செவ்வாய், 13 மார்ச், 2012

சி.பி.ஐ., முன் ராமதாஸ் ஆஜர்

அமைச்சர் உறவினர் கொலை வழக்கு தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சி.பி.ஐ., விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். விசாரணை முடிந்துள்ளதால், அடுத்தது என்ன நடக்கும்; ராமதாஸ் சிக்குவாரா என்ற பரபரப்பு, பா.ம.க.,வில் அதிகரித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரத்தில், அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஐகோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக எட்டு பேரை கைது செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சகோதரர் சீனிவாசன் மற்றும் அக்கட்சி நிர்வாகி கருணாநிதி ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் வேகம் அதிகரித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்ததாக ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது.

ஒரு வாரத்திற்குள் இந்த விசாரணை நடக்கும் என்பது குறித்த செய்தி, கடந்த 8ம் தேதி, "தினமலர்' நாளிதழில் வெளியானது.

தனயனிடம் துவங்கியது : சி.பி.ஐ., திட்டமிட்டபடி முதலில் அன்புமணியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னைக்கு வெளியேயுள்ள ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 8ம் தேதியே இந்த விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து 9ம் தேதி, ராமதாசின் மகள் வழி உறவினரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்களையும் சி.பி.ஐ., அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.இவர்களை தொடர்ந்து 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, ராமதாசிற்கு சம்மன் அனுப்பபட்டிருந்தது.ஆனால், "உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தன்னால் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக முடியாது' என, ராமதாஸ் மறுத்துள்ளார்.இதையடுத்து, 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று(நேற்று முன்தினம்) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ., தரப்பில் ராமதாசிற்கு மீண்டும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கா விட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 10 மணியளவில் சென்னையில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில், ராமதாசிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ரகசிய விசாரணையை துவக்கினர். விஷயம் வெளியே கசியாமல் இருப்பதற்காக, சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த ராமதாஸ், வாடகை காரில் வந்து விசாரணைக்கு ஆஜரானார். இருப்பினும், ராமதாசிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து, வெளியே தெரியாத வகையில் ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணி வரை: அவரிடம் தமிழ் கடவுள் பெயரைக் கொண்ட சி.பி.ஐ., அதிகாரி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இந்த விசாரணையின் போது ராமதாசிடம், 100க்கும் மேற்பட்ட கேள்விகளை சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுள்ளனர். ராமதாஸ் சகோதரர் சீனிவாசன் தெரிவித்த தகவல் அடிப்படையிலும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் தந்த தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை, அப்போது சி.பி.ஐ., அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ராமதாசிடம் மாலை 5 மணி வரை விசாரணை நடந்துள்ளது. விசாரணைக்கு மத்தியில், சி.பி.ஐ., ஏற்பாடு செய்திருந்த மதிய உணவையே ராமதாஸ் சாப்பிட்டுள்ளார்.

ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், அவற்றை கம்ப்யூட்டரில் தொகுத்து, தங்களது மேலிடத்திற்கு நேற்று அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது. மேலிடத்தின் வேகத்தை பொறுத்து இவ்வழக்கு காலதாமதம் ஆகுமா என்ற விவரம் தெரியும். தேவைப்பட்டால், மூவரிடமும் மீண்டும் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.ராமதாஸ், அன்புமணியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்திய தகவல், பா.ம.க., வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தது என்ன நடக்குமோ என்ற பரபரப்பு, பா.ம.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக