சனி, 25 பிப்ரவரி, 2012

என்கவுன்டர்' விடை தெரியாத கேள்விகளால் மர்மம்

வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் விசாரணையில், உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி, சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில். திடீரென ஐந்து இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து, வங்கி மேலாளரை மிரட்டி, கேஷியரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து, கடந்த 20ம் தேதி, கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பிற்பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கிமுனையில், மிரட்டி 14 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். சம்பவம் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வைத்து இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
கொள்ளையர்களில் ஒருவனின் போட்டோவை, கடந்த 22ம் தேதி காலை போலீசார் வெளியிட்டனர். இந்த படத்தை "டிவி' மற்றும் பத்திரிகைகளில் பார்த்த வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவர், போலீசிடம் கொள்ளையர்கள் தங்கியிருக்கும் இடத்தை தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு கொள்ளையர்கள் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களை சரணடைய வலியுறுத்திய போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.போலீசாரின் எதிர் தாக்குதலில், ஐந்து கொள்ளையர்களும் கொல்லப்பட்டனர்.

அவர்கள் வீட்டில் இருந்து ஏழு துப்பாக்கிகள் மற்றும் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட, 14 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அங்கு கிடைத்த நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஒரு ஓட்டுனர் உரிமத்தின்படி, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வினோத்குமார், சந்திரிகா ரே, வைசாலியைச் சேர்ந்த ஹரிஷ்குமார், நாளந்தாவைச் சேர்ந்த வினய் பிரசாத் மற்றும் மேற்கு வங்க மாநிலம், ஹவுராவைச் சேர்ந்த அபய்குமார் என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்த தகவல்களை நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டார்.

இந்நிலையில், இந்த என்கவுன்டர் சம்பவத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. முதலில், போலீசார் எந்த நேரத்தில் அங்கு சென்றனர். சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்தான விஷயங்களில், போலீசார் கூறியுள்ள தகவல்களுக்கும், அப்பகுதி மக்கள் சிலரது கூற்றிற்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.

* போலீசார் கூற்றுப்படி, இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனா ல், அப்பகுதி பொதுமக்களில் சிலர் இரவு 10 மணிக்கே போலீசார் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், அப்போதிலிருந்தே, சாலைகளில் ஆங்காங்கே நின்றிருந்தவர்களை போலீசார் அங்கிருந்து சென்றுவிட உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

* அடுத்ததாக, வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்த சப்தம் கேட்டு பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் வந்ததாகவும், அதன் பின்பு, பாதுகாப்பிற்காக கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அப்படியிருக்கும் போது, அந்த வீட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், தங்களுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

* கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியில் இருந்து ஜன்னல் வழியாக போலீசார் சுட்டனர். கொள்ளையர்களை சுட்ட தோட்டாக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த போதும், துப்பாக்கி குண்டுகள் வேறு எங்கும் படவில்லை. ஹாலில் உள்ள சுவரில் மட்டும் குண்டு துளைத்ததற்கான இரண்டு சுவடுகள் காணப்படுகின்றன. அதே போல், வீட்டில் இருந்த "டிவி', வாஷிங் மெஷின் இவற்றில் குண்டு துளைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. போலீசார், சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தும் போது, பல இடங்களில் குண்டுகள் தெறித்திருக்கும். அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

* சம்பவம் நடந்த வீட்டின் தரையில் மட்டுமே ரத்தகறைகள் உள்ளன. கொள்ளையர்கள் ரத்தகாயங்களுடன் அங்கும், இங்கும் துடித்திருந்தால் சுவரில் கூட ரத்தம் இருக்கும். அப்படி எந்த தடயமும் இல்லை.

* வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, வீட்டிற்குள் புகுந்தோம் என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், முன் கதவு தாழ்பாள் கூட உடைய வில்லை.

* சம்பவம் நடந்து முடிந்த நிலையில், கொள்ளையர்கள் வைத்திருந்த ஒரு பையில் இருந்து போலீசார், நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள், ஒரு டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை எடுத்துள்ளனர். அவற்றை கொண்டு தான், இறந்தவர்கள் பெயர் அடையாளம் காட்டப்பட்டது. ஆனால், அந்த அடையாள அட்டைகள் அனைத்தும் பொய்யானவை என்பதும், சம்பந்தப்பட்ட பெயர் மற்றும் முகவரியில் இரண்டு பேர் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் போலீசாருக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டாலும், மாஜிஸ்திரேட் விசாரணையில் அனைத்து தகவல்களுக்கும் விடை கிடைத்துவிடும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சி.பி.ஐ., விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு: வங்கி கொள்ளை வழக்கில் ஐந்து பேரை என்கவுன்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றவும் கோரி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிறைவாசிகள் உரிமை அமைப்பின் இயக்குனரும், வழக்கறிஞருமான புகழேந்தி தாக்கல் செய்த மனு: வங்கிகளில் கொள்ளையடித்ததாக கூறப்படும் நபர்கள், வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் கொல்லப்பட்டனர். தற்காப்புக்காக அந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்கு என்கிற நிலையை போலீசார் எடுத்தால், உடனடியாக போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடத்துக்கு நான் நேரில் சென்றேன். அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தேன். 22ம் தேதி இரவு 10 மணிக்கு போலீசார் வந்து, வீட்டுக்குள் இருக்குமாறும், கதவு மற்றும் ஜன்னல்களை மூடுமாறும், விளக்குகளை அணைத்து விடுமாறும் கூறியதாக, சிலர் தெரிவித்தனர். அப்பகுதியில் கட்டடம் கட்டப்படும் இடத்தில் பணிகளை முடித்து விட்டு, அங்கிருந்து புறப்படுமாறு, போலீசார் தெரிவித்ததாகவும் கூறினர். ஆனால், நள்ளிரவில் தான் சந்தேகப்படும் நபர்களைப் பற்றி தகவல் கிடைத்ததாக, கமிஷனர் கூறியுள்ளார். அந்தப் பகுதியை இரவு 10 மணிக்கு தங்கள் வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்து விட்டதாக, அப்பகுதி மக்கள், என்னிடம் கூறினர். வீடியோவில் காட்டப்பட்ட சந்தேகப்படும் நபர், வங்கியில் பொம்மை துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். வீடியோவில் காட்டப்பட்ட நபரைப் போல், வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் வசிப்பவரும் உள்ளார் என போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலை வைத்துக் கொண்டு, கொள்ளை வழக்கை விசாரிக்கும் எந்த பொறுப்பான அதிகாரியும், சந்தேகப்படும் நபர்களை கொல்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள். ஒரு குற்றத்தை புலன்விசாரணை செய்ய போலீசார் விரும்பவில்லை. சந்தேகப்படும் நபர்களை கொல்ல தான் நினைக்கின்றனர். இதை செய்து விட்டு, தற்காத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்ததாக கூறுகின்றனர்.

ஐந்து பேரும் இறந்த பிறகு தான், அவர்களில் நால்வர் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமத்தின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் கிடைத்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ஐந்து பேரது பெயர்கள், முகவரியை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ளார். அதில் ஒருவரது பெயர் சந்திரிகா ராய். பீகார் மாநிலம் மஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த சந்திரிகா ராய் என்பவர் பாட்னாவில் டிரைவராக உள்ளார். கமிஷனர் வெளியிட்ட அபய்குமார் என்பவரின் முகவரி பொய்யானது. வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்த மொழியில் எச்சரிக்கை செய்யப்பட்டதா என்பது குறித்து, கமிஷனர் தனது பேட்டியில் தெளிவாக கூறவில்லை. கொள்ளை வழக்கை சட்டப்படி விசாரிப்பதற்குப் பதில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் போலீசார் நுழைந்து, ஐந்து இளைஞர்களை கொன்றுள்ளனர். போலீசாருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டடை நடந்ததாக கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த வீட்டில் இருந்த "டிவி', வாஷிங் மெஷினில், குண்டு பட்டதற்கான தடயம் எதுவும் இல்லை. சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி, அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் புகார் அனுப்பினேன். அவர்களே இவ்வாறு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். எனவே, போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, ஊழல் மற்றும் அடக்கு முறைக்கு எதிரான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் ஏ.பி.சூரிய பிரகாசம், பொதுச் செயலர் அசோக் சக்ரவர்த்தி ஆகியோர் அனுப்பிய மனுவில், "நீதித்துறையின் அதிகாரத்தை போலீஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஐந்து பேருக்கு போலீசார் மரண தண்டனை வழங்கியுள்ளனர். அந்த இளைஞர்களிடம் எந்த விசாரணையையும் நடத்தாமல், அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், கொன்றுள்ளனர். நீதித்துறையின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்கிற கருத்தை போலீசார் தெரிவிப்பது போல் உள்ளது. குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கும் போர்வையில், யாரையும் போலீசார் கொன்று விடலாம் என்கிற முடிவுக்கு தான் வர வேண்டியதுள்ளது. எனவே, இந்த கடிதத்தை பொது நல மனுவாக கருதி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக