செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

மு.க.அழகிரி:சுற்றி சுற்றி வருவேன்: யாரும் லீவு போட்டுவிட்டு போகக் கூடாது

சங்கரன் கோவில் இடைத்தேர்தலையொட்டி திமுக செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் வைஷ்ணவி மகாலில் இன்று (28.02.2012) காலை 10.30 மணிக்கு தொடங்கியது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதாஜீவன், முன்னாள் துணை சபாநாயகர் விபி.துரைசாமி இவர்களோடு முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், தலைமை நிலைய செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் என மண்டபம் நிறைந்த அந்தக் கூட்டத்தில், திமுக எம்பி தங்கவேல் உள்பட பலர் பேசினர். இவர்களில் கூட்டணிக் கட்சியில் உள்ள காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, நான் முன்பு இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டேன்.
இப்போது உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்கிறேன். ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மறுபக்கம் மிக்க மகிழ்ச்சி என்றவர், பேச்சின் இடையே இளம் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்றார்.மேலும் பேசிய அவர், இந்த மண்ணுக்கு ஒரு பெருமை உண்டு. எப்போதெல்லாம் ஆணவம், அராஜகம், அக்கிரமம் தலைவிரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் இங்கிருந்துதான் முதல் குரல் கிளம்பும். 1857ல் வெள்ளையனின் ஏகாதிபத்திபத்தியத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாமன்னன் பூலித்தேவன் இந்த மண்ணைச் சேர்ந்தவன் என்றார். இக்கூட்டத்தின் தலைவர் மு.க.அழகிரி பேச வந்தபோது, ஆரவாரத்துடன் கைதட்டல் கிளம்பயிது. பின்னர் அழகிரி பேசும்போது, இந்த இடைத்தேர்தலுக்காக ஆலோசனை வழங்க வந்த, என்னுடைய ஆருயிர் தம்பி ஸ்டாலின் அவர்களே, (கூட்டத்தில் ஆரவாரம் கிளம்பியது). அப்போது புன்சிரிப்போடு பீட்டர் அல்போன்ஸை திரும்பி பார்த்த அழகிரி, இளவரசரே என்று அழைத்தபோது மேடை களகளப்பானது. மேலும் பேசிய அழகிரி, உங்கள் தொண்டு ஊழியத்தில் உழைப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் இலவசத்தை கொடுக்கும்போது, இந்த அம்மா உங்களால் மின்சாரம் தரமுடியுமா என்று கேட்டார். நாங்கள் இலவசமாக மின்சாரத்தை கொடுத்தோம். ஆனால் இந்த அம்மா ஆட்சியில் மின்சாரமே இல்லை. பால் விலையை, பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு நான் ஜெயிப்பேன் என்று இறுமாப்புக்கொள்கிறார் இந்த அம்மா. அதற்கு பதிலடிதான் இந்த தேர்தல். திருமங்கலத்தில் ஜெயித்தோம். திருச்செந்தூரில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தோம். இங்கு 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்று சொன்னேன். ஜெயித்து காட்டுவோம். நான் தொகுதியை சுற்றி சுற்றி வருவேன். யாரும் என்னை ஏமாற்ற முடியாது. யாரும் லீவு போட்டுவிட்டு போகக் கூடாது. இந்த தேர்தல்தான், நமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். என்று தொண்டர்களுக்கு உற்சாகத்தை மூட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக