புதன், 28 மார்ச், 2012

அமைச்சர் ஏ.கே.அன்டனி சிக்கினார், “எனக்கு ஏற்கனவே கதை தெரியும்!”

ராணுவத் தளபதி வி.கே.சிங் இரு தினங்களுக்குமுன் போட்ட குண்டு, மத்திய அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கிவிட்டது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டன், “தனக்கு ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்ற விஷயத்தை ராணுவத் தளபதி என்னிடம் தெரிவித்தது உண்மைதான்” என்று தெரிவித்திருப்பது, மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி திஜேந்தர்சிங் என்ற விஷயம், ராஜ்யசபாவில் வெளிப்படையாக பேசப்பட்டு பதிவாகிவிட்டது. திஜேந்தர்சிங் தற்போது மத்திய அரசு தொடர்பான ராணுவ விவகாரங்களில் லாபி செய்யும் நபராக உள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் அன்டனி, “திஜேந்தர்சிங் தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த விவரத்தை, என்னிடம் ராணுவத் தளபதி கூறினாலும், அதை அவர் அந்த நேரத்தில், பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எழுத்து மூலமான புகார் ஒன்றையும் அவர் தரவில்லை. அதனால், நானும் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்தக் கூற்றை இறுகப் பற்றியிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், “இது ஒரு பெரிய விஷயம். அது அமைச்சருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. சொன்னவர், இந்த நாட்டின் ராணுவத் தளபதி. அப்படியிருந்தும், ராணுவத் தளபதியின் புகாரை அமைச்சர் எப்படி வெகு இயல்பாக எடுத்துக் கொண்டார்?” என்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் சீனியர் எம்.பி. அலுவாலியா,“2010 செப்டம்பர் 11-ம் தேதி, லஞ்சம் கொடுக்க ஒருவர் முயற்சி செய்த விஷயம் அமைச்சருக்குத் தெரியவந்தும், அது குறித்து இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை? இதுதான் முக்கிய கேள்வி. சம்பவம் நடந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, ஊடகங்களில் விஷயம் வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட பின்னரே, இதைப் பற்றி அமைச்சர் வாய் திறக்கிறார். ஏன் இந்த கால தாமதம் என்று சொல்லவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது” என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் நேரடித் தொடர்பு இல்லாத அமைச்சர் ஏ.கே.அன்டனி, வசமாகத்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார். “அமைச்சர் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார்” என்பதையே எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தப் போகின்றன.
இது ஆரம்பம். அடுத்த கட்டத்தில், “கடமையை செய்யாத அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று சொல்ல துவங்கும் பா.ஜ.க.
மத்திய அரசின் அதிஷ்டத்தைப் பார்த்தீர்களா? சிக்கலுக்கு உள்ளாகும் அமைச்சர்களில் பெரும்பாலானோர், தெற்கில் இருந்து சென்ற அமைச்சர்களாக உள்ளார்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக