வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞரை அகற்ற தீவிரமாக முயன்ற பாஜக

சென்னை: சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் கட்சிப் பேச்சாளரைப் போன்று மறுப்பு தெரிவிப்பது சரியா என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் திடீரென பதவி விலகியதாக தகவல் வந்திருக்கிறதே?
பதில்: ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருபவர் தான் 78 வயதான பி.வி.ஆச்சார்யா. அவர் தான் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசினால் அட்வகேட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று; அட்வகேட் ஜெனரல் பதவியையும், அதே நேரத்தில் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார். அவர் திடீரென்று அட்வகேட் ஜெனரல் பதவியையே ராஜினாமா செய்ததாக செய்தி வந்துள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராகப் பணியாற்றி வரும் அரசு வழக்கறிஞரை அந்த பணியிலிருந்து அகற்றுவதற்காக கர்நாடக மாநில அரசும், பாஜகவும் எந்த அளவிற்கு செயல்பட்டன என்பதை மெய்ப்பிக்கும் அளவிற்கு ஆச்சார்யா அளித்துள்ள பேட்டி அமைந்துள்ளது.

கேள்வி: தமிழக சட்டப்பேரவை தலைவர் டி.ஜெயக்குமார் நீங்கள் அளித்த பேட்டி ஒன்றுக்கு கடுமையாக மறுப்பு தெரிவித்திருக்கிறாரே?

பதில்: பேரவை தலைவர் பதவி என்பது கண்ணியம் மிக்கது. கவுரவமானது. அனைவராலும் மதிக்கப்படக்கூடியது. அந்த வகையில் அந்தப் பதவியில் அவர் அமர்ந்திருப்பதால் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். 5-2-2012 அன்று இரவு அண்ணா அறிவாலயத்திலிருந்து நான் வீட்டிற்கு புறப்பட்டு வேனில் வந்து ஏறும்போது, அங்கே நின்றிருந்த இரண்டு மூன்று செய்தியாளர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சஸ்பெண்ட் செய்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்டார்கள். அந்த கேள்விக்கு நான் பதில் கூறும்போது கூட பேரவைத் தலைவர் பற்றி எதுவும் கூறவில்லை.

ஜனநாயகத்திற்கு புறம்பான காரியங்கள் மாத்திரமல்ல; ஜனநாயகத்தை உடைத்தெறியும் காரியங்கள், இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதற்கு ஒரு உதாரணம், விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும், அட்டூழியங்களும் என்று தான் நான் பதிலளித்து, அது ஏடுகளிலும் வெளிவந்திருக்கிறது.

இந்த பதிலில் நான் பேரவை தலைவரைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை குறிப்பிட்டிருக்கிறேனா என்பதை ஜனநாயகம் அறிந்தவர்கள் கூறட்டும்!. இந்த பதிலுக்காக பேரவைத் தலைவர் ஒருவர், ஒரு கட்சி பேச்சாளரைப் போல மறுப்பு தெரிவித்திருப்பது சரிதானா என்பதை அவரையே ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக