சனி, 4 பிப்ரவரி, 2012

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்க தயாநிதியே காரணம்:BJP

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கு, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதியே மிக முக்கிய காரணம். இந்தியாவின் மிகப்பெரிய "2ஜி' ஊழலுக்கு காரணமான, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., அவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என, தெரியவில்லை என்று, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், முரளி மனோகர் ஜோஷி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடைமுறையில் மாற்றம்: மத்திய அரசில் எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சரவை கூடித்தான் எடுக்கும். இந்த நடைமுறையைத்தான், எல்லா அரசுகளும் கடைப்பிடித்தன. ஆனால், முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தொலைத் தொடர்பு அமைச்சராக பதவி வகித்த தயாநிதி, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினார். "அமைச்சகம் சார்ந்த கொள்கை முடிவுகளை, அந்த துறையின் அமைச்சர் தான் எடுக்கவேண்டும். அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் நடைமுறையை மாற்றவேண்டும்' என்று தெரிவித்தார். தயாநிதியின் இந்தக் கோரிக்கையை, பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்றுகொண்டார்.

மிகப்பெரிய ஊழல்: அதன்படிதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதி முடிவுகளையும் எடுத்தார். அவருக்கு பின் தொலைத் தொடர்பு அமைச்சராக ராஜா பொறுப்பேற்றார். அவரும் அவ்வாறே செய்தார். மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என, தயாநிதி வலியுறுத்திய காரணத்தினால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. எனவே, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவும் இதையே பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு ஜோஷி கூறினார். அப்போது பத்திரிகையாளர்கள், "தயாநிதி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு ஜோஷி, "அவர் மீது சி.பி.ஐ., எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. இதுபற்றி சி.பி.ஐ., யிடம்தான் கேட்கவேண்டும்' என்றார்.

- நமது டில்லி நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக