புதன், 28 மார்ச், 2012

இலவச `சானிட்டரி நாப்கின்' திட்டம்: ஜெ. தொடங்கி வைத்தார்

இலவச `சானிட்டரி நாப்கின்' வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் 40 லட்சம் இளம்பெண்கள், 7 லட்சம் பிரசவித்த தாய்மார்கள், 700 பெண்கைதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள 500 பெண் நோயாளிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் தடுப்பு
வளர் இளம் பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்று நோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைப்பதற்காக ஏழு வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கி இத் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா, தொடங்கிவைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான், இந்த திட்டம் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படவிருக்கிறது.
இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 44 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவாகும்.
பள்ளி மாணவிகள்

இந்த சானிடரி நாப்கின்கள் அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.

சிறைச்சாலை பெண் கைதிகள்

மேலும், இந்த திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 6 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும். இது தவிர, சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு சானிடரி நாப்கின்கள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.

40 லட்சம் இளம்பெண்கள்

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும், சுமார் 40 லட்சம் வளர் இளம் பெண்கள், 7 லட்சம் பிரசவித்த தாய்மார்கள், 700 பெண் கைதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள 500 பெண் நோயாளிகள் பயன் அடைவார்கள்.

இந்த திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பெண்ணிற்கும் வளர் இளம் பெண்கள் நலக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது. வளர் இளம் பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு ஆகியவை, குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும். வளர் இளம் பெண்களின் ரத்த சோகை தடுப்புத் திட்டமாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும் எனவும் அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக