வெள்ளி, 30 மார்ச், 2012

இந்தியாவில் பெண்கள் வைன் அருந்துவது முன்புபோல பெரிய விஷயமல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடந்த வருடம் இந்தியாவில் வைன் உற்பத்தி 12 லட்சத்து 50 ஆயிரம் பாரல்களாக, அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலுள்ள இந்த அழகான மலைப்பிரதேசத்தைப் பாருங்கள். இதன் பெயர் குண்டமகெரே. கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது. பச்சைப் பசேல் என்றுள்ள இதன் அடிவாரத்தில் தலையில் ஒருவித முண்டாசு அணிந்த விவசாயிகள் தினை, சோளம் போன்ற இந்தியாவின் சம்பிரதாயமான தானியங்களையும், பட்டுப்புழுக்களை வளர்க்க உதவும் முசுக்கொட்டை மரங்களையும் வளர்த்து வந்ததை நீங்கள் கண்டிருக்கலாம்.
அப்படியானால் நீங்கள் பல வருடங்களுக்குமுன் அங்கே போயிருப்பீர்கள். உங்களை அப்டேட் பண்ணவேண்டும்!

முசுக்கொட்டையா? எந்த ஊரில் ஐயா இருக்கிறீர்?

இப்போது இந்த மலையடிவாரத்துக்குப் போனால், வேறுவிதமான ஒரு காட்சியைத்தான் காணவேண்டியிருக்கும். தினை, சோளம், முசுக்கொட்டை மரங்கள் எதுவுமே கண்ணில் படாது. ஆனால் அதற்காக பயிர்கள் இல்லை என்றில்லை. இருக்கின்றன. இவை வேறு பயிர்கள். அவற்றின் பயன்பாடும் வேறு (சேச்சே… கஞ்சாச் செடி இல்லீங்க)
கபில் குரோவர்
இதோ மலையடிவாரத்தில் வேளான்மை செய்யும் கபில் குரோவரைப் பாருங்கள். இவரைப் போன்றவர்களின் நிலங்கள் இப்போது திராட்சைத் தோட்டங்களாக மாறி விட்டன.  இவரது தந்தை கான்வெல் 1989ம் ஆண்டிலேயே திராட்சைத் தோட்டங்களை வளர்க்க ஆரம்பித்து விட்டார்.
1989க்கு முன்பெல்லாம் இந்திய பொருளாதாரம் ஜவுளித் தொழிலையே அதிகம் நம்பியிருந்தது.  ஆகையால்தான் பட்டுத்துணிகளை உருவாக்கத் தேவையான பட்டுப் புழுக்களை அதிகம் வளர்த்து வந்தார்கள்.  பணம் படைத்தவர்கள் இந்த பட்டுத்துணி தொழிலில் பணத்தைப் போட்டு பலமடங்காக்கினார்கள்.
ஆனால் இப்போது மேலைநாட்டுப் பாணியில் வாழ விரும்பும் இந்தியாவில் வைன் மீதான மோகம் புதுமையான வியாபார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடந்த வருடம் இந்தியாவில் வைன் உற்பத்தி 12 லட்சத்து 50 ஆயிரம் பாரல்களாக, அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது.
வைன் தயாரிக்கப் பயன்படும் அந்த கசப்பும் இனிப்பும் நிறைந்த திராட்சைப் பழங்களின் தோட்டங்களை கபில்குரோவர் ஆசையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவைதான் இன்றைய இந்தியாவில் அவருக்கு கற்பகதரு. மற்றய மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது,  இந்தியாவில் வைன் சந்தை மிகச் சிறியதுதான் என்றாலும் அதன் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.  அது கபில் குரோவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது.

அந்த நாளில் அடித்தால் ‘நச்’சென்று ஏறுமுங்க!

முன்பெல்லாம் இந்தியாவில் போதைக்காக மாத்திரம் விஸ்கி போன்ற மது வகைகளையே இந்தியாவின் உயர் வகுப்பினர் குடிப்பது வழக்கம்.
“நச்”சென்று அடிக்கும் நாட்டுச் சரக்கல்ல... இது புதிய (அலை)வரிசை!
இப்போது காலம் மாறிவிட்டது. போதைக்காக மாத்திரமே மது என்ற நிலை மாறி உயர் வகுப்பினர் விருந்து டேபிள்களில் தண்ணீருக்குப் பதிலாக வைன் வந்திருக்கிறது. இந்தியாவில் பெண்கள் வைன் அருந்துவது முன்புபோல பெரிய விஷயமல்ல.
இந்த அடிப்படையில்தான் வைன் தயாரிப்புக்கு இந்தியாவில் வருங்காலம் பிரகாசமாக இருக்கிறது.  இருந்தாலும் மதுபான வகைகளில் இன்னமும் போட்டி நிலவிக் கொண்டு இருக்கிறது. பிரான்ஸில் இருப்பதுபோல, விற்பனையில் வைன் முதலிடத்துக்கு இன்னமும் வரவில்லை.
வைன் இந்தியர்களிடையே பிரபல்யமடையத் தொடங்கிய காலத்தில் உள்நாட்டில் பொன்னை வைக்குமிடத்தில் பூவை வைப்பதுபோல எங்காவது ஒரு மூலையிலுள்ள ஆலையில் வைன் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு தயாரிக்கப்படும் வைன், தமிழகத்தில் கிடைக்கும் காளி மார்க் கோலி சோடாவைவிட அதிக புளிப்பாக இருக்கும்.
இதனால் இந்தியாவில் பருகக்கூடிய தரத்திலுள்ள வைன் வெளிநாடுகளில் இருந்துதான் இயக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு வரிவிதிப்பும் அதிகம், அதனால் விற்பனை விலையும் அதிகம். இந்த வரிவிதிப்பு வைன் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

வெளிநாட்டுச் சரக்கு இருக்குதுங்களா?

இதனால் உலக வர்த்தகக் கழகத்திடம் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவின் அதியுச்ச வரிவிதிப்புப் பற்றி பல புகார்களை கிளப்பியதை அடுத்து, இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது.  இதனால் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ஷிராஸ் வைன்களும் இந்தியாவுக்குள் சாதாரண மதுபானக் கடைகளுக்கும் வர  வழியேற்பட்டது.
“இது வெளிநாட்டு வைன். முதலில் டேஸ்ட் பண்ணுங்கள்.. அப்புறம் கிளாஸில் ஊற்றலாம்”
அதற்குமுன் ஷிராஸ் வைன்களை இந்தியாவின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் பார்களில் மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது.
இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட வைன் மீதான இந்த வரிக்குறைப்பு வைன் பிரியர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அது இந்திய வைன் உற்பத்திக்கு தலையில் விழுந்த அடியாக இறங்கியது. கபில் குரோவரின் குண்டமகெரே தோட்டத்தில் உற்பத்தியாகும் திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் வைன் எந்த விலைக்கு கிடைக்கிறதோ, கிட்டத்தட்ட அதே விலைக்கு, ஆஸ்திரேலிய ஷிராஸ் வைனும் தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
இப்போது இந்தியாவில் வைனுக்கான இறக்குமதி கட்டணம் 150 சதவீதம் விதிக்கப்படுகிறது. (இதற்குமுன் 550 சதவீதம்) ஆனால் வெளிநாடுகளில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால், வரி கட்டியபின்னரும் இந்தியத் தயாரிப்பு விலைக்கு அருகே வருகின்றது. இதனால் வெளிநாட்டுத் தரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தயாரிப்பு இல்லாவிட்டால் இந்திய வைன்கள் விலைபோகாது என்ற நிலை.
தயாரிப்பில் தரம் இருக்க வேண்டுமானால் அதிக தயாரிப்பாளர்கள் வரவேண்டும். அதற்கு வைன் சந்தை விரிவடைய வேண்டும். அதிக உற்பத்தி தயாரிப்பு விலையைக் குறைக்கும். அதற்கான சந்தர்ப்பம் மெதுவாக ஆனால் சீராக இந்தியாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

சிக்காக்கோ ஸ்டைலை சின்னாளம்பட்டிக்கு கொண்டுவர…

இந்தியாவின் வைன் சந்தை தற்போது சீரான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
முன்பைவிட இப்போது சாய்ஸ் அதிகம்! (அட.. வைனைச் சொன்னோமுங்க)
இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.  இவர்கள் எல்லாம் இப்போது தாங்கள் வெளிநாடுகளில் உணவருந்திய ஸ்டைலில் இந்தியாவிலும் உணவகங்கள் தேவை என்று விரும்புகிறார்கள்.  இதனால் ஆடம்பர செலவு மிக்க கிளப்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
அது மாத்திரமல்ல. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பிரபலமாக இருப்பது போன்று உள்ளூர் திராட்சை தோட்டங்களுக்கே சென்று வைன் அருந்தும் சுற்றுலாக்களும்கூட இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின்  நவீன ரெஸ்டாரண்ட்டுகளில் வித விதமான வைன்கள் கிடைக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக