திங்கள், 20 பிப்ரவரி, 2012

தேமுதிகவின் அதிமுக.. ஓவர்! அடுத்து திமுக கூட்டணி???


Vijayakanth
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து தூக்கி வீசப்பட்டு விட்ட நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை தனது பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது தேமுதிக கட்சி. இக்கூட்டத்தில் திமுகவில் இணைவது குறித்தும், சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
தேமுதிகவை ஆரம்பித்ததில் இருந்து யாருடனும் அணி சேராமல் தனியாகவே போட்டியிட்டு வந்தது அக்கட்சி. பலர் கூட்டணிக்கு அழைத்தும் கூட விஜயகாந்த் போகவில்லை. இதற்காகவே அவருக்கு பெரும் வாக்காளர் கூட்டம் சேர்ந்தது. இப்படி ஒரு நடுநிலை அரசியல்வாதியைத்தான் தேடி வந்தோம் என்று மக்களும் உற்சாகமடைந்தனர்.
ஆனால் தனக்கென்று ஒரு வாக்கு வங்கி சேர்ந்தவுடன், வழக்கமான அரசியல்வாதியாக மாறிப் போனார் விஜயகாந்த். அதிரடியாக அதிமுகவுடன் கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்தார். அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டதன் விளைவாக அவரது கட்சிக்கு பெரும் லாபம் கிடைத்தது. கிடைத்தற்கரிய எதிர்க்கட்சி அந்தஸ்தும், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்த்துக்கும், அவரது கட்சிக்கும் கிடைத்தது.

ஆனால் இந்தக் கூட்டணி ஆறே மாதத்தில் முடிந்து விட்டது, முறிந்து போய் விட்டது. சட்டசபையில் வைத்து தேமுதிகவை சரமாரியாக விமர்சித்த முதல்வர் ஜெயலலிதா, திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்து நின்று பாருங்கள் என்று சவால் விட்டார்.

அதிமுகவால் விரட்டியடிக்கப்பட்ட தேமுதிகவை தற்போது திமுக அரவணைக்கத் தயாராகி விட்டது. சட்டசபையில் தேமுதிகவினர் மீதும், விஜயகாந்த் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திமுக கண்டித்ததோடு, விஜயகாந்த்துக்காக வெளிநடப்பும் செய்தது. மேலும் மதுரையிலிருந்து சென்னை வந்தபோது விமானத்தில் வைத்து விஜயகாந்த்துடன், ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தப் பின்னணியில் நாளை தேமுதிக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. திமுகவுடன் அணி சேருவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அதேபோல சங்கரன்கோவிலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

திமுகவுடன் கை கோர்க்குமா தேமுதிக - இதுதான் தமிழகம் முழுவதும் பெரிதாக உள்ள ஒரே எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக