வெள்ளி, 23 மார்ச், 2012

118 கேள்விகளுக்கு பதில்: சசிகலாவிடம் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலாவிடம் தொடர்ந்து வியாழக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகினர். நீதிபதி மல்லிகார்ஜுனையா குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313-ன் கீழ் வாக்குமூலத்தை சசிகலாவிடம் தொடர்ந்து பதிவு செய்தார். சசிகலா அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது: ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட், மெடோ அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ பிரைவேட் லிமிடேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக வாங்கப்பட்ட நிலங்களை கிரயம் செய்ததில் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணங்கள் விதிமுறைகளுக்கு உள்பட்டு செலுத்தப்பட்டுள்ளது. 21.3.95-ல் ராமாஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு நான் இயக்குநர். அதற்கு வாங்கப்பட்ட நிலத்திற்காக ரூ. 9 லட்சம் காசோலை மூலம் ரமணியம்மாள் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான பத்திரப்பதிவு கட்டணம் வழிகாட்டுதல் விலைப்படி கட்டியுள்ளேன் என்றார். பயனூர் கிராமத்தில் மஹாவீர் சந்த் என்பவருக்குச் சொந்தமான 2.3 ஏக்கர் நிலத்தை வாங்கி உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டது. அந்த நிலம், எனக்கு வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டது.சென்னை இந்தியன் வங்கி, கனரா வங்கிகளில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்திலும், எண் 36 போயஸ் கார்டன் என்ற முகவரி அளித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, அது உண்மைதான் என்றார் சசிகலா. மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குரும்பல் கிராமத்தில் எனது தந்தை விவேகானந்தன்பிள்ளை, தாயார் கிருஷ்ணவேணிக்கும், சித்தப்பாக்களும், அத்தை மரகதம் அம்மாளுக்கும் மூதாதையர் சொத்துகள் இருந்தன. எதையும் விதிகளை மீறியோ, முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைத்தோ வாங்கவில்லை என்றார். வாக்குமூலங்களை மூக்குக் கண்ணாடி அணியாமல் கூறிவந்த அவர் இடையே அதை அணிந்து கொள்வதாகத் தெரிவித்தார். அவரது வழக்குரைஞர் மணிசங்கர், நீதிபதியிடம் இதற்கு அனுமதி கோரினார். அனுமதியளித்தவுடன் கண்ணாடி அணிந்து கொண்டு வாக்குமூலம் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது என்று பதில் அளித்தார். சிலவற்றிற்கு உண்மையாக இருக்கலாம் என்றார். வியாழக்கிழமை காலை முதல் மாலை 5 மணிவரை 118 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்தார்.  வழக்கு விசாரணையை நீதிபதி மார்ச் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக