திங்கள், 26 மார்ச், 2012

Air Bus விமானத்தை எதற்காக வீதியில் கொண்டு சென்றாராம்?


100 சக்கரங்களுடன் ஏர்-பஸ் விமானம், பேல்-பூரி வியாபாரிக்கு அருகே!

Viruvirupu,ஏர்-பஸ் ஏ-320 விமானம் ஒன்று டில்லியின் சந்தடி மிக்க வீதி ஒன்றில் சென்றால் எப்படியிருக்கும்? வித்தியாசமான காட்சியாக இருக்குமல்லவா? வார இறுதியில் அப்படியொரு காட்சியை டில்லியின் ஜி.டி. கர்னால் ரோடில் காணக்கூடியதாக இருந்தது. காட்சி வித்தியாசமாக இருந்ததுடன் நின்றுவிடவில்லை, விமானம் வீதிக்கு வந்ததால், 50 கி.மீ. தொலைவுவரை ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டது.
இந்த ஏர்-பஸ் விமானம் ஏர்-இந்தியாவால் தனிநபர் ஒருவருக்கு விற்கப்பட்டது. அவர், தான் வாங்கிய விமானத்தை வீதியால் கொண்டுசெல்ல முயன்றதாலேயே இவ்வளவு சிக்கலும் ஏற்பட்டது. சரி. விமானத்தை எதற்காக வீதியில் கொண்டு சென்றாராம்?
ஸ்ரீடி சாய்பாபாவின் மியூசியம் ஒன்றை அமைப்பதற்காக!
பணம் இல்லாமல் கழுத்துவரை கடனில் உள்ள ஏர்-இந்தியா நிறுவனம், தம்மிடம் இருந்த பழைய ஏர் பஸ் ஏ-320 விமானம் ஒன்றை விற்பதாக அறிவித்திருந்தது. பழைய விமானம் என்றால், பறக்கும் நிலையில் உள்ள விமானம் அல்ல. பேரீச்சம்பழ வியாபாரிக்கு போடும் அளவுக்கு டப்பா விமானம். கழட்டக்கூடிய அனைத்தையும் எடுத்துக்கொண்டுதான், விற்றார்கள்.
அதன் விலை 18 லட்சம் ரூபா.
ஏர் இந்தியாவிடம் இருந்து விமானத்தை வாங்கியவர், ராகேஷ் டிக்சித் என்பவர். இவர் பிட்டம்புரா பகுதியைச் சேர்ந்த வர்த்தகர். ஸ்ரீடி சாய்பாபா பக்தரான டிக்சித், இந்த (ஒன்றுக்கும் உதவாத) விமானத்தை வாங்கும்போதே, ஒரு திட்டத்துடன் வாங்கியிருந்தார். ஸ்ரீடி சாய்பாபா நினைவுச் சின்னமாக மியூசியம் ஒன்றை அமைப்பதே அந்த திட்டம். அலிபூரில் அதற்காக நிலம் ஒன்றையும் தயாராக வைத்திருந்தார் அவர்.
திட்டம் அருமை. ஆனால், டிக்சித் யோசித்திராத விஷயம் என்னவென்றால், இந்த விமானத்தை எப்படி அலிபூர் வரை கொண்டு செல்வது என்பதே.
ஏர்-இந்தியாவா, கொக்கா? விமானத்தின் விங், டெயில், என்ஜின் என்று சகலதையும் கழட்டிக் கொண்டு வெறும் கோது ஒன்றைத்தான் கொடுத்தார்கள். எனவே அது சுயமாக ஓடவோ, பறக்கவோ, அசையவோ செய்யாது. கட்டி இழுத்துக்கொண்டு போகவும் முடியாது. காரணம், விமானத்தில் திருப்பும் பொறிமுறை ஏதுமில்லை. ஒரே வழி, நீளமான பிளாட்-பெட் ட்ரக் ஒன்றில் ஏற்றிக்கொண்டு செல்வதுதான்.
அதைச் செய்யப் போய்தான், 50 கி.மீ. தொலைவுக்கு ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டது.
இருப்பதிலேயே மிக நீளமான ட்ரக் ஒன்றை வாடகைக்கு பிடித்தார் டிக்சித். 100 சக்கரங்கள் உடைய அந்த ட்ரக்கின் பிளாட்-பெட் மீது ஒரு கிரேனின் உதவியுடன் விமானத்தையும் ஏற்றி விட்டார்கள். அதையடுத்து ட்ரக், வீதியில் இறங்கியது.
சும்மாவே கிராமப் பகுதிகளில் இருந்து சுற்றுலாவாக ஏர்போர்ட்டுக்கு வந்து விமானங்களை பார்த்துச் செல்லும் ஏரியாவில், விமானமே வீதிவழியாக வந்தால் சும்மா விடுவார்களா? பெரும் கூட்டம் கூடிவிட்டது. விமானம் மெதுவாக நகரும் நிலை ஏற்பட்டது. போதும் போதாதற்கு, அலிபூர் செல்லும் வீதியில் இந்த விமான-ட்ரக்கால் வளைவுகளில் திரும்ப முடியவில்லை.
நடு வீதியில் நின்றே விட்டது.
வீதியிலேயே அதை பொருட்காட்சி போல பார்க்க கூட்டம் கூடி, பேல்-பூரி, பானி-பூரி வியாபாரிகள் எல்லாம் வந்து ரீடெயில் சேல்ஸ் துவங்கி விட்டார்கள்.
“யாருடைய சரக்கையா இது?” என்று ட்ராக் டிரைவரை போலீஸ் விசாரித்தபோது, அவர் டிக்சித்தின் செல் நம்பரை கொடுத்தார்.
போலீஸ் டிக்சித்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “எனக்கு விமானங்கள் பற்றியெல்லாம் அவ்வளவாக தெரியாது. நான் விமானத்தை திருடவில்லை. ஏர்-இந்தியாவிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ளேன். அலிபூரில் உள்ள எனது சொந்த நிலத்தை வைப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். இதில் என்னய்யா தவறு?” என்று எகிறிவிட்டார்.
“விமானத்தை வாங்கியது தவறு கிடையாது. அதை பகலில் எடுத்துச் செல்ல கூடாது. இரவில் ட்ராபிக் இல்லாத நேரத்தில், அதுவும் போலீஸில் சொல்லி முன் அனுமதி பெற்றுத்தான் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறி, இரவு வரை ட்ரக்கையும், விமானத்தையும் ஓரங்கட்டி நிறுத்தி விட்டது போலீஸ். (பைசா கொடுக்கலாம் என்றாலும், த்ரீவீலருக்குதான் மாமூல் பிக்ஸ் பண்ணி வைத்திருப்பார்கள். இதுவோ ஹன்ட்ரட் வீலர்! எந்த ரேட்டில் பணம் வாங்குவது?)
இரவுவரை அந்த ஏரியா முழுவதும் திருவிழா கூட்டம்தான்! வேறு கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் வரத் துவங்கியிருந்தார்கள்.
இதற்கிடையே மற்றொரு வதந்தியும் பரவி விட்டது.
விமானம் ஒன்று பறக்கும்போது பழுது ஏற்பட்டு எமர்ஜென்சி லேன்டிங்காக வீதியில் இறங்கி நிற்கிறது என்பதே அந்த வதந்தி! இதனால், விமானத்தைப் பார்க்க மேலும் கூட்டம் திரண்டு வரத் துவங்கி விட்டது! ஒரு வழியாக அனைவரையும் கிளியர் பண்ணி, நள்ளிரவுக்குப் பின்னர் விமானத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள் காவல்துறையினர்.
“துவங்கும் முன்னரே மியூசியம் பிரபலமாகி விட்டது” என்று கருத்து தெரிவித்துள்ளார் டிக்சித்.
சந்தடி சாக்கில், ஏர்-இந்தியாவும்தான் பிரபலமாகி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக