ஞாயிறு, 15 ஜனவரி, 2012

Cho:ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஆதரவளிக்கவேண்டும்

சோ : ‘மோடியாக ஆசைப்படுகிறார் ஜெயலலிதா!’


தமிழ் பேப்பர் வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நான் கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவரும் காரியங்களுள் ஒன்று துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வது. காரியம் என்று சொன்னதை யாரும் தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது. நேற்று (14 ஜனவரி 2012) நடந்த 42வது ஆண்டு விழாவில் கூடுதல் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டேன். காரணம், விழா நடந்த இடம், வள்ளுவர் கோட்டம்.
ஆறரை மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் மூன்றரை மணிக்கெல்லாம் நியூஸ் சேனல்களில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடத் தொடங்கிவிட்டது. அத்வானியும் மோடியும் சென்னை வந்துள்ளனர்; சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பதாக. அடித்துப் பிடித்து வள்ளுவர் கோட்டத்தைத் தொட்டபோது மணி ஐந்தரை. தேசிய பிரமுகர்கள் வந்திருந்ததால் எக்கச்சக்க பாதுகாப்புக் கெடுபிடிகள். உள்ளே நுழைந்தபோது வள்ளுவர் கோட்டம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.
துக்ளக் சோ, மியூசிக் அகாடமியில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். காமராஜர் அரங்கத்தில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல்.
வள்ளுவர் கோட்டத்தில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். அடுத்த ஆண்டு நேரு ஸ்டேடியத்துக்குத்தான் போகவேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல விஷயம். நிறைய மெகா ஸ்க்ரீன் டிவிக்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆடிட்டோரியத்தில் இடம் கிடைக்காதவர்கள் காரிடார் உள்ளிட்ட கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து கொண்டனர்.
வாசகர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி. முதலில் கேள்வி கேட்டவர் மைலாப்பூரில் இருந்து கல்பனா. எடுத்த எடுப்பிலேயே பெண் வாசகரா என்று தனக்கேயுரிய பாணியில் அலுத்துக்கொண்டார் சோ. முக்கியமாக, ஜெயலலிதா பற்றி நக்கீரனில் வெளியான செய்தி பற்றிக் கேட்டார் ஒரு வாசகர். நக்கீரனில் அப்படித்தான் செய்தி போடுவார்கள்; அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், அந்தச் செய்தியை ஹிந்து பத்திரிகை எடுத்து முதல் பக்கத்தில் போட்டது தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகச் சொன்னார் சோ. நக்கீரனில் படிக்காதவர்கள் எல்லாம் ஹிந்துவில் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்துகொண்டார்கள். நக்கீரனில் வெளியானதை அழகாக மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் நக்கீரன் அளவுக்கு ஹிந்து தரம் தாழ்ந்து செயல்பட்டிருக்கவேண்டாம் என்று ஆதங்கப்பட்டார் சோ.
மன்மோகன் சிங்கையும் கபில் சிபலையும் வார்த்தைகளால் வதம் செய்துகொண்டிருந்தார் சோ. ஸ்பெக்ட்ரம் விஷயத்துல எதுவுமே நடக்கல..ராஜா மேல எனக்கு கான்ஃபிடன்ஸ் இருக்குன்னார் மன்மோகன் சிங். என்ன ஆச்சு? திஹார்ல இருக்கார் ராஜா. அடுத்து, சிதம்பரம் மேல தப்பே இல்லன்றார் இப்போ. அடுத்து அவருக்கு என்ன ஆகப்போகுதுன்னு தெரியல. மன்மோகனை விடுங்க. இந்த கபில்சிபல் இருக்காரே.. அடேயப்பா.. எதை எடுத்தாலும் இல்ல.. இல்லங்கறார். ஸ்பெக்ட்ரத்துல இழப்பா.. இல்லவே இல்லன்னார். காமன்வெல்த் ஊழல்லயும் இல்ல.. இல்லன்னார். இப்போ சிதம்பரம் விஷயத்துலயும் அதையேத்தான் செய்றார். இது எந்த அளவுக்கு போயிடுச்சுன்னா, யாரோ சிலர் சிதம்பரம் தீட்சிதர்கள்னு சொல்லிட்டு பிரசாதம் கொடுக்கப் போயிருக்காங்க..இவரு வழக்கம்போல சிதம்பரம்லாம் இல்ல இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார்.
மேடையில் அத்வானி, மோடி என்ற பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்பட்டன. குறிப்பாக, மோடியின் பெயருக்கு வந்த கைத்தட்டல்கள் அதிரடி ரகம். அத்வானி நாட்டின் மிகப்பெரிய தலைவர் என்றும் மோடி அவருடைய லெஃப்டினண்ட் என்றும் வர்ணித்தார் சோ. மோடி போன்ற செயல்திறன் மிக்க ஒரு தலைவரை நாம் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது மாபெரும் முட்டாள்தனம் என்றார். ரஞ்சி டிராஃபியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேசிய அணியில் இடம்பெறச் செய்வதுதான் புத்திசாலித்தனம். குஜராத்தில் சிறப்பாக செயல்படும் மோடியை தேசிய அரசியலுக்குக் கொண்டுவருவது புத்திசாலித்தனம் என்றார்.
அத்வானியை அண்ணாதுரையுடன் ஒப்பிட்டுப் பேசினார் சோ. கட்சிக்குள் திறமையுள்ள பல தலைவர்களை வளர்த்துவிட்டவர் அண்ணாதுரை. அவர்களுடைய முன்னேற்றம் தன்னை பாதிக்கும் என்று அவர் எப்போதுமே நினைத்ததில்லை. அந்த அளவுக்கு தன்னம்பிக்கை பெற்றவராக இருந்தார் அண்ணாதுரை. அவரைப் போலவே அத்வானியும் தன்னம்பிக்கை நிரம்பியவர். வாஜ்பாயைப் பிரதமராக முன்மொழிந்தவரே அத்வானிதான். மோடிக்கும் வழிகாட்டவேண்டியவர் அத்வானிதான் என்றார் சோ. அர்த்தம் புரிந்து ரசித்தனர் துக்ளக் வாசகர்கள்.
அன்னா ஹஸாரேவை வெளுத்துவாங்கினார் சோ. உண்ணாவிரதம் இருக்கிறேன் என்கிறார்; முடித்துவிட்டேன் என்கிறார்; உடம்பு சரியில்லை என்கிறார்; காங்கிரசை எதிர்த்துப் பிரசாரம் செய்வேன் என்கிறார்; பிறகு இல்லை என்கிறார். படுகுழப்பமான ஆசாமியாக இருக்கிறார். போதாக்குறைக்கு, கிரண் பேடி. ஒரு கொடியை வைத்துக்கொண்டு மேடைக்கு மேடை ஆட்டிக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட் மேட்சில் சியர் லீடர்ஸ் ஆட்டுகிறார்களே, அதைபோல என்றபோது கோட்டம் குதூகலித்தது.

அத்வானியைப் புகழ்ந்தது போலவே மோடியையும் புகழ்ந்தார் சோ. மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றிப் பேசினார். மோடி போல சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க ஜெயலலிதா ஆசைப்படுகிறார். தவறில்லை. ஆனால் அதற்கு இப்போது இருப்பது போல அல்லாமல் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும். அப்போதுதான் மோடியுடன் போட்டி போடமுடியும் என்றார்.
அத்வானி புகழ்ந்தாயிற்று. மோடியை மெச்சியாயிற்று. கருணாநிதியைத் திட்டியாயிற்று. அடுத்து, ஜெயலலிதாவைப் பாராட்டியாக வேண்டும். ஆரம்பித்தார். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து நீக்கிய செயலைப் பாராட்டினார். அந்தக் காரியத்தைச் செய்ததில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலையும் நேர்த்தியையும் சிலாகித்தார். தவறு நடக்கிறது என்று தெரிந்தால் எத்தனை துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கிறார் ஜெயலலிதா என்பதற்கு இதுதான் சரியான உதாரணம் என்றார். ஜெயலலிதா தற்போது பெற்றுவரும் வெற்றி எம்.ஜி.ஆரால் கூட பெறமுடியாத வெற்றி என்றார்.
அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிக்குத்தான் அதிக பங்களிப்பு இருக்கப்போகிறது என்றார் சோ. அந்த அளவுக்கு வலிமையுள்ள கட்சி அதிமுக மட்டுமே என்பதையும் சொல்லத் தவறவில்லை. ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பு அது இது என்று சொல்லி மோடி பிரதமராக முடியாத பட்சத்தில் பாஜக ஆதரவு பெற்ற அமைச்சரவை அமைக்கும் சூழ்நிலை உருவாகுமானால் ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஆதரவளிக்கவேண்டும் என்றார். ஆண்டுவிழாவின் அர்த்தம் அரங்கேறியது. துக்ளக் வாசகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.
மன்மோகன் சிங் வீக்கான பிரதமர்னு அத்வானி சொல்லிட்டார். அவ்ளோதான். இந்த மனுஷன் எல்லா மேடைலயும் அதையே பேசறார். “என்னை அத்வானி வீக்கானவர்னு சொல்லிட்டார்… அதுல எனக்கு வருத்தம்’னு சொல்றார். யாரோ ஒருத்தர் கேட்டாங்க..தேவே கௌடாவை விடவா இவர் வீக்கானவர்னு.. ஆமாங்க.. அவராவது தூங்கணும்னு நினைச்சா தைரியமா தூங்கிடுவார். ஆனா இவர் அப்படி இல்லயே என்றார் சோ.
விழாவில் அத்வானியும் மோடியும் பேசினார்கள். கடந்தமுறை வெடிகுண்டு ஆபத்தில் இருந்து காப்பாற்றியமைக்கு ஜெயலலிதாவுக்கு நன்றி கூறினார் அத்வானி. அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி இயற்கையான கூட்டணி என்றார் அத்வானி. கொம்புத் தேனுக்கு யாரும் ஆசைப்படலாம்! துக்ளக் சோவை ஒன் மேன் க்ருசேடர் என்று வர்ணித்தார் அத்வானி. அதாவது, நான் தனி ஆளாம், எனக்குப் பின்னால யாருமே இல்லயாம்.. அதைத்தான் சொல்றார் அத்வானி என்றார் குறுக்கிட்டுப் பேசிய சோ.
மோடி பேசும்போது பல தமிழ் வார்த்தைகள் வந்தன. திருக்குறள் ஒன்றையும் சொன்னார். ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கொடுப்பதில் தமிழக வாக்காளர்கள் திறமையானவர்கள் என்று சொன்னார் மோடி. பரவாயில்லை. 1996 மற்றும் 2006 தமிழக தேர்தல் முடிவுகளை நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார் நரேந்திர மோடி. ஆச்சரியம்தான்!
0
ஆர். முத்துக்குமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக