திங்கள், 6 பிப்ரவரி, 2012

2G உயர் கமிட்டி மீது மாதவன் நாயர் பாய்ச்சல்

புதுடில்லி: இஸ்ரோவின் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், மாதவன் நாயர் உட்பட நான்கு மூத்த விஞ்ஞானிகள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், "மத்திய அரசு உயர்மட்ட குழுவின் அறிக்கை நியாயமானதல்ல; கோழைத்தனமானது' என, மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) வர்த்தக அங்கமான ஆன்டிரிக்ஸ் நிறுவனம், தன்னிடம் உள்ள இரு செயற்கைக் கோள்களின் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை, தேவாஸ் மல்டி மீடியாவுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்தது. இந்த ஒப்பந்தம், 2005ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி கையெழுத்தானது.
அப்போது, இஸ்ரோவின் தலைவராக மாதவன் நாயர் பதவி வகித்தார்.

ஒப்பந்தம் ரத்து:ஆனால், இதை விட குறைவாக, அதாவது 20 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகள், பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய தொலைபேசி நிறுவனங்களுக்கு, 12 ஆயிரத்து 847 கோடி ரூபாய்க்கு, இதே நிறுவனம் ஒதுக்கீடு செய்தது. இதனால், தேவாஸ் நிறுவனத்திற்கு இஸ்ரோ ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேட்டால், அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, கணக்கு தணிக்கை குழுவும் கூறியது. இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, தேவாஸ் நிறுவனத்துடன் இஸ்ரோ செய்து கொண்ட ஒப்பந்தத்தை, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்தது.அத்துடன், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இந்நிறுவன முன்னாள் அறிவியல் துறைச் செயலர் பாஸ்கர நாராயணா, ஆன்டிரிக்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குனர் கே.என்.சங்கரா ஆகியோர், வருங்காலத்தில் அரசு பதவியையோ, குழு, கமிட்டி போன்ற எந்த அமைப்பு பதவியையோ வகிக்க, மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் இடையேயான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு குறித்து ஆராய, சதுர்வேதி என்பவர் தலைமையில் மறு ஆய்வு கமிட்டி ஒன்றை, மத்திய அரசு நியமித்தது. அத்துடன், விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் பிரத்யுஷ் சின்கா தலைமையில், ஐந்து பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டி ஒன்றையும், கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது.

இந்த இரண்டு கமிட்டிகளின் அறிக்கைகள், நேற்று முன்தினம் இரவு இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதில், பிரத்யுஷ் சின்கா தலைமையிலான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விசாரணை தேவை:"ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கு இடையே நடந்த ஒப்பந்தம் வெளிப்படையானதாக அமையவில்லை. நிர்வாக மற்றும் நடைமுறை குளறுபடி மட்டுமல்லாது, இரு நிறுவனங்களுக்கிடையே ரகசிய உடன்படிக்கையும் நடந்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து, விண்வெளி கமிஷனுக்கும், மத்திய அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மாதவன் நாயர், ஸ்ரீதரமூர்த்தி, சங்கரா, பாஸ்கர நாராயணா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அளித்துள்ள கமிட்டியில், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனும் இடம் பெற்றுள்ளார்.

சாதகமான பகுதியை மட்டும் வெளியிட்டது ஏன்?உயர்மட்ட கமிட்டியின் அறிக்கை பற்றி மாதவன் நாயர் கூறியதாவது:பிரத்யுஷ் சின்கா தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கை, குழு உறுப்பினர்களுக்கிடையே ஒத்த கருத்து ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது. தவறு நடந்திருப்பதாகக் கூறும் குழுவினர், ஒப்பந்தம் நடந்த விவரத்தை முழுமையாக வெளியிட வேண்டியது தானே. உங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் அறிக்கையில் வெளியிட்டுள்ளீர்கள். இந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள ஓரிரு நபர்களின் உணர்வுகள் தான் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளன. ஒப்பந்தம் குறித்த கோப்புகளை கையாண்ட, நிர்வாகத்தில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களே அறிக்கையில் வரவில்லை. இது ஓடி ஒளிந்து கொள்ளும் ஆட்டம் போல உள்ளது. சொல்லப்போனால் இஸ்ரோ தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் கோழைத்தனத்தையே இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஏதோ ரகசிய பேரம் நடந்துள்ளதாகக் கூறுபவர்கள், ஒப்பந்தம் குறித்த அனைத்து விஷயங்களையும், பொதுமக்கள் முன்னிலையில் வைக்கட்டும்.சதுர்வேதி தலைமையிலான கமிட்டி அனைத்தையும் தெளிவுபடுத்தி விட்ட நிலையில், தற்போதைய பிரத்யுஷ் கமிட்டி அறிக்கை தெளிவில்லாமலும், நியாயமில்லாமலும் உள்ளது.இவ்வாறு மாதவன் நாயர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக