புதன், 18 ஜனவரி, 2012

உடன் வர மக்கள் படையுண்டு, முடிவெடு தலைவா!'-நடராஜன் நடத்திய விழா


தஞ்சாவூர்: சென்னையில் சங்கமம் விழா நடத்தியவர்கள் எல்லாம் (திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர்) திகார் சிறையில் சங்கமமாகும் நிலையில் உள்ளனர். அந்த நிலை நமக்கு வராது. நான் வரவும் விடமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் கூறினார்.
நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் விரட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் இந்த விழா நடந்தது.விழாவில் மதுரை ஆதீனம் ,மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ண மோகன், கார்கில் போரில் ஈடுபட்ட கேப்டன் அருண் சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் நடராஜன் பேசுகையில், மகிழ்ச்சியோடு வாழ மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு உலகத்தில் வாழ்ந்தால் துன்பமே இருக்காது என்று பாரதிதாசன் தன் கவிதையில் சொல்லியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழர் கலை இலக்கிய விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடக்குமா நடக்காதா என்று பலர் நினைத்தனர்.

நான் இல்லையென்றாலும் எனக்குப் பின்னாலும் இந்த விழா தொடர்ந்து நடக்கும் அளவுக்கு அறக்கட்டளையைப் பலப்படுத்தியுள்ளேன் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் சங்கமம் விழா நடத்தியவர்கள் எல்லாம் திகார் சிறையில் சங்கமமாகும் நிலையில் உள்ளனர். அந்த நிலை நமக்கு வராது. நான் வரவும் விடமாட்டேன். தஞ்சை மக்கள், தமிழ் மக்கள் வளர்ச்சிக்கு என் உயிருள்ள வரை என்றென்றும் பாடுபடுவேன் என்றார்.

தொடர்ந்து பேசிய நடராஜன், பொங்கல் விழாவுக்கு தமிழ் மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல கொல்கத்தாவிலிருந்து பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ண மோகனும், கார்கில் போரில் போரிட்ட கேப்டன் அருண் சக்கரவர்த்தியும் இங்கே வந்துள்ளனர். நீங்க நினைக்கும் கேப்டன் இவர் அல்ல. இவர் உண்மையான கேப்டன் என்று விஜயகாந்தை மறைமுகமாக வாரினார்.

இந்த விழாவைக் கண்காணிக்க ஏராளமான உளவுப் பிரிவு போலீசாரும் வேட்டி சட்டைகளில் உலா வந்தனர்.

விழாவுக்காக தஞ்சை நகர் முழுவதும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 'பட்டம் இல்லாத பேரரசனே', 'மிக்க துணிவு உண்டு. இளைஞர்கள் பக்கத் துணையுண்டு. உடன் வர மக்கள் படையுண்டு, முடிவெடு தலைவா!' ஆகிய வாசகங்கள் கொண்ட பேனர்களும் அடக்கம்.

மேலும், மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை திமுக தலைவர் கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், யார் ஏசினாலும், தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும் என்று நடராஜன் பேசியதாகவும் தகவல்கள் வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக