வியாழன், 2 பிப்ரவரி, 2012

அன்று மதிமுகவை எட்டி உதைத்த ஜெ. இன்று தேமுதிகவை எட்டி உதைத்து விட்டார்

Vaiko, Jayalalitha and Vijayakanth
சென்னை: அன்று தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க கடுமையாக முயன்று வந்ததால், தனக்கு உற்ற தோழனாக, பாசம் மிக்க உடன் பிறவா சகோதரனாக கூடவே இருந்து வந்த வைகோவை உதாசீனப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா, இன்றாவது வைகோவின் அருமையையும், மதிமுகவின் நாகரீகத்தையும் உணர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவிலிருந்து பிரிந்து வந்த வைகோ மதிமுகவை ஆரம்பித்த பின்னர் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது
இடையில் மீண்டும் திமுகவுடன் நட்பு பாராட்டிய வைகோ, 2006 சட்டசபைத் தேர்தலில் திமுக தனக்கு தேவையான சீட்களை ஒதுக்காததால் மனம் உடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது அவரை அழைத்து 35 சீட்களைக் கொடுத்து போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றது என்றாலும் வைகோ, ஜெயலலிதாவின் தோழமை உறுதியாகவே இருந்தது.

இந்த நிலையில்தான் 2011 தேர்தலில் திடீரென மதிமுகவை விட்டு அதிமுக விலகத் தொடங்கியது. சட்டசபைத் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் அதிமுகவின் ஓட்டுக்களைப் பிரித்து வரும் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்று சிலர் பலரால் கொடுக்கப்பட்ட ஆலோசனையை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வைகோ ஓரம் கட்டினார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டினார்.

அந்தத் தேர்தலில் வைகோ தனது கட்சியினருக்காக 21 சீட்களை மட்டுமே கேட்டார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டிருந்தாலும், கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதால் இந்த அளவுக்கு இறங்கி வந்தார் வைகோ.

ஆனால் 6 சீட்தான் என்று அடிமாட்டு ரேஞ்சுக்கு இறங்கிப் பேரம் பேச ஆரம்பித்தது அதிமுக. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வைகோ. சில நாட்கள் பேச்சுவார்த்தைக்குக் கூட அவர் போகவே இல்லை, அவ்வளவு அதிர்ச்சி கிடைத்தது அவருக்கு.

அதிமுகவும் வைகோவைக் கண்டு கொள்ள்ளவில்லை. தேமுதிகவுடன் தொடர்ந்து ரகசியமாகவே பேசி வந்தது. இடதுசாரிகளைக் கூட அதிமுக கண்டு கொள்ளவில்லை. பிற கட்சிகளையும் கூட அது கண்டு கொள்ளவில்லை.

தேமுதிகவுடனான உறவு இறுதியாகும்வரை அக்கட்சியைத் தவிர வேறு கட்சிகள் குறித்து அதிமுக கவலைப்படவில்லை என்பது அனைவருக்குமே தெரியும். தேமுதிகவுடன் ரகசியமாக நடந்து வந்த பேச்சுவார்த்தை முடிந்து உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் பிற கட்சிகள் குறித்த நினைவே ஜெயலலிதாவுக்கு வந்தது.அதுவரை இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட அனைத்துமே காத்துக் கிடந்தன -பெரும் விரக்தியுடன்.

அதன் பிறகும் கூட மதிமுகவை அதிமுக பேச்சுக்கு அழைக்கவில்லை. மாறாக சரத்குமார் கட்சி, டாக்டர் சேதுராமன் கட்சி, புதிய தமிழகம் கட்சி எனகுட்டிக் கட்சிகளுன் பேச்சுவார்த்தை நடத்தினர். இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதிமுகவை அழைக்கவே இல்லை.

வெறுத்துப் போன வைகோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவுக்கு வரப் போகிறார் என்று தெரிந்தவுடன்தான் மறுபடியும் அவரது கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது 8 சீட் தருவதாக கூறினர். இதையும் வைகோ ஏற்கவில்லை. பிறகு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது மதிமுக.

அதன் பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் 12 சீட் தருவதாக கூறினார்கள். ஆனால் இம்முறை வைகோ திட்டவட்டமாக கூறி விட்டார் - 21 சீட் தந்தால் பேசலாம் என்று. அது முடியாது என்று வைகோவிடமேநேரடியாக கூறி விட்டது அதிமுக. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த வைகோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். அப்போதும் கூட அவர் ஜெயலலிதாவையோ அல்லது அதிமுகவையோ விமர்சிக்கவில்லை.

பெருத்த மன வேதனையுடன் மதிமுக தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அவர் கூறினார். இதையடுத்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், மதிமுகவின் முடிவுக்கு தனக்கு வேதனை அளிப்பதாக கூறினார். இருப்பினும் வைகோவின் அன்புச் சகோதரியாக தான் எப்போதும் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

அன்று வேண்டி வேண்டி அழைத்த தேமுதிகவை இன்று எட்டி உதைத்து விட்டார் ஜெயலலிதா. மேலும், இப்படிப்பட்ட கட்சியுடன் போய் கூட்டணி வைத்தேன் என்று நினைக்கும்போது பெரும் வேதனையாக இருக்கிறது என்றும் கோபத்துடன் கூறியுள்ளார்.

ஆனால் அன்று மதிமுக வெறும் 21 தொகுதிகளைத்தான் கேட்டது. அதைக் கூட கொடுக்க முடியாமல் தேமுதிகதான் வேண்டும் என்று உறுதியாக இருந்தது அதிமுகதான். இதை தமிழக மக்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

அன்று அவ்வளவு தூரம் இறங்கி வந்து கெஞ்சினார் வைகோ. ஆனால் இருந்த இடத்திலிருந்தே அடாவடியாக பேரம் பேசியவர் விஜயகாந்த்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக