வியாழன், 29 மார்ச், 2012

ராமஜெயத்தை கொன்றது யார்... 3 தனிப்படைகள் அமைத்து வேட்டை

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தை படுகொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாநகர ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் மீது பல நில அபகரிப்பு வழக்குகள் தற்போதைய அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ளன. இதில் ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருந்து வந்தார் ராமஜெயம்.
பல்வேறு தொழில்களை அவர் திருச்சியை மையமாக வைத்து செய்தும் வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் வாக்கிங் சென்றபோது சிலரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடல், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கத்திக் குத்துக்காயங்களுடன் கல்லணை அருகே கண்டெடுக்கப்பட்டது.
உடலை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் கூறுகையில், கொலை நடந்தது ஏன் என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் கொலையாளிகள் திருச்சி சுற்றுவட்டாரத்திலேயே பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக