ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

ஜெயலலிதா விஜயகாந்த் மோதல் பின்னணி முற்றிலும் கோணலான முதல் கோணல்

தி.மு.க.,வும் அதன் ஆதரவு வட்டாரமும், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே ஆவலுடன் எதிர்பார்த்த, அ.தி.மு.க. - தே.மு.தி.க. உறவு விரிசல், சங்கரன்கோவில் இடைத் தேர்தல் விவகாரத்தில், முச்சந்தியில் வைத்து ஒரேயடியாக உடைக்கப்பட்டு விட்டது.

சட்டசபைத் தேர்தலில், அ.தி. மு.க., கூட்டணியில் தே.மு. தி.க., இடம் பெற்றது, அந்த கூட்டணிக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்தது. அதனால், அக் கூட்டணியை எப்படியும் உடைத்திட, அ.தி.மு.க.,வில் அதிகார மையமாக செயல்பட்ட ஒரு தரப்பும், தி.மு.க.,விலேயே உட்பகையை, ஊதி வளர்க்கும் ஒரு ஊடகத் தரப்பும் பெருமுயற்சி மேற்கொண்டன. சட்டசபைத் தேர்தலின் போதே, ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஒன்றாக சேர்ந்து பிரசாரம் செய்யட்டும் பார்க்கலாம்; அப்படி செய்தாலே அந்த கூட்டணி உடைந்துவிடும் என, தி.மு.க., தரப்பினர் வெளிப்படையாகவே மேடைகளில் பேசினார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்பு நடந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, இருவருமே ஒன்றாக சேர்ந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதை தவிர்த்து விட்டனர்.

இந்நிலையில், சட்டசபையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் நேருக்கு நேர் நடத்திய விவாதத்தின் மூலம், அ.தி.மு.க. - தே.மு.தி.க., இடையே இனி எப்போதும் கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது, திடீரென ஏற்பட்ட மோதல் அல்ல; சில ஆண்டுகளாக இருவர் உள்ளத்திலும் இருந்த மோதல்தான் இப்போது வெடித்து சிதறியுள்ளது என்கின்றர் அரசியல் நோக்கர்கள்.

அவர்கள் தொகுத்திடும் சம்பவங்கள்: நடிகர் விஜயகாந்த், முழுமையான அரசியல்வாதியாக முடிவெடுக்கும் வரை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக தன்னை காட்டிக் கொண்டார். முழு அரசியல்வாதி ஆகும் வரை, எம்.ஜி. ஆரை மறந்தும் புகழ்ந்தவரில்லை. அதே விஜயகாந்த், தனிக்கட்சி துவங்கிய பின், எம்.ஜி. ஆரின் பிரசார வாகனத்தை வைத்துக் கொண்டு, தன்னை கருப்பு எம்.ஜி.ஆர்., என விளம்பரப்படுத்திக் கொண்டார். தங்களின் அடிமடியிலேயே கையை வைக்கும் விஜயகாந்தின் இப்போக்கு அ.தி.மு.க. வுக்கு வெறுப்பை தந்தது. இது முதல் கோணலாகி கனற ஆரம்பித்தது. அடுத்தது, "நான், சுயமாக கட்சியை ஆரம்பித்திருக்கிறேன், கருணாநிதியும், ஜெயலலிதாவும் குடி புகுந்தவர்கள்' என, விஜயகாந்த் விமர்சிக்க, "குடி' உள்ளே புகுந்ததால் அப்படி பேசுகிறார் என கருணாநிதியும், சட்டசபைக்கே குடித்து விட்டு வருகிறார் என ஜெயலலிதாவும் அவருக்கு பதில் தந்தனர். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது.

கூட்டணியில் இருந்து தாங்கள் கழற்றி விடப்பட்டதால், கோபம் கொண்ட தே.மு. தி.க.,வினர், மேடை தோறும் முதல்வரை கடுமையாக விமர்சித்தனர்.முதல்வர், தே. மு.தி.க., குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், ஜெயலலிதா குறித்து, பிரேமலதா வரை செய்யப்பட்ட விமர்சனம், அ.தி. மு.க.,வினர் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் பதிலடி தர, முதல்வர் ஜெயலலிதா தருணம் பார்த்திருந்த நேரத்தில்தான், சட்டசபையில் நடந்த விவாதம், அ.தி.மு.க. - தே.மு.தி.க.,வினரிடையே நிரந்தர பிளவை ஏற்படுத்தும் முற்றும் கோணலாக அமைந்து விட்டது. இவ்வாறு கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

- வி. கோபாலகிருஷ்ணன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக