செவ்வாய், 6 மார்ச், 2012

2 நாட்களுக்குத் தேவையான வெடி பொருட்கள் கூட ராணுவத்திடம் இல்லை!

இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடி பொருட்கள் (ammunition) இல்லை என்றும், போர் ஆரம்பித்தால் 2 நாட்களில் எல்லா வெடி பொருட்களும் தீர்ந்துவிடும் அபாயகரமான நிலைமை நிலவுவதாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனிக்கு பரபரப்புக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பீரங்கிப் படைகளிடமும் (artillery), விமான எதிர்ப்புப் படையினரிடமும் கூட போதிய அளவு குண்டுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ராணுவத்திற்குத் தேவையான சப்ளைகள் தொடர்பாக மத்திய அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்காததும், பல முக்கிய சப்ளை நிறுவனங்களுக்கு தடை போட்டதும் தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்றும் வி.கே.சிங் கூறியுள்ளார்.

வயது பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கும் வி.கே.சிங்குக்கும் மோதல் நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் ஆண்டனிக்கு சிங் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

டெல்லியில் விவிஐபிக்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்தாக சிங் மீது புகார்கள் கிளம்பி அதை ஐபி விசாரித்து வரும் அதே நேரத்தில், இந்த ஆயுத பற்றாக்குறை விவகார கடிதம் வெளியே கசிந்துள்ளது.

அவர் ஆயுத பற்றாக்குறை விவகாரத்தை கிளப்பியதும் அவர் மீது ஒட்டுக் கேட்பு புகார் எழுப்பபட்டதா அல்லது அவர் மீது ஒட்டுக் கேட்பு புகார் எழுந்ததும் ஆயுத பற்றாக்குறை புகார் தொடர்பாக ஆண்டனிக்கு எழுதிய. கடிதத்தை சிங் தரப்பு பத்திரிக்கைகளுக்கு லீக் செய்ததா என்பது தெரியவில்லை. இரு விவகாரங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்துள்ளன.

ஆண்டனிக்கு வி.கே.சிங் அனுப்பியுள்ள கடிதத்தில், சில முக்கிய வெடி பொருள் கொள்முதல்கள் தொடர்பாக பைல்களை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 5 ஆண்டுகளாக அடை காத்து வருகிறது. அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ராணுவத்தில் சைபர் பட்டாலியன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப படைப் பிரிவை உருவாக்க அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் கடந்த 2 வருடங்களாக பதில் இல்லை. தனியார் ஐடி துறையைச் சேர்ந்த மிகச் சிறந்த மூளைகளை ராணுவத்துக்கு இழுக்கும் திட்டத்துடன் இந்தப் பிரிவை உருவாக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

National Counter Insurgency School (NCIS) என்ற தீவிரவாதிகள், நஸ்கல்கள் தாக்குதல்களை முறியடிக்க என தனிப் பயிற்சிப் பள்ளியை உருவாக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நக்ஸல்கள் பாதித்த பகுதிகளில் நிலம் கூட ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தப் பள்ளியை உருவாக்கவோ, அதில் பாரா மிலிட்டரிப் படையினருக்கு பயிற்சி அளிக்கவோ தேவையான ஒப்புதல்களைக் கேட்டு 2 வருடமாக காத்திருந்தும் பயனில்லை. ஏ.கே.ஆண்டனி எந்த முடிவும்
எடுக்கவில்லை.

இந்திய ராணுவத்தின் மிக முக்கிய ஆயுதம் T-72 டேங்குகள். இந்த டேங்குகளின் பேரல்களை மாற்ற ராணுவம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. முதலில் இதை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த பேரல்கள் எல்லாம் வெடித்துச் சிதறிவிட்டன. இதனால் வெளிநாட்டிலிருந்து அதை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பான ஒப்புதலை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் இந்த டேங்குகளின் செயல்திறன் மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் டேங்குகளில் ஏராளமான தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. ஆனால், இதை வாங்கிக் குவிக்குமாறு ராணுவத்தை மத்திய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது.

இவ்வாறு ராணுவம் சந்தித்து வரும் பல பிரச்சனைகளை பட்டியலிட்டு ஆண்டனிக்குக் கடிதம் எழுதியுள்ள வி.கே.சிங், ஒரு மிக கவலைக்கிடமான விஷயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒருவேளை பாகிஸ்தானுடன் போர் ஆரம்பித்தால், இரண்டே நாட்களில் நமது எல்லா வெடி பொருளும் காலியாகிவிடும். அந்த அளவுக்குத் தான் ரிசர்வ் வெடி பொருட்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

பின் குறிப்பு: 2012ம் ஆண்டுக்கான சீனாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 11.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டில் மட்டும் சீனா தனது ராணுவத்துக்காக 106.4 பில்லியன் டாலர்களை (ஒரு பில்லியன் டாலர் என்பது சுமார் 4,700 கோடி ரூபாய்) செலவிட உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக