சனி, 18 பிப்ரவரி, 2012

மின்தடையால் டிவி ரேட்டிங் அதல பாதாளத்தில் சீரியல்'களிலிருந்து விடுதலை

மின் தடையால் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்க்க முடியாத காரணத்தால், "டிவி' நிகழ்ச்சிகளின் "ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும் தினமும் 8 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; கிராமப்புறங்களில் இந்த நேரம், இன்னும் அதிகமாகவுள்ளது. மின்சாரம் போகும் நேரத்தை மின் பகிர்மானக்கழகம் அறிவிப்பதை விட, மின்சாரம் இருக்கும் நேரத்தை அறிவித்தால் பரவாயில்லை, என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கல்வி, வேலை, தொழில், சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் என எல்லாமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கோவையைப் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழில் அமைப்புகள், வாரம் ஒரு நாளை மின் தடை நாளாக அறிவிக்கலாம், என்ற ஆலோசனையும் ஏற்கப்படவில்லை; தினமும் மின் தடையால் ஏற்படும் பாதிப்பு, அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இவை ஒரு புறமிருக்க, தொடர் மின் தடையால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம், மிகவும் குறைந்துள்ளது; வேலைக்குப் போகாத இல்லத்தரசிகள், முதியோர் ஆகியோர் "டிவி' சீரியல்களைப் பார்ப்பது, மிகவும் அரிதாக மாறியிருக்கிறது; ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நேரத்தில் மின் தடை அமல்படுத்தப்படுவதால், தொடர்களைத் தொடர்ந்து பார்க்கவே முடியாத நிலை உள்ளது.
மின்தடையால் டிவி ரேட்டிங் அதல பாதாளத்தில்

பல ஆண்டுகளாக "ஜவ்வாக' இழுத்தடிக்கப்படும் "சீரியல்'களைக் கூட, விடாமல் பார்த்து வந்த பெண்களுக்கு, மின் தடையால் இந்த "சீரியல்'களிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால், ஒரு நாள் "சீரியல்' பார்க்காவிட்டாலும், பக்கத்து வீட்டிலோ, தூரத்து உறவிடமோ விசாரிப்பதற்கான வாய்ப்பும் இப்போது இல்லை. சென்னையைத் தவிர்த்து, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட தினமும் பகலில் பத்து மணி நேரம் மின் தடை என்பதால், எந்தப் பகுதியிலுமே, யாருமே எந்த "டிவி' நிகழ்ச்சியையும் பார்க்க முடிவதில்லை; இதனால், இந்த நிகழ்ச்சிகளின் "டி.ஆர்.பி., ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது; மக்களால் பார்க்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் கொடுக்கவும் நிறுவனங்கள் யோசிக்கின்றன.

வினாடிக் கணக்கில் கணக்கிட்டு, "டிவி'
நிகழ்ச்சிகளுக்கு விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தினமும் லட்கணக்கிலும், மாதத்துக்குக் கோடிக்கணக்கிலும் விளம்பரதாரர்கள் செலவு செய்கின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை சென்னை நகரிலுள்ள மக்கள் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது; மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு இவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. உள்ளூர் சேனல்களின் நிலைமை, இன்னும் மோசமாகியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு நகரிலும் பத்து, பதினைந்து என்ற எண்ணிக்கையில் உள்ளூர் சேனல்கள் நடத்தப்படுகின்றன.

தனால், விளம்பரங்கள் வாங்குவதற்கு கடுமையான போட்டி உள்ளது. இந்த போட்டியால், விளம்பரக் கட்டணமும் குறைக்கப்பட்டு வருகிறது. மின்தடையால், "சேட்டிலைட்' சேனல்களையே பார்க்க முடியாத மக்கள், உள்ளூர் சேனல்களைப் பார்ப்பது மிகமிக அரிது; அதிலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில், கேபிள் ஒளி பரப்பு அறையில் மின்சாரம் இருப்பதில்லை. இப்போது வாங்கும் கட்டணத்தில், ஜெனரேட்டர் வைத்து இயக்கும் நிலையில், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் இல்லை. இதன் காரணமாக, "டிடிஎச்' வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். இதை வாங்கிப் பொருத்தினாலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில் மட்டுமே, "டிவி' பார்க்க முடிகிறது என்பதால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கை, பெருமளவில் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பல ஆண்டுகளாக சின்னத்திரையின் அடிமைகளாக இருந்த பெரியவர்களும், குழந்தைகளும், இப்போது வெளியுலகிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளும் வீட்டிற்குள் முடங்காமல், வெளியே விளையாடச் செல்வதும் அதிகரித்துள்ளது; தொடர் மின் தடையால், சமூகத்துக்கு விளைந்துள்ள ஒரே நன்மை இது மட்டுமே.
குறுஞ்செய்தியில் குறும்பு! தமிழக அரசு விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து விட்டு, தினமும் பத்து மணி நேர மின் தடையையும் அமல்படுத்தியுள்ளது. இதைக்கிண்டலடிக்கும் விதமாக, "முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன், தமிழ்நாடு' என்ற எஸ்.எம்.எஸ்., வேகமாகப் பரவி வருகிறது.
- எக்ஸ்.செல்வக்குமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக