வெள்ளி, 30 மார்ச், 2012

சென்னை துப்பரவுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்தவும், வளாகங்களை பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்பட உள்ளன.
அதற்கான ஆணை, விரைவில் பிறப்பிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறைந்தளவில் பணியாளர்கள்: தமிழகத்தில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட, 245 மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும், துப்புரவு பணியாளர், வார்டு பாய் உள்ளிட்ட பணியாளர்கள், அரசால் நியமிக்கபட்டுள்ளனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகளில், தலா, 80 காலி பணியிடங்கள் என, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தேவையான அடிப்படை பணியாளர்களை விட, குறைந்த அளவிலேயே

உள்ளனர். இதனால், மருத்துவமனையின் சுத்தம், முகம் சுளிக்கும் அளவில் இருக்கிறது. ஆலோசனை: துப்புரவு பணியாளர்களை நியமிப்பதால், அவர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்க வேண்டும்; கூடுதல் செலவை தவிர்க்க, தனியார் நிறுவனங்கள் மூலம் மருத்துவமனையை சுத்தப்படுத்தலாம் என, தெரிவிக்க பட்டு உள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் உள்ள அடிப்படை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்பாமல், அவர்களுக்கு பதில் தனியார் நிறுவனங்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்துவதற்கு, அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து, அனைத்து மருத்துவமனைகளிலும், துப்புரவு பணியில் ஈடுபட தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஆணையை, அரசு விரைவில் வெளியிட உள்ளது.
சிக்கல் தீருமா? கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, இதுபோன்று தனியார் நிறுவனங்கள்

துப்புரவு பணியில் ஈடுபடுத்தப் பட்டன. அப்போது நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், துப்புரவு பணியை சிறப்பாக செய்யவில்லை. தற்போதும், அவ்வாறு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தொடர்ந்து பணிபுரிவர். அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்த, தனியார் நிறுவனங்களை நியமிப்பதற்கான ஆணை, இன்னும் வழங்கப்படவில்லை; ஆனால், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது ஏற்பட்ட சிக்கல்கள், தற்போது ஏற்படாது. துப்புரவு பணியில் ஈடுபடும், தனியார் நிறுவனங்களுக்கான அனைத்து விதிகளும் தயார் செய்யப் பட்டு உள்ளன. நிறுவன பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்டவை, பிடித்தம் செய்யப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- பா.நாகராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக