வியாழன், 2 பிப்ரவரி, 2012

ZeeTV நிர்மலா பெரியசாமியின் சொல்வதெல்லாம் உண்மைக்கு தடை உச்ச நீதிமன்றம்


மதுரை: குடும்ப விஷயங்களை பொதுவில் அலசுவது போல உள்ள டிவி நிகழ்ச்சிகளால் தனிமனித வாழ்க்கை பாதிக்கப்படுவதாக புகார் எழுவதால், இந்த நிகழ்ச்சிகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஜீ' டி.வி நடத்தும் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த நபர் குறித்த பகுதியை ஒளிபரப்ப உடனடித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா பெரியசாமி நிகழ்ச்சி
'ஜீ' டி.வியில் தினமும் இரவு 9.30 மணிக்கு 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சினைகள் குறித்த விஷயங்கள் அலசப்படுகின்றன. இதற்காக இருதரப்பினரையும் நேரடியாக அழைத்து விவாதிக்கப்படுகிறது.


இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரான மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பெர்னாட்ஷான் (வயது 61) என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், "எனக்கு 1978-ம் ஆண்டு திருமணம் நடந்தது. என்னுடைய மனைவி செல்வராணிக்கு தற்போது 51 வயது ஆகிறது. எங்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். முதல் பிரசவத்துக்கு பின்பு என் மனைவிக்கு 90 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் என் மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில் பணப்பிரச்சினை, பார்வை இழப்பு போன்ற காரணத்தால் அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் என் மனைவி, ஜீ டி.வி நடத்தும் சமையல் கலை நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்து இருப்பதாக கூறினார். பின்னர் 25.1.2012 அன்று என்னையும் அழைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு சென்றார். என் மனைவியை 'ஷூட்டிங்' நடக்கும் அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். என்னை வெளியே உள்ள ஒரு அரங்கில் காத்திருக்கும்படி கூறினர். அதன்பின்பு ஒரு மணி நேரம் கழித்து என்னை 'ஷூட்டிங்' நடந்து கொண்டிருந்த அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு டி.வி. செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி, எனது குடும்ப வாழ்க்கை குறித்து தாறுமாறாக பல்வேறு கேள்விகளை கேட்டார். அந்த நேரத்தில் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாத வகையில் திகைத்தேன். அதன்பின்புதான் குடும்ப பிரச்சினைகள் குறித்து அலசக்கூடிய ஒரு நிகழ்ச்சி என்பதை தெரிந்து கொண்டேன். இதனால் என்னை பற்றிய அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு அழுதேன்.

அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மறுத்து விட்டனர். பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கி விட்டுதான் ஒளிபரப்புவோம் என்றும் கூறினர். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொது இடத்தில் அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை கேவலப்படுத்துகின்றனர். எனவே ஜீ டி.வியில் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ள எனது குடும்ப வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனடி தடை

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இடைக்கால உத்தரவில், "ஜீ டி.வியில் ஒளிபரப்பப்படும் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் முக்கிய கோரிக்கை குறித்து எதிர் மனுதாரர்களிடம் விசாரணை நடத்திய பின்பு முடிவு செய்து கொள்ளலாம்.

மனுதாரர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயத்தை ஒளிபரப்பினால் தனது மரியாதை பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மனுதாரரின் குடும்ப வாழ்க்கை குறித்த விஷயத்தை ஜீ டி.வியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது," என்றார்.

மத்திய அரசுக்கு உத்தரவு

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர், ஜீ டி.வி பொது மேலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கெனவே விஜய் டிவியில் நடிகை லட்சுமி நடத்திய கதையல்ல நிஜம் தொடராலும் பல குடும்பங்களில் பிரச்சினைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக