புதன், 29 பிப்ரவரி, 2012

காதல் எதிர்ப்பு: பாகிஸ்தானில் ‘இந்து முன்னணி’ ஆண்டியின் ரெய்டு!


ரெய்டு ஆண்டி மாயா கான்காதலர் தினத்தில் பொது இடங்களில் இருக்கும் காதலர்களை துரத்தி அடாவடி செய்யும் வெறிநாய்கள் இந்திய நாட்டில் மட்டும்தான் உலாவுகின்றன என்று நினைக்க வேண்டாம். ஒரு பக்கம் மதரசாக்கள், மறுபக்கம் குண்டு வெடிப்புகள் என்று இஸ்லாமிய சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானில் இன்னும் சுவராஸ்யமான நிகழ்வுகள் காணக் கிடைக்கின்றன. பாக்கைச் சேர்ந்த சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாயா கான் என்பவரின் தலைமையில் பல ஆண்டிகள் படப்பிடிப்பு குழுவினருடன் பொது இடங்களுக்குப் போகிறார்கள். இணையாக உட்கார்ந்திருக்கும் காதலர்களை மோப்பம் பிடித்து தட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்குப் பிடித்திருப்பது தொலைக்காட்சி ஊடக வெறி.
இந்த காணொளியை இதில் பார்க்கலாம்.
'ரெய்டு' ஆண்டி மாயா கான்
குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பது பற்றி விவாதித்துக் கொண்டே, கையில் மைக்குடன் கேமராக்கள் பின் தொடர சாலைகளில் சுற்றுகிறார்கள். எலி வேட்டையாடும் பரபரப்பை உருவாக்கியபடியே வேக வேகமாக நடக்கிறார்கள்.
ஆங்காங்கு  மறைந்து உட்கார்ந்திருக்கும் இளம் தம்பதியினர் இவர்களைப் பார்த்த பின் பதறி ஓடுகிறார்கள்.
அவர்களைத் துரத்தி துரத்தி கேள்வி கேட்க முயற்சிக்கிறார் மாயா கான். மூச்சிரைத்தாலும் ‘ஹலோ, ஹலோ, ஹலோ’ என்று நாயைப் போல குரைத்துக் கொண்டு காதலர்களை துரத்துகிறார். பிரைவசியை எதிர்பார்த்து பூங்காக்களுக்கு வந்திருக்கும் காதலர்கள் காமராவுடன் வரும் மாயா கானைப் பார்த்த உடன் அலறுகிறார்கள். பர்தா அணிந்த இளம்பெண்ணை நோக்கி ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று மாயா கான் கத்துகிறார்.
கடைசியில் உடன் வரும் ஆண்டிகளை பின்தங்கச் சொல்லி விட்டு தனியாகப் போய் ஒரு தம்பதியை பிடித்து விடுகிறார். மைக்கையும் கேமராவையும் அணைத்து விட்டதாக உறுதி கூறி விட்டு பேச்சு கொடுக்கிறார், ஆனால் பேச்சும் படமும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்கள் என்று தெரிய வருகிறது. காமராவும் மைக்கும் இயங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த இரண்டு பேரும் பயந்தபடியே எழுந்து போய் விடுகிறார்கள்.
அதே பூங்காவில் இருக்கும் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் காதலருடன் பொது இடத்துக்கு வரத் துணிந்த பெண்ணை எதிர்த்து ஆவேசமாக கத்துகிறார். ‘திருமணம் நிச்சயமானவர்கள் என்றால் அவரவர் வீட்டில் சந்திக்க வேண்டியதுதானே, பொது இடத்தில் பூங்காவில் வருவது தவறு. இதற்கு பல குடும்பங்களில் அனுமதி கிடையாது, குடும்பத்தினரின் நம்பிக்கையை பொய்ப்பிக்கிறீர்கள். இந்த மாதிரி இடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் முறையான உறவு கொண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது’.
‘நான்கைந்து தம்பதிகள் இருந்தார்கள். எல்லோரையும் துரத்தி விட்டோம்!. நம்மைத் தவிர பூங்காவில் யாரும் இல்லை’ என்று ஒரு ஆண்டி வில்லத்தனமாக சிரிக்கிறார். கராச்சியின் எல்லா பூங்காக்களிலும் இன்று யாரும் வரத் துணிய மாட்டார்கள் என்று ஆண்டிமார்கள் எக்காளத்துடன் மார் தட்டுகிறார்கள்.
மாயாவின் புகழ்பாடும் ஜால்ராக்களுக்கு மத்தியில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு அங்கிள், பூங்காவில் வந்து உட்காரும் இளைஞர்களுக்கு எதிராக தனது புனித எண்ணங்களை ஆவேசமாக சொல்கிறார்.
இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வலைப்பதிவுகளிலும் டுவிட்டரிலும் வெளியான கருத்துக்களைத் தொடர்ந்து மாயா கான், சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்படுகிறார். ஆனால், பாகிஸ்தானிய சமூகத்தின் எண்ணப் போக்கின் ஒரு குறுக்கு வெட்டுதான் மாயா கான். இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாக பூங்காக்களில் அமர்ந்து பொழுது போக்குவது என்பது நாகரீக சமூகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை. அதைக் கூட பாகிஸ்தானிய இளைஞர்களுக்கு மறுக்கும் மதவாத பாசிசப் போக்கின் வெளிப்பாடுதான் மாயாகான்.
இந்த ஆண்டிகளுக்கு அடுத்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் கூச்சம் சிறிதளவும் இல்லாததோடு, அதை தொலைக்காட்சியில் காட்டி சம்பாதிக்கவும் தயக்கமில்லை.
இந்தியாவில் காதலர் தினத்தன்று இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா கும்பல் பொது இடங்களுக்கு சென்று காதலர்களை வேட்டை நாய்களாக துரத்துவதின் பாகிஸ்தானிய கிளைதான் மாயாகான். அதெப்படி, மதவாதிகள் எல்லாரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்?
__________________________________________________
- செழியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக