புதன், 1 பிப்ரவரி, 2012

2வதும் பெண்ணா? மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்


காபூல்: ஆப்கானிஸ்தானில் இரண்டாவதும் பெண்ணாய் பெற்றதற்காக மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் குன்துஸ் மாகாணத்தில் உள்ள கானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. அவரது மனைவி எஸ்டோரை(22). அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஷேர் முகமது பெரும் ஏமாற்றம் அடைந்தார்.இரண்டாவதும் பெண்ணாய் பிறந்ததை தாங்க முடியாத அவர் கடந்த வாரம் தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தற்செயலாக அவரது வீட்டுக்கு சென்ற பக்கத்து வீட்டுக்காரர் எஸ்டோரை பிணமாகக் கிடந்ததைப் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எஸ்டோரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த ஷேர் முகமதுவின் தாயைக் கைது செய்தனர்.

தனது மருமகள் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவர் விசாரணையில் தெரிவி்ததார். ஆனால் சம்பவ இடத்தில் கயிறும் இல்லை, அந்த பெண்ணின் உடலில் தூக்குப் போட்டதற்கான அடையாளமும் இல்லை.

இது குறித்து மாகாண பெண்கள் விவகார தலைவர் நாதிரா கியா கூறுகையில், அடுத்தும் பெண்ணாய் பிறந்தால் தன்னை கொன்றுவிடுவேன் என்று தனது கணவர் மிரட்டுவதாக எஸ்டோரை தனது தாய் வீட்டாரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்றார்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஷேர் முகமதை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக