வியாழன், 16 பிப்ரவரி, 2012

சென்னை 'கரண்ட்'டில் கூடுதலாக கை வைக்க முடிவு

தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் வெறும் ஒரு மணி நேர மின்வெட்டோடு எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு சோகச் செய்தி. உங்களுக்கான மின்வெட்டின் அளவைக் கூடுதலாக்கத் திட்டமிட்டுள்ளனராம். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு அனுப்ப மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் வெர்சஸ் சென்னை என்ற நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. மின்சாரத் தடை என்பது சென்னையில் அதிகாரப்பூர்வமாக ஒரு மணி நேரம்தான். இருந்தாலும் அவ்வப்போது கரண்ட் போகும், வரும். அது கணக்கிலேயே கிடையாது. இருந்தாலும் அதிகபட்சம் ஒரு மணி நேர மின்சாரத் தட்டுப்பாட்டோடு சென்னை நகரமும், அதையொட்டியுள்ள புறநகர்களும் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் சென்னைக்கு வெளியே உள்ள தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேர அளவுக்கு மின்தடை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் பயங்கர கடுப்பில் உள்ளனர். சென்னைக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் தருவது, எங்களை மட்டும் தாளித்தெடுப்பதா என்று மக்களிடையே குமுறல் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தற்போது சென்னை மின்தடை நேரத்தையும் அதிகரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.

தற்போது தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கோடை மின் பற்றாக்குறையை சமாளிக்க முடிவு செய்துள்ளது. இது தவிர தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகத்தை குறைத்து வெளிமாவட்ட தேவையை நிவர்த்தி செய்யவும் ஆலோசித்து வருகிறது.

சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டை 2 மணி நேரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் எத்தனை மணி நேரம் மின் வெட்டு செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு வெளி மாவட்டங்களுக்கு வழங்கினால் அங்கு மின் தடை நேரம் எவ்வளவு குறையும் என்று அதிகாரிகள் கணக்கீடு செய்கிறார்கள்.

சென்னையில் மின் வெட்டு அதிகரிக்கும் பட்சத்தில் இங்குள்ள அரசுப் பணிகள் பாதிக்கக்கூடாது. அனைத்து துறைகளின் தலைமை அலுவலகமும் சென்னையில் செயல்படுவதால் பணிகள் பாதிக்காத வகையில் எத்தனை மணி நேரம் மின்வெட்டை அதிகரிக்கலாம் என்று ஆய்வு செய்யப்படுகிறது.

எப்படி இருப்பினும் குறைந்தது 2 மணி நேரம் சென்னையில் மின்தடை அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக