வெள்ளி, 2 மார்ச், 2012

ஜெர்மனியரிடமிருந்து 12 கோடி கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு !

Kudankulam
நாகர்கோவில்: கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஜெர்மனிக்காரர் ஹெர்மனிடமிருந்து மட்டும் ரூ. 12 கோடி அளவுக்கு பணம் வந்துள்ளதாம். அதிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் 4 கோடி பணத்தை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளனர். இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கடந்த 7 மாதமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரெய்னர் ஹெர்மன், என்பவரை கடந்த 26ம் தேதி மத்திய உளவு பிரிவு போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த விசாரணைக்குப் பின்னர் உடனடியாக ஹெர்மனை நாடு கடத்தி விட்டனர்.

கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் ஆகியோருடன் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதற்கான ஆதாரங்கள் இவரின் லேப்டாப், செல்போனில் இருப்பதாகவும் தெரிய வந்தது.

ஹெர்மனின் லேப்டாப்பில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான படங்கள், போராட்டங்கள் நடந்த படங்கள் உள்ளிட்டவை இருந்தன. அதை விட முக்கியமாக பணப் பட்டுவாடா குறித்த விவரங்களும் சிக்கியுள்ளன.

தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள நெல்லை, குமரி, தூத்துக்குடியில் உள்ள 4 தொண்டு நிறுவனங்களுக்கும் இவர் மூலம்தான் பணம் போயுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இந்த லேப்டாப்பில் சிக்கியுள்ளன. மேலும் இந்த அமைப்புகளுடன் ஹெர்மனுக்கு இருந்த தொடர்பு குறித்த ஆதாரங்கள் அவரது மொபைல் போனிலும் இருந்தது. அதையும் தற்போது சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு ரூ. 12 கோடி வரை பணம் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் கடந்த 4 மாதத்தில் மட்டும் ரூ. 4 கோடியை கொடுத்துள்ளார் ஹெர்மன். இவற்றை அந்த தொண்டு நிறுவனங்கள்தான் வாங்கியுள்ளன.

இந்தத் தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறுகையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்மன் என்பவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தவர். அவரது நடவடிக்கைகள் சுற்றுலா விசாவில் வந்தவருக்கு பொருத்தமானதாக இல்லை. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் ஜெர்மன் நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

அறக்கட்டளை பணிக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை திருப்பி விட்டதாக 4 தொண்டு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக