வெள்ளி, 16 மார்ச், 2012

Anna நூலகத்தை இடித்தால் தீக்குளிப்பேன்: கலைஞர் எச்சரிக்கை

சங்கரன்கோவில்: ""சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்க முற்பட்டால் நான் தீக்குளிப்பேன்,'' என சங்கரன்கோவிலில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசினார்
திராவிடம் என்ற சொல்லை சிலர் பெயரளவுக்கு வைத்திருக்கலாம். ஆனால் தி.மு.க., மட்டுமே அதனை இனவளர்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கிறது. இந்த தேர்தலை இடைத்தேர்தல் என்பதைவிட, அ.தி.மு.க.,வின் 9 மாத கால ஆட்சியை எடைப்போட்டு பார்க்கும் எடைத் தேர்தல் என கூறலாம். தற்போது மின்பற்றாக்குறையால் மக்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். "கருணாநிதிதான் தமிழகத்தை இருளாக்கிவிட்டார். நான் வந்தால் ஒளியாக்கிவிடுவேன்,' என கூறியவர்கள் தற்போது ஒளிந்துகொண்டார்கள். தமிழகத்திற்கு கிடைத்த கூடங்குளம் அணுமின் திட்டத்தையும் நிறைவேற்ற மனமில்லை. ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழியிருந்தும் பயன்படுத்த மனமில்லாமல், மக்கள் படும் கஷ்டத்தை பற்றி கவலைப்படாமலும் இருக்கிறார்கள்.
நாங்கள் கடந்த ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் கருமேனியாறு, நம்பியாறு, தாமிரபரணி என நதிநீர்இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினோம். நாங்கள் கொண்டுவந்திருந்த சமச்சீர் கல்வி திட்டத்தை சமாதியாக்க நினைத்தார்கள். நாங்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்று அதனை மீண்டும் செயல்படுத்தினோம். இந்த ஆட்சியின் 9 மாத சாதனைகளாக சிலவற்றை சொல்கிறேன்.
தடுத்துவிடமுடியாது: நான்கு லட்சம் புத்தகங்களுடன் வெளிநாட்டினரும் பாராட்டும் வகையில் அண்ணா நூலகத்தை ஏற்படுத்தினோம். ஆனால், அதனை ஆஸ்பத்திரியாக்கப் போகிறோம் என கூறுகிறார். அதற்காக சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றிருக்கிறோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மீறி ,நூலகத்தை இடித்தே தள்ளுவேன் என அடம் பிடித்தால், அந்தநாள், கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும். என்னைதொடர்ந்து எத்தனையோ பேர் நூலகத்தை காப்பாற்ற வருவார்கள். அவர்களை தடுத்துவிட முடியாது. பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் அமைந்த செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு களங்கம் ஏற்படுத்தினார்கள். பாவேந்தர், தேவநாய பாவாணர், பாரதியார் ஆகியோரது படங்களையும் அகற்றினார்கள். ஒரு ஆட்சிக்கு பிறகு மற்றொரு ஆட்சி வரும்போது, முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளை மதிக்கவேண்டும். சென்னையில் வெள்ளைக்காரர் வெலிங்டன் சிலை உள்ளிட்டவற்றை, அவர்கள் நம்மை அடிமைகளாக்கினார்கள் என்பதால் அகற்றினோம். தி.மு.க.,வினரை பல்வேறு பொய்வழக்குகளில் கைது செய்து சிறைப்படுத்துகிறார்கள். தி.மு.க.,வினர் உயிருக்கு பயப்படாதவர்கள். எங்களது இனஎழுச்சியை ஒடுக்கமுடியாது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக