சனி, 31 மார்ச், 2012

சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்

பெங்களூரு:கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.,யான சங்கர் பிதரி, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, சதாம் உசேன், முகமது கடாபியை விட மோசமாக நடந்து கொண்டவர். எனவே, அவருக்கு டி.ஜி.பி., பொறுப்பு வழங்கப்பட்டது சரியல்ல என்று, கர்நாடக ஐகோர்ட், பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.,யாக சங்கர் பிதரியை நியமித்ததை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவு டி.ஜி.பி., அப்துல் ரஹ்மான் இன்பேன்ட், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (சி.ஏ.டி.,) வழக்கு தொடர்ந்தார்.
இன்பேன்டுக்கு சாதகமாக, சி.ஏ.டி., தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில், சங்கர் பிதரி மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீது, நீதிபதி குமார் அளித்த தீர்ப்பு விவரம்:மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், எவ்வித குறைபாடும் இல்லை. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, கர்நாடகாவும், தமிழகமும் இணைந்து நடத்திய சிறப்பு அதிரடிப்படை வேட்டையில், சங்கர் பிதரி ஏராளமான அத்துமீறலில் ஈடுபட்டவர் என்பது, பலரது வாக்குமூலத்திலிருந்து வெட்ட வெளிச்சமானது. 14 ஆதிவாசி பெண்களுக்கு, பல கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, அரசு வழங்கியுள்ளது. இதெல்லாம், சங்கர் பிதரியின் அத்துமீறல்களால் நிகழ்ந்தவை.சதாம் உசேன், கடாபியின் செயல்பாடுகளை விட, சங்கர் பிதரியின் செயல்பாடு குறைந்ததல்ல என்று, இந்த கோர்ட் கருதுகிறது. எனவே, உடனடியாக அவரை பதவியிலிருந்து அரசு விடுவிக்க வேண்டும். இல்லாவிடில், மாநில மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக