புதன், 1 பிப்ரவரி, 2012

ராமேஸ்வரம் கோயில் சுரண்டல்களை நேரடியாகக் கண்டு நொந்து

‘‘பசுவிடம் இருந்து பால் கறந்துகொள்ளுங்கள்... வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், பசுவின் மடியையே அறுக்கும் வேலையைச் செய்யாதீர்கள்...’’-
இப்படி ராமேஸ்வரம் கோயிலில் நிலவும் சுரண்டல்களை நேரடியாகக் கண்டு நொந்துபோய், கடந்தாண்டு தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார் மதுரை உயர் நீதிமன்ற நீதியரசர் சசிதரன்.
“உண்மைதான்...’’ என்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடக்கும் மோசடிகளை பட்டியலிட ஆரம்பித்தார் ‘திருக்கோயில் திருமணங்கள் பாதுகாப்பு அமைப்பின்’ மாநில இணை அமைப்பாளரான பக்ஷி சிவராஜன். இந்த அமைப்பு விஸ்வ ஹிந்த் பரிஷத்தின் ஒரு பிரிவு.

‘‘வடநாட்டு யாத்திரீகர்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்து இங்கு பக்தியோடு வருகிறார்கள். அதேபோல் இங்குள்ள பக்தர்கள் காசிக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பக்தர்களை அதிகப்படியாகவே ஏமாற்றுகிறது சுற்றுலாத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் கோயிலின் நிர்வாகம். ராமநாதசுவாமியின் அருள் கிடைக்கிறதோ இல் லையோ, இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கும் பக்தர்களுக்கு அவஸ்தை மட்டும் கண்டிப்பாகக் கிடைக்கிறது.

வடநாட்டையும், தென்நாட்டையும் ஒன்றிணைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுச் சின்னமாக ராமேஸ்வரம் கோயிலையும், அதைச் சுற்றி வெளியில் இருக்கும் 64 தீர்த்தங்களுக்குச் செலவிடுவதற்காகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடி ரூபாய் நிதி வந்தது. ஆனால், பக்தர்கள் அறிந்துகொள்ள போர்டு வைக்கிறோம் எனச் சொல்லிவிட்டு ஒரு போர்டுக்கு 4 லட்ச ரூபாய் செலவு என 20 போர்டுகளை வைத்து பணத்தைச் சுருட்டினார்கள். ரோடு போடுவது, 10 அடிக்கு விளக்கு வைப்பது என அந்தக் கோடிகள் போன இடம்தான் தெரியவில்லை. மேலும், சுற்றுலா வளர்ச்சி நிதியாக வந்த ஒரு கோடியே 51 லட்சத்தையும் ஓலைக்குடா பூங்கா, கடலோர பாதை போடுவது எனச் சொல்லி சுருட்டிவிட்டனர். மறுமுறை நிதி வந்தபோது, இதேபோல், 83 லட்ச ரூபாய்க்குக் கணக்குக் காட்டியுள்ளனர். இதனால் எரிச்சலான கலெக்டர், நிதியை ரத்து செய்து உத்தரவிட்டார். இவை அனைத்திற்கும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலை வாங்கியிருக்கிறேன்.

இதைவிடக் கொடுமை, வடநாட்டு பக்தர்கள் மிகவும் விரும்புவது சீதா, லட்சுமண, ராமர் தீர்த்தங்களைத்தான். அதுவும் சீதா தீர்த்தத்திற்கு அதிகப்படியான கூட்டம் வரும். இந்த தீர்த்தங்களை வாளியில் வாரிக் கொடுப்பதற்கு ஒவ்வொரு பக்தர்களிடமும் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பிடுங்குகிறார்கள். ஆனால், இவர்கள் காட்டும் சீதா தீர்த்தம் செயற்கையாக உருவாக்கப்பட்டது. உண்மையான தீர்த்தம் தங்கச்சி மடத்தில் இருக்கிறது. பணம் பிடுங்க வசதியாக புதிய தீர்த்தத்தை உருவாக்கிவிட்டார்கள். இதைப்பற்றி பலமுறை எடுத்துச் சொல்லியும் சீதா தீர்த்தம் என்ற போர்டை அகற்றவில்லை.

அதேபோல், கோயிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் வேலைபார்க்கும் 450 பேரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந் தவர்கள். தீர்த்தம் வாங்க 25 ரூபாய் டிக்கெட் கட்டணம். இதில், 12 ரூபாய் கோயிலுக்கும், 12 ரூபாய் ஊற்றுபவருக்கும், ஒரு ரூபாய் நகராட்சிக்கும் செல்கிறது. ஆனால், தீர்த்தத்தை வாரி ஊற்றுவதில் 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பக்தர்களிடம் இருந்து பிடுங்குகிறார்கள். அதேபோல், பாரம்பரிய நகர மேம்பாட்டுக்காக 2008-ம் ஆண்டு 138 லட்ச ரூபாய் வந்தது. இந்த நிதியை முறையாகச் செலவிடாமல், பழையபடியே கடற்கரையில் பாதையோர சாலை போடுவது, ஓலைக்குடா பூங்கா சீரமைப்பு என 90 லட்ச ரூபாய் கணக்குக் காட்டி ஸ்வாகா செய்துவிட்டார்கள். கடந்த ஆண்டு ஒரு சாதாரண பக்தராக ராமநாதசுவாமியை தரிசிக்க வந்தார் உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன். அவரிடம் நடத்தப்பட்ட வசூல் வேட்டையைப் பார்த்து நொந்துபோய் உயர் நீதிமன்றப் பதிவாளர் விஜயனை அனுப்பி விசாரணை நடத்தச் செய்தார்.

பின்னர் தன்னிச்சையாக வழக்கை விசாரித்து கோயிலைச் சீர்படுத்துமாறு இந்து அறநிலையத் துறைக்கு ஆணை பிறப்பித்தார். இவரது உத்தரவை இன்றுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கோயிலின் ஆண்டு வருமானம் 25 கோடி ரூபாய். அதில், சிறு பகுதியையாவது கோயிலின் நன்மைக்காக செலவிட அதிகாரிகளுக்கு மனம் வருவதில்லை. கணக்குகளையும் சரியாகப் பராமரிப்பதில்லை.
கடற்கரையில் உள்ள அக்னி தீர்த்தத்தில் டேராடொங் பாபா என்ற ராஜஸ்தான் சாமியார் விதிமுறையை மீறி மிகப்பெரிய ‘ஆர்ச்’ ஒன்றைக் கட்டியுள்ளார். இதை இடிக்கச் சொல்லி கலெக்டர், நகராட்சி நிர்வாகம், இந்து அறநிலையத் துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. ராமேஸ்வரம் கோயிலில் காசுதான் கடவுளாக இருக்கிறது’’ என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போனார்.
ராமேஸ்வரம் கோயில் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கோயிலின் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் விளக்கம் கேட்டோம்.

“ஊழியர்களுக்கு முறையான யூனிஃபார்ம் கொடுத்து, சரியாக நடக்கின்றார்களா என கேமரா மூலம் கண்காணிக்கிறோம். முன்பெல்லாம் சரியான கழிப்பிட வசதிகூட இல்லாமல் இருந்தது. நான் வந்தபிறகு எல்லாவற்றையும் சரி செய்துவி ட்டேன். சீதா தீர்த்தம் பற்றி எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி விசாரிக்கிறேன். டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. மற்றபடி, சுற்றுலாத்துறை நிதி பயன்படுத்தப்பட்ட விதம்பற்றித் தெரியவில்லை. ராமநாதசுவாமி சொல்லும் வழியில்தான் நாங்கள் பயணம் செய்கிறோம்’’ என்றார்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைச்சர் ஆனந்தனிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு கோயிலாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். ராமேஸ்வரம் கோயிலுக்கு ஆய்வுக்குச் செல்லும் போது புகார்கள் குறித்து விசாரித்து, முத ல்வரின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் உறுதியாக.

thanks kumudam + senthil sarma barabados

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக