவு என்று சொல்கிறார்கள். அதில் ஒரு டாக்டிக் இருப்பதாகவும் தெரிகிறது.
சசிகலாவின் அறிக்கை வெளியாகும் அதே நேரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அவர்களது ரியாக்ஷன் என்ன என்பதை அம்மாவின் கவனத்துக்கு கொண்டுவர முடியாது. அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூட்டப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வெளியானால் அவர்களது ரியாக்ஷன்களை இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.
உளவுத்துறை வட்டாரங்களில் கிடைத்த தகவல்களில் இருந்து ஒரு விஷயம் தெரியவந்தது. சசிகலாவின் அறிக்கை பிளாஷ் ஆன சிறிது நேரத்தில் சட்டசபை கேன்டீன் முதல், வராந்தா வரை பரபரப்பாக இருந்த எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் ரியாக்ஷன்களை சில கண்கள் நன்றாகவே கவனித்து பதிவு செய்து கொண்டன. உளவுத்துறை டீம் ஒன்றின் புரொஃபஷனல் கண்கள் அவை.
சட்டசபையில் காலை 10 மணியளவில் நடமாடிய கட்சிக்காரர்கள் யாருக்குமே, இப்படியொரு அறிக்கை வெளியாகிறது என்ற விஷயம் தெரிந்திருக்கவில்லை. ஜெயா டி.வி.-யில் அறிக்கை வாசிக்கப்பட்டபோது, சபை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. சில அமைச்சர்களின் ஆல்-இன்-ஆல் உதவியாளர்கள், அறிக்கை டி.வி.-யில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று தெரிந்தும், ‘அண்ணன்’ காதில் போடமுடியாமல் வெளியே துடித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் மகா டிமான்டில் இருந்தவர்கள், சட்டமன்ற வளாகத்துக்குள் இருந்த மீடியாக்காரர்கள்தான். அநேக கட்சிக்காரர்கள் மீடியாக்காரர்களை மொய்த்துக் கொண்டு, “இது உண்மைதானா? உங்க ஆபிஸில் கேட்டு சொல்லுங்க பிளீஸ்” என்று பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றையும், சில கண்கள் வாட்ச் பண்ணிக் கொண்டிருந்தன.
பதினொன்றரை மணிக்குப் பிறகு கேன்டீனுக்கு சிறுசிறு குழுக்களாகவும், தனித்தனியாகவும் அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வர துவங்கினார்கள். அந்த நேரத்தில் கேன்டீனில் சில கண்கள் இவர்களுக்காக ரெடியாக காத்திருந்தன. அப்போதுதான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா அறிக்கை விபரம் தெரியத் துவங்கியது.
இவர்களில் பலரின் பாலிடிக்ஸே சசிகலா சின்டிகேட் நடவடிக்கைகளை பேஸ் பண்ணிய அரசியல்தானே! விஷயம் அறிந்தவுடன் முகத்தை சலனமில்லாமல் வைத்திருக்க இவர்கள் என்ன கைதேர்ந்த நடிகர்களா? தாராளமாக பேஸ் எக்ஸ்பிரெஷன் காட்டினார்கள். நல்லவேளையாக யாருடைய கையில் இருந்தும் டீ கப் தவறி விழவில்லை.
விஷயம் தெரியவந்ததும், சட்டசபை களைப்புக்கு டீ குடிக்கவா முடியும்? பரபரப்பாக தமக்கிடையே பேசிக்கொண்டார்கள். நடப்பதெல்லாம் கனவா, நிஜமா என்பதே பலருக்கு சந்தேகம்.
காரணம், இந்த அறிக்கை வெளியாவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்புதான் அம்மா, ஒரு செட் எம்.எல்.ஏ.க்களை அழைத்து “சசிகலா குடும்பத்துடன் நீங்கள் தொடர்பு வைத்திருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கிறது” என்று அலற வைத்திருந்தார். அந்த நேரத்தில் சிலர் சசிகலா குடும்பத்தினர் பற்றி கொஞ்சம் அப்படி-இப்படியாகவும் சொல்லி விட்டிருந்தார்கள். “அம்மா.. நாங்க அவுகளை ஒதுக்கி வெச்சுட்டோமில்ல” என்று சத்தியம் பண்ணிவிட்டு வந்திருந்தார்கள்.
அது நடந்து 24 மணி நேரத்தில் சசிகலா அறிக்கை டி.வி.-யில், அதுவும் ஜெயா டி.வி.-யில் வாசிக்கப்பட்டால், அவர்களுக்கு எப்படி இருக்கும்?
இதற்கிடையே ஒரு வதந்தி சுற்றிவரத் துவங்கியது. “சின்னம்மா கார்டனுக்கு போயிட்டாங்களாமே.. அம்மா சபை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கார்டன் போகும்போது, அங்கே சின்னம்மா வரவேற்பாங்களாம்” என்று யாரோ ஒரு பதட்ட எம்.எல்.ஏ. கொளுத்திப் போட்ட கதை ரவுண்ட் அடிக்கத் துவங்கியது.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அந்தக் கதையை கேட்கும்போது சிலர் நாடியில் கை வைத்தார்களாம். ஓரிருவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்களாம். இவர்களின் பதட்ட நடவடிக்கைகள் எல்லாவற்றையும், ‘அதே கண்கள்’ ஓசைப் படாமல் கிர்ர்ர் என்று பதிவு செய்து கொண்டிருந்தன.
சபை நடவடிக்கை முடிந்ததும் இதுபற்றி பேசுவதற்கு அவர்களுக்கு இருந்த பிரைவசியான இடம், அமைச்சர்களின் ரூம்கள்தான். சிறு சிறு குழுக்களாக ஒவ்வொரு அமைச்சரின் ரூமுக்குள்ளும் போய் டிஸ்கஷனில் ஈடுபடத் துவங்கினார்கள். எந்தெந்த அமைச்சர்களின் ரூம்களுக்கு எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் செல்கிறார்கள் என்பதும், ‘அதே கண்களால்’ கவனிக்கப்பட்டது.
யார் யார் ஒரே செட் என்பது தெரிந்துவிடும் அல்லவா?
சட்டமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய போது, கிட்டத்தட்ட அனைவருமே குழப்பத்தில் இருந்தார்கள். அந்த நிமிடத்தில் இருந்து அவர்களில் பலரது நடவடிக்கைகள் வாட்ச் பண்ணப்படும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்களா, என்பது எமக்கு தெரியாது.
எமக்கு தெரிந்ததெல்லாம், இந்த வார இறுதி சனி ஞாயிறு இரு தினங்களும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பற்றிய செய்திகளாக எமக்கு வந்து கொட்டப் போகின்றன என்பதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக