ஞாயிறு, 22 ஜனவரி, 2012

வன்னியர்கள் அதிகாரிகளாக வலம் வர திராவிட இயக்கமே காரணம்

"வன்னியர்கள் கலெக்டராக, பேராசிரியர்களாக வலம் வர, திராவிட இயக்கம் தான் காரணம்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பா.ம.க., மாநில துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:பா.ம.க.,வுடன், கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க., தோழமையோடு இருந்துள்ளது. இடையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து நிற்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என் இயக்கத்தையே இழித்துப் பேசியுள்ளார். என்னுடைய தலைவர்களை இழிவுபடுத்தினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் சமூகத்தை உருவாக்கிய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தினால், நான் என்ன செய்வேன்.இதற்காக, நான் பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருக்கிறேன்.
ஆனால், இன்று அதிலிருந்து மீண்டுவிட்டதாகக் கருதுகிறேன். திராவிட இயக்கத்தினால் தான் இன்று, வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் பொறியாளர்களாக, பேராசிரியர்களாக, கலெக்டர்களாக, போலீஸ் அதிகாரிகளாக வலம் வருகின்றனர். இதை, இதுவரை உணராதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உணர்த்தும்.

திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை கைதூக்க ஆள் இல்லாமல் போயிருக்கும். திராவிட இயக்கம் தான், தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது; தமிழறிஞர்கள் கண்ட கனவை நனவாக்கியுள்ளது. இன்று நடக்கும் அ.தி.மு.க., ஆட்சியில் செம்மொழி என்று சொன்னால், "செந்தீ' பட்டது போல் துரத்துகின்றனர்.சென்னையில், செம்மொழி பூங்காவை உருவாக்கினோம். ஆனால், பூங்காவுக்கு செம்மொழி என்ற பெயரை அகற்றிவிட்டனர். செம்மொழி பூங்கா என்ற பெயரை அகற்றி விட்டால், செம்மொழியை ஒழித்து விட முடியாது. தமிழ் மொழியை ஒழிக்க எத்தனையோ பேர் முயற்சித்தனர். அத்தனை பேரையும் தமிழ் மொழி வென்றுவிட்டது.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

நிகழ்ச்சியில், பா.ம.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர், தி.மு.க.,வில் இணைந்தனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக